என்.டி ராஜ்குமார்
என்றதுமே மலையாளம் கலந்த அந்த குமரி மாவட்ட தமிழ், மந்திர தந்திர தொன்மங்கள்,
தத்தத் தகிம்த தத்தத் தகிம்த என்கிற தாளலயமும், அப்புறம் ஒடுக்கப்பட்டவனின்
அரசியலும் வலியும் நினைவு வரும். என்.டியின் ஒடுக்கப்பட்டவன் வெறும் அரசியல்
விளிம்பு நிலையானவன் மட்டுமல்ல; அவன் உளவியல் ரீதியாய் நெருக்கடிக்குள்ளாகி
சிதைவுற்ற்றுக் கொண்டிருக்கும் ஒரு தனிமனிதனும் தான்.
இந்த தனிமனிதன் மிக மிக
தனிமையானவன். அவனுக்கு உரையாட, செவிமடுக்க ஆவியுலகில் உள்ள அப்பனும் (அப்பா),
சக்தி மிக்க நாட்டார் தெய்வங்களும் தான். அவன் இந்த தெய்வங்களுடன் சரிக்கு சமமாய்
உரையாடுகிறான். இன்னொரு குமரி மாவட்ட தலித் கவிஞரான நட.சிவகுமாரின் கவிதைகளிலும்
மாடன் போன்ற நாட்டார் தெய்வங்கள் வருகின்றன. ஆனால் இத்தெய்வங்களுடன் ஒரு மேல்-கீழ்
உறவு தான் சிவகுமாருக்கு உள்ளது. அவர் ஒரு நவீன மனிதனைப் போல் இத்தெய்வங்களிடம்
வேண்டுகிறார், அவர்களின் உன்னத ஆற்றலை, கோபத்தை எடுத்தியம்புகிறார், சமூகத்தை
தெய்வத்திடமும், தெய்வத்தை பற்றி சமூகத்திடம் விமர்சிக்கிறார். ஆனால் என்.டியின்
தெய்வ உறவு ஒரு இறைஞ்சும் அல்லது ஏமாற்றமடைந்த பக்தன் என்கிற நிலையில் இல்லை. அவர்
தன் உடலைப் பிரிந்து ஆவியாய் தன் தெய்வத்தினுள் கூடுபாய்கிறார். பல சமயங்களில்
அவரும் தெய்வமும் ஒன்றாய் இருக்கிறது. இத்தெய்வம் மாந்திரிக ஆற்றல் மிக்கது
என்றாலும் மண்ணோடு மண்ணாய் பிணைக்கப்பட்ட ஒரு பூமி தெய்வமுமாக இருக்கிறது.
இத்தெய்வம் என்.டியின் இன்னொரு சுயமாகவும் இருக்கிறார். இவ்வாறு என்.டியின்
கவிதைகளுக்குள் வருகிற ஆளுமைக்கு பல அடுக்குகள் இருக்கின்றன. ஒரு அரசியல் போராளி
அல்லது தலித் விளிம்புநிலையாளன் என எளிமையாக இருப்பதில்லை. ஒரு தலித் கவிஞராய்
என்.டி இவ்வாறு தனித்துவப் படுகிறார்.
நவீன கதையின் ஒரு முக்கிய
கருப்பொருள் பிளவுண்ட மனம். இது ஒரு தனிமனிதனின் மனம் தான் எப்போதும்.
தனிமனிதனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்? பிரபஞ்சனின் கதைகளில் வரும்
மனிதர்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் பிற மனிதர்களுடன் மனிதாபிமான
அடிப்படையில் ஒரு இணக்கத்துடன் இருப்பார்கள். சமூகத்தின் பகுதியாக இருப்பதில்
அவர்களுக்கு எந்த சிக்கலும் இருக்காது. ஆனால் நவீன கதையிலோ கவிதையிலோ அப்படி
இராது. அதில் வரும் மனிதனுக்கு சமூகத்தோடு இணக்கம் இல்லை; அவன் துண்டுப்பட்டு
போயிருப்பான். சமூகத்துடன் அவனுக்கு எந்த கோபமும் இல்லை. நம்பிக்கைகளும்
விழுமியங்களும் அழிந்து போன சமூகம் அவனுடையது. அங்கு மனிதர்களை பிணைக்க
லட்சியங்கள் கிடையாது. எதிர்காலமோ கடவுளோ அற்ற மனிதர்கள் தம்மைத் தாமே நம்பி
வாழ்கிறார்கள். தாம் வாழும் சூழலுடன் பொருத்தப்பட முடியாத இந்த தனிமனிதர்கள்
தம்மையே வெறுக்கவும் எதிர்க்கவும் செய்வார்கள். அதனால் இவர்களின் நோக்கம் தம்மில்
இருந்து தப்பித்து செல்வதாக இருக்கும். அதனால் தான் “நான்”, “என்”, “எனது” ஆகியவை
தமிழ் நவீன கவிதையில் அதிகம் பயன்படுத்தப்பட்ட சொற்களாக இருக்கும்.
பிரமிள்,
தேவதேவன் போன்ற ஆன்மீக நாட்டம் கொண்ட கவிஞர்கள் தம்மில் இருந்து வெளியே ஒரு
பிரபஞ்ச பிரம்மாண்ட்த்துடன் இணைய விழைவார்கள். இவர்களின் கவிதையில் ஒரு
சுயமோதலும், இறுதியில் ஒரு பேருண்மையை உணர்வதன் அமைதியும் இருக்கும். அதாவது ஒரு
சிதைவுற்ற மனமாக துவங்கி பேருண்மையுடன் சங்கமித்து பூரணத்துவம் பெறும். தேவதச்சன்,
கல்யாண்ஜி, மனுஷ்யபுத்திரன் கவிதைகளில் இதே துண்டுபட்ட மனம் ஜென் அறிதல் அல்லது
இயற்கை தரும் பேருவகை காரணமாய் அமைதி உறும். நகுலன், ஆத்மாநாமிடம் அமையுறாத ஒரு
தத்தளிப்பு இருக்கும். என்.டியும் இதே துண்டுபட்ட சுயம் பற்றி பேசுகிறார்.
சுவாரஸ்யமாக, அவரது சுயம் பற்றின சித்தரிப்பு நகுலனை நினைவுபடுத்துகிறது.
எனக்கு
யாருமில்லை
நான்
கூட..
யாருமில்லை
நான்
கூட..
நகுலனின் இந்த கவிதை வேறு
விதமான தனிமை பற்றி பேசுகிறது. இது சமூகம் அல்லது உலகுடனான பிளவினால் நாம் உணரும்
தனிமை அல்ல. தன்னுடனான தனிமை அவருடையது. நகுலனின் மனம் ரெண்டாய் பிரிகிறது. ஒரு
மனம் தனியாய் யோசிக்கிறது. இம்மனம் தான் இவ்வரிகளில் வரும் “நான் கூட”. அப்போது
தனிமையை உணரும் மனம் ஏது? அது நகுலன். வேண்டுமென்றால் நகுலன் 2 எனலாம்.
நகுலனின் இக்கவிதையில்
வரும் “நினைவு” தான் நகுலன் 1.
”நினைவு ஊர்ந்து செல்கிறது
பார்க்கப் பயமாக இருக்கிறது
பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை.”
பார்க்கப் பயமாக இருக்கிறது
பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை.”
நகுலனுக்கு பிறகு
இப்படியான பிளவுபடலை நாம் என்.டி ராஜ்குமாரிடம் தான் பார்க்கிறோம். அவர் மனம்
இரண்டாக பிரிகிறது. ஒன்று என்.டி. இன்னொரு நாட்டார் தெய்வம். நகுலனின் உலகில்
தெய்வம் இல்லை. என்.டியிடம் அவர் தெய்வம் பக்கத்திலேயே காற்றோடு பூர்வ நினைவுகளோடு
இருக்கிறது. அவரது துண்டுபட்ட இன்னொரு மனம் தான் அந்த தெய்வம்.
இந்த தெய்வம் என்.டியை
கவர்ந்து மனம் பேதலிக்க வைக்கும் மோகினிக் காதலியாக, பெண் தெய்வமாக, ஆண் தெய்வமாக,
இறந்து போன அப்பனாக பல விதங்களில் வருகிறது. அவர் தன் மனதை விட்டு விட்டு நாட்டார்
தெய்வத்தினுள் புகுகிறார். அல்லது ஒரு மரமாகவோ மிருகமாகவோ மாறுகிறார். உருவக மரமோ
மிருகமோ அல்ல. நிஜ மரம் அல்லது மிருகமாக. அவர் கூடுவிட்டு கூடு பாய்கிறார். பல
குரல்களில் பேசுகிறார். பூமியின் அத்தனை உயிர்களுடனும், உயிரில்லாத தெய்வங்களுடன்
உடலைத் துறந்து அணுக்கமாக பேசுகிறார். இதனாலே நான் × பிறிது என அவர் சுயம் பிளந்தாலும், இங்கு “பிறிது” மண்ணோடு பிணைந்த
தெய்வமாகவும், சொர்க்கம் போக விரும்பாத மூதாதைகளாகவும், மரம், செடி,
மிருகங்களாகவும் இருப்பதால் அவர் நகுலனைப் போல் தனிமையோ அகநெருக்கடியோ
கொள்வதில்லை.
இவ்விதம் என்.டி தன்னுடன் பேசும் போது இவ்வுலகின் அத்தனை உயிருள்ள
உயிரற்ற தெய்வமான தெய்வமற்ற பேருடனும் பேசுகிறார். அவரது மாந்திரிக தாந்திக உலகம்
இதை சாத்தியமாக்குகிறது.
இந்த கவிதையை பாருங்கள்:
“உச்சி வெயிலின்
குளிர் தாங்க முடியாமல்
நடுங்கிக்
கொண்டிருக்கிறேன்
சிதறும் வண்ணத்தில்
அலைவுறும் பூனைகளை
தூரிகையை விட்டு துரத்தி
அனுப்பி விட்டேன்
ஆனாலும்
உயிர் மூச்செழுந்து
மந்தைக் கல்லில்
முதுகு தேய்த்துக் கொள்ள
அறுத்துக் கொடுத்த
காதுகள் மட்டும்
என்னைச் சுற்றி
ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கின்றன”
நகுலனிடம் வரும்
அதேவிதமான மனச்சிதைவின் அறிகுறிகள் இங்கும் வருகின்றன. தூரிகையில் இருந்து பூனைகளை
துரத்தி விட்ட்தாய் சொல்லும் போது படைப்புகளுக்கும் அவருக்குமான ஒரு தர்க்க பந்தம்
அறுந்து போவதை தான் சொல்கிறார். தன் காதை அறுத்துக் கொடுத்த வான்கோவின்
பித்துநிலையை இங்கு குறிப்புணர்த்துகிறார் என்.டி. படைப்புகள் தனி உயிர் பெற்று வர,
உண்மை எது புனைவு எது எனும் நகுலனுக்கு ஏற்பட்ட அதே பேதலிப்பு என்.டிக்கும்
ஏற்படுகிறது. ”காதுகள் ... என்னைச் சுற்றி ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கின்றது”
எனும் பொது மனம் பிளவுற்று அவரிடமே திரும்ப திரும்ப வந்து பேசுகிறது. இங்கு
மனதுக்கு “நான்”, “மனம்” என அவர் பெயரிடுவதில்லை என்பதை கவனியுங்கள். என்.டியின்
மனம் அவர் உடலாகவே இருக்கிறது. அதெப்படி மனம் உடலாக முடியும்?
உடல், மனம் என
தனித்தனியாக பார்ப்பது ஒரு நவீன சிந்தனை தான். அதுவும் மனிதனை ஒரு சிந்தனை வடிவமாக
மட்டுமே பார்க்க வைப்பதில் மதத்துக்கு, குறிப்பாக வைதிக மதத்துக்கு, ஒரு தனி பங்கு
இருக்கிறது. பிராய்டின் உளவியலும் மனிதனை உடலில் இருந்து தனித்து சித்தரிக்கும்
போக்கை வலுப்படுத்தியது. ஆனால் என்.டியிடம் மனம் பிளவுபடும் போது அது உடல்
பிளவுபடுவதாகவே இருப்பதை கவனியுங்கள். உடலும் மனமும் வேறுவேறல்ல, உடலின் இன்னொரு
பாகம் தான் மனம் என பார்ப்பது தலித் மற்றும் பெண் கவிஞர்களிடம் உள்ள குறிப்படத்
தக்க போக்கு. இது இன்றைய கவிதையில் முக்கியமான ஒரு தனித்தன்மை.
என்.டியின் பிற
தொகுப்புகளைப் போல் தலித் அரசியல் மற்றும் தனிநபர் அந்நியப்படலின் கவிதைகளின்
கவலையாக “கருடக்கொடி” இருக்கிறது. “நீ ஒரு அழகிய பன்றியாய் எனக்குள் உறுமிக்
கொண்டிருந்தாய்” முக்கியமானது. மனிதனின் பலவேறு நிலைகளை, அதிகார அவதாரங்களைக்
காட்ட அவர் எலி, நாய், குதிரை, பன்றி, பூனை, பாம்பு போன்ற மிருகங்களை பயன்படுத்துகிறார்.
மனிதனைப் பற்றின கவிதையில் அவர் திடீரென்று எலியாக, நாயாக மாறுவதும் இயல்பாக
நிகழ்கிறது. இக்கவிதை ஒடுக்குமுறையை ஏற்கும் ஒரு தலித்தை பற்றியது. ஒடுக்குமுறையை
சகிக்கும் போது உள்ள ஆபத்து எதிரி முகமற்று போய் விடுவது தான் என்கிறார். எதிரி
குறித்து தெளிவு இன்றி போகிறது. அச்சத்தின் பிரச்சனை இது. சகிப்பின் பேரில் நாம்
பிரச்சனைகளை ஏற்கும் போது நம்மை இருள் சூழ்கிறது. முகமற்ற யார் யாரோ நம்மை
அடித்தும் காறி உமிழ்ந்தும் போகிறார்கள். இந்த பலவீன போராட்டத்தில் நம்மை நாம்
தக்க வைக்கவே முடியாது. ஒரு ஆழமான உளவியல் அவதானிப்பு இது. எதிர்ப்பரசியலே
இன்றைக்கு ஏற்றது எனக் கூறுகிறது இக்கவிதை.
முந்தைய தொகுப்புகளில்
போன்றே “கருடக் கொடியிலும்” குடும்பத்துக்குள் ”காயடிக்கப்பட்ட” தனிமனிதன்
வருகிறான். அவன் தன் அம்மா மற்றும் மனைவியின் எனும் இரு பெண்களின் அதிகாரம்
மற்றும் வன்மத்துக்குள் மாட்டி சுயத்தை இழக்கின்றான். இப்பாத்திரம் விக்கிரமாதித்யனின்
“வீட்டை” விட்டு வெளியேற ஏங்கிய கவிக்குரலை நினைவுபடுத்துகிறது.
விக்கிரமாதித்யனின் வெளிச்சத்தில் என்.டியின் கவிதைகளை வாசிப்பது இன்னொரு
புரிதலைக் கொடுக்கும். ஆனால் அது இன்னொரு கட்டுரைக்கான விசயம்.
இத்தொகுப்பில் உள்ள
இன்னொரு முக்கியமான கவிதை “பக்கத்து வீட்டு சகோதரியோ” என துவங்குவது. Taboo என சொல்லப்படும் சமூகரீதியாய் பாவமாய் கருதப்படுகிற
உறவொன்றை சித்தரிக்கிறது அது. ஒரு சகோதரி மீதான வெளிப்படுத்த இயலாத உன்மத்த காமம்.
அது கண்ணியமான அன்புக்கும் கௌரவமான விலகலுக்கும் இடையே தொக்கி நிற்கிறது.
தி.ஜாவின் “மோகமுள்ளை” நினைவுபடுத்தும் இக்கவிதை தமிழில் ஒரு முதல் முயற்சி.
அழகியல் ரீதியாகவும் நுணுக்கமாக அமைந்துள்ள கவிதை இது.
“செத்துப் போனவர்களோடு”
நானிருந்து என ஆரம்பிக்கும் கவிதை ஒரு தலித் அரசியல் பேசும் படைப்பு என்றாலும்
இன்னொரு புறம் தேவதேவனை நினைவுபடுத்துகிறது. குறிப்பாக இறுதியில் சட்டென தோன்றி
விரியும் மயிலின் குறியீடு.
”செத்துப் போனவர்களோடு
நானிருந்து
பித்து நிலையில் பேசிக்
கொண்டிருக்க
எனது அகப்பேயை
பிடித்தடைக்க வந்த
வேலவனோ
கும்பத்துக்குள் அடைத்து
வைத்திருந்த
முருகனை திறந்து விட்டான்
மாந்திரிக இலைவிரிப்பில்
அவன்
செந்திணையை உருட்டி வைக்க
வேட்டை நாய்களென
கூட்டமாய் வந்த எனது
பிசாசை
பிடித்தடைத்த
சாகசக்கதைகளை
சுவாரச்சியமாய் பேசிக் கொண்டே
முருகன்
மயிலை
விட்டுச் சென்று விட்டான்
அவள்
எனக்கு:
தோகை விரித்து ஆடிக்
கொண்டிருக்கிறாள்”
முருகனை இங்கு
வைதிகத்துக்கு மாற்றான ஒரு நாட்டார் தெய்வமாக காட்டுகிறார் என்பது
புரிந்திருக்கும். தெய்வங்களை அபகரிப்பதற்கான இந்த சமூக போராட்டங்களுக்கு இடையே
“மயில்” எனும் தரிசனம் கவிஞருக்குள் ஒரு பெரும் விரிவாக வளர்ந்து கொண்டே போகிறது.
கலாச்சார கள்வர்களால் தொன்மங்களை அபகரிக்க முடியும். ஆனால் நினைவுகளை, கற்பனையை,
இயற்கையை, அதன் பகுதியாய் தன்னை மாற்றிக் கொள்ளும் ஒரு மனிதனுக்குள் ஒரு
ஆதிதெய்வம் புகுந்து ஏற்படுத்தும் அக எழுச்சியை அவனிடம் இருந்து பிரிக்க முடியாதே!
ஒரு அரசியல் கவிதையை ஒரு ஞானியின் சொற்கள் வடிக்கும் போது தான் இப்படியான கவிதை
தோன்ற முடியும்.
இதே போல் தான் “அம்மா
எப்போதும் மழையை ரசித்ததில்லை” எனும் கவிதை வறுமையை சித்தரிப்பதாய் துவங்கி மிக
மிக நுணுக்கமாய் இன்னொன்றை பேசுகிறது. வீடு சிதிலமாகி இடிந்து விழும் நிலையில்
இருக்கிறது. கடும் மழை. அம்மா பக்கத்தில் வீட்டில் போய் இருந்து கொண்டு
தெய்வத்திடம் பிரார்த்திக்கிறாள். ஆனால் தெய்வமோ ஆளில்லாத வீட்டில் உற்சாகமாகி
பிரகாசம் உறுகிறது. அவ்வளவு நாள் தனக்கென இடம் இல்லாமல் இருந்த கடவுளுக்கு அவ்வீடு
முதன்முறையாய் அப்போது தான் கோயிலாகிறது. அடுத்து மழையில் வீடு இடிகிறது. மழையோடு
ஒழுகிப் போகிறது. கடவுள்? அவர் மண்ணோடு கலந்து தன் இருப்பை இன்னொரு வடிவில்
தொடர்கிறார். இப்புவி முழுக்கவே அவருக்கான வீடு தான். அவர் ஒரு வீட்டில் இருந்து
இன்னொரு “வீட்டுக்கு” செல்கிறார். என்.டியின் தெய்வம் இது போல் எல்லாவற்றின்
பகுதியாகி அழிவற்றவராக இருக்கிறார். அவர் மனிதராகவும் பூதமாகவும் பேயாகவும்
தீமையாகவும் பல நிலைகளில் மாறிக் கொண்டே செல்கிறார். ஒரு அழகான ஜென் கவிதையாகவும்
இதைப் படிக்கலாம்.
இன்னொரு கவிதையில் ”ஒரு
கஞ்சாக்கிறுக்கனைப் போல் உரையாடலைத் துண்டித்துக்” கொண்ட மனம் எதிரிகளையும்
நண்பர்களையும் ஒரே அபத்த தரப்புகளாய் பார்க்கிறது (”கடல் அமைதி அமைதி”). நண்பர்கள்
ஏன் தன்னை தேடி வருகிறார்கள், ஏன் சம்மந்தமில்லாமல் தன்னை விட்டு பிரிகிறார்கள் என
இம்மனதுக்கு புரியவில்லை. “எதற்காகவோ நான் தனித்து விடப் பட்டேன்” எனும் வரியின்
“எதற்காகவோ” முக்கியம். கவிதைசொல்லிக்கே விடைதெரியாத கேள்விகள் இவை. தர்க்க உலகோடு
தன்னை துண்டித்து நம் மனம் ஸ்தம்பிக்கையில் அன்பும், வெறுப்பும் பொருள்
இழக்கின்றன. பிறகு வெறுமையை கூட அவர் “அமைதி அமைதி அமைதி” என உணர்கிறார். அபத்தத்தை
உணரும் போது தான் அமைதி ஏற்படுமா என இக்கவிதை கேட்கிறது. நம்மை முற்றிலும் புதிய
கோணத்தில் இருந்து வாழ்வின் அநிச்சயத்தை பார்க்க தூண்டும் கவிதை இது.
இத்தொகுப்பில் உள்ள
இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்.டி ராஜ்குமாரின் மொழி ஓரளவு பொதுக்கவிதையின்
மொழிக்கு நெருங்கி இருக்கிறது என்பது. இது நல்லதா கெட்டதா என்பது என் அக்கறை அல்ல.
ஆனால் “தெறி” தொகுப்பில் தென்பட்ட ஒரு இசைக்கட்டும், மலையாள வாடை கொண்ட தமிழின்
அந்த தனித்துவமும், தாந்திரிக உச்சாடங்களின் உக்கிரமும் இதில் குறைந்திருக்கிறது.
ஆனால் தொழில்நுட்ப ரீதியாக கவிதைகள் இன்னும் உயர்ந்திருக்கின்றன. ஒரு இயல்பான
ஆனால் ஆழமான ஆன்மீக தளத்தையும் என்.டி கண்டடைந்திருக்கிறார். ஒரு ஞானிக்கும்,
தத்துவ்வாதிக்கும் அருகில் மிகச்சில கவிஞர்களே தமிழில் சென்றிருக்கிறார்கள்.
என்.டி கஞ்சா புகைமணத்தை ரசித்து இழுத்தபடி அவர்களுக்கு வெகு அருகிலேயே நின்று
கொண்டிருக்கிறார்.