ஒரு வரியில் கவிதை வரும் - ஸ்ரீகுமார் கரியாட் (தமிழில் : ஸ்ரீபதி பத்மநாபா)


·         பேரைக் கேட்டபோது கடல் சொன்னது : “நதி
·         புத்தப் பாதையில் நிற்கும் முள்ளுக்கும் பூம்புன்னகை
·         கனாவின் அறைக்குள் எரியும் விளக்கை அணைத்தாய் நீ
·         நீரில் விழுந்த சிற்றெறும்பு நீந்திப் பெற்றது வாழ்வை
·         பட்டப்பகற்கனாவில் இருள்போர்த்த கோட்டை
·         சாத்தான் கையொப்பமிட்டுப் பழகிய கல்லறைத் தோட்டம்
·         ஆக்சிஜன் சிலிண்டருக்குள்ளிருக்கிறது யமதர்மம்
·         நியூக்ளியசுக்குள்ளேயும் இருக்கும் அனாதைக் குழந்தைக் கடவுள்
·         பெருங்காதலில் வடித்த சந்தனச் சவப்பெட்டி
·         தேன்கிளி பூவைப் பற்றிய பாடல்கள் புனைகிறது
·         பல தெய்வமாய் வேடம் கட்டி ஆடுபவள் தெய்வம்
·         உன் கூந்தலை வரைய நீலப் பேனா வாங்கினேன்
·         வெடித்துச் சிரித்த கண்ணாடிப்பாத்திரம் கிடக்கிறது பல சில்லுகளாய்
·         கிழவனின் மன மச்சு நிறைய விளையாட்டு பொம்மைகள்
·         மசூதியின் மினாரில் வசிக்கிறது சூஃபிப் பட்சி ஒன்று
·         நான்கு கைகளுடன் நடந்து போயின தெய்வங்கள்
·         கவிஞர்களின் இந்தியா; கையில் திராட்சை ரசம்
·         சிற்பத்தின் வடிவில் சிக்கி கருங்கல்லானாள்
·         தத்துவச் சிந்தனை சுமந்து தானே செத்து மடியும் ஈரடிகள்
·         அபோதத்தில் ஜ்வலிக்கிற மண் சிற்பம் நீ
·         பச்சிலை மேடையில் பிராணியின் ஒற்றை நடனம்!
·         பாலியில் எழுதட்டுமா ஒவ்வொரு காதல் வரிகளையும்
·         உடைந்த சங்கில் அலையடிக்கும் சமுத்திரமே
·         வெளியிடப்படாத மனதில் அகப்பட்டேன்
·         தற்கொலை முனையில் இருக்கிறது வாழ்வின் துளி வெளிச்சம்
·         வீணையின் இசைஜுவாலைநீரோவை தகனம் செய்தது

·         உயிர் விட்டுச் சென்ற பிறகும் சிரிப்பு மறையவில்லை மண்டையோடு