சமகால அமெரிக்க கவிதைகள் (7)

நிர்வாண பெண் மாடலாக நிற்பது
-    - கேரல் ஆன் டப்பி
-    - தமிழில் ஆர்.அபிலாஷ்

ஆறு மணிநேரம் இது போல் சில பிராங்குகளுக்காக.
வயிறு முலைக்கணு பின்புறம் ஜன்னல் வெளிச்சத்தில்,
அவன் என்னில் இருந்து நிறத்தை வடிக்கிறான். இன்னும் கொஞ்சம்
வலப்பக்கம், மேடம். அப்புறம் அசையாதீங்க.
நான் பகுப்புமுறையில் வடிவம் தரப்பெற்று பெரும்
அருங்காட்சியகங்களில் தொங்க விடப்படுவேன்.
நதி துறைமுக தேவடியாளின் பிம்பம் கண்டு
பூர்ஷுவாக்கள் வியந்து கூவுவார்கள்.
அவர்களை அதை கலை என்பார்கள். ஒருவேளை இருக்கலாம். அவனது அக்கறை எல்லாம் கன அளவு, வெளி.
எனதோ அடுத்த வேளை சாப்பாடு. மெலிந்து கொண்டு வர்றீங்க,
மேடம், இது நல்லதில்ல. என் முலைகள்
சற்று தாழ்வாய் தொங்குகின்றன, கலைக்கூடம் குளிர்கிறது.
தேயிலைகளில் இங்கிலாந்து ராணி என் வளைவுகளை
பார்வையிடுவது தெரிகிறது. பிரமாதம், அவள் முணுமுணுக்கிறாள்,
நடந்தபடி. எனக்கு சிரிப்பு வருகிறது. இவன் பெயர் ஜார்ஜஸ். இவனை ஒரு மேதை என்கிறாரகள்.
சிலவேளைகளில் அவன் கவனம் சிதறுகிறான்
என் வெதுவெதுப்புக்காக விறைக்கிறான்.
தூரிகையை மீண்டும் மீண்டும் வண்ணத்தில் முக்கியபடி
என்னை கேன்வாஸில் சொந்தமாக்குகிறான். சின்ன பையா,
நான் விற்கும் கலைகளுக்கான பணம் உன்னிடம் இல்லை.
ஏழ்மையில் நாமிருவரும் தெரிந்த விதங்களில் சம்பாதிக்கிறோம். ஏன் இதை செய்கிறாய் என அவனிடம் கேட்கிறேன்.
ஏனென்றால் நான் செய்தாக வேண்டும். வேறு வழியில்லை. பேசாதீங்க.
என் புன்னகை அவனை குழப்புகிறது. இந்த ஓவியர்கள் இருக்கிறார்களே
தம்மை ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொள்கிறார்கள்.
இரவில் நான் வைனை வயிறுமுட்ட குடித்து பார்களில் நடனமாடுவேன்.
முடிந்ததும் அவன் அதை பெருமையாய் காட்டுகிறான், ஒரு சிகரெட் பற்ற வைத்தபடி.
12 பிராங்குகள் என்று விட்டு என் சால்வையை எடுக்கிறேன்.

அது என்னைப் போல் இல்லை.