ஒரு மரணத்துக்கு பிறகு -
- ரூ
போர்சன்
வேறு வழியில்லை
என்றாகிய பின்
அவனது இன்மையை ஒரு நாற்காலியாக
மாற்றுகிறேன்
அதில் நான் உட்காரலாம்,
ஜன்னல் வழி வேடிக்கை பார்க்கலாம்.
எனக்கு நன்றாக வருகிறதை செய்யலாம்.
பிறகு வெளியே கிளம்பி செல்லலாம்.
பிறகு நான் என வீணான காதலுடன் திரும்பலாம்,
ஓய்வெடுக்க,
நாற்காலி தான் எங்கும் போகாதே என.
பேச்சு -
- ரூ போர்சன்
கடைகள், தெருக்கள் முழுக்க தாத்தாக்கள்
இனி என்ன சொல்ல என யோசித்தபடி.
சிலநேரம், ஒரு பெண்ணைப் பார்த்தால்,
அவர்களுக்கு அந்த எண்ணம் வரும்
ஆனால் அவர்களால் தான் யாரையும் சுகிக்க
முடியாதே,
அவர்கள் அதை நோக்கி பனிமூட்டம் வழி தம்
பூனைப்பாதங்களால் முன்னேறுகிறார்கள்.
இளைஞர்கள் பரஸ்பரம் தோள்களை உரசி கடக்கிறார்கள்
இரு கூறாய் நின்று சொற்களை பற்றி இழுத்து போட்டியிட்டபடி.
பேச்சு அவர்களை கிளர்ச்சியடைய செய்கிறது, ஆபத்து இன்னும் புலப்படுகிறது
அவர்களுக்கு.
வயதான பெண்கள், சொற்களில் கஞ்சத்தனம் காட்டுபவர்கள்,
ஆரஞ்சுகளுக்காய பேரம் பேசுகிற போது,
வாய்கள் காற்றில் தொங்கும் சொற்களை கவ்வ பார்க்கின்றன.
அவர்களுக்கு ஆரஞ்சுகளின் மதிப்பு தெரியும்.
எல்லாவற்றையும் அவர்கள் கற்க வேண்டியிருந்தது
தாமாகவே.
இளம்பெண்கள் தாம் இருப்பதிலேயே மோசம்,
யாரும் அவர்களுக்கு கற்றுத்தர வில்லை.
அவர்கள் முகங்களின் ஊடாய் மனங்கள் தெரியும்
புயலடிப்பதற்கு முன்பான சிறு ஏரிகளைப் போன்றவர்கள்.
தமது சோகம் குழப்பத்தினால் வருகிறது என அறிய மாட்டார்கள்.
சொல்லப் போனால் இது ஒரு அதிர்ஷமும் தான்,
இளைஞர்கள் இக்குழப்பத்தை திருத்தமுடியாத குணம் என நம்பி விடுகிறார்கள்
இது அவர்களுக்கு கிளர்ச்சியூட்டுகிறது, இது போல்
தமக்கு புரியாத ஒரு முகத்தை சொந்தமாக்கி
ஓய்வு கிடைக்கும் போது பழுது பார்க்கலாமே
என ஆசைப்படுகிறார்கள்.