சமகால அமெரிக்க கவிதைகள் (9) - தமிழில் ஆர்.அபிலாஷ்

பிறவா குழந்தைகள்
-    ஷேரன் ஓல்ட்ஸ்



சிலநேரங்களில் என்னால் கிட்டத்தட்ட பார்க்க முடியும்
கோடையில் தெருவிளக்குகளை சுற்றி பூச்சிகள் போல
நம் தலைகளைச் சுற்றி
நமக்கு பிறக்கக் கூடிய குழந்தைகளை,
அவற்றின் மங்கலான ஜுவலிப்பை.

சிலநேரம் அவர்கள்
ஏதோ ஒரு முன்கூடத்தில் தூங்கி விழுந்தபடி
காத்திருப்பதைப் போல் உணர்கிறேன் – மணி அழைப்புக்காய் பாதி கவனத்திருக்கும் வேலைக்காரர்கள்

சிலநேரம் அவர்கள் “இறந்த கடிதங்களின் அலுவலகத்தில்”
காதல் கடிதங்கள் போல் கிடப்பதாய் காண்கிறேன்

இன்று போல் ஒர் இரவில்
ஏதோ ஒரு இருண்ட இரண்டாம் புலப்படுதலில்
அவர்களில் ஒன்றை சற்றே உணர்கிறேன்
கடல் அருகே ஒரு மலை விளிம்பில்
இருட்டில் நின்றபடி எனக்காய்

அவநம்பிக்கையின் உக்கிரத்தில் கைகளை நீட்டுவதை