முருகம்மாள்-4 - ஆ.செந்தில்குமார்




 உதட்டுச்சாயம்

பூலாத்திப்பழம் தின்னும்போது ஊதா நிற
உதட்டுச்சாயம்
பனம்பழம் சுட்டுத் தின்னும்போது மஞ்சள் நிற
உதட்டுச்சாயம்
சப்பாத்திக்கள்ளி பழம் தின்னும்போது இளஞ்சிவப்பு நிற
உதட்டுச்சாயம்
கோவப்பழம் தின்னும்போது சிவப்பு நிற
உதட்டுச்சாயம்
என்றே பூசிப் பழக்கப்பட்டவளுக்கு தினமும் மாசிலா டீச்சர்
பூசிவரும் இளஞ்சிவப்பு நிற உதட்டுச்சாயம்
அவளுக்கு ஏனோ பெரிய ஈர்ப்பை தந்தது
பிறிதொரு நாளில் பம்பக்கொட்டுத்தாத்தா
வியாபாரம் செய்ய ஊருக்கு வரும்போது
மஞ்சள் நிற ரிப்பனோடு இளஞ்சிவப்பு நிற
உதட்டுச்சாயமும் வாங்க வேண்டி
அம்மாவிடம் பணம் கேட்டாள்
உரத்த குரலில் அம்மாவின் அர்ச்சனை கிடைத்ததும்
அவளின் உதடும்,கன்னமும்,கண்களும் கூட
சிவந்துவிட்டன எந்த பூச்சும் பூசாமல்...