மனுஷ்யபுத்திரன் பேட்டி (பகுதி 4)




ஆர்.அபிலாஷ்: “இந்த கேள்வி நம் விமர்சன மரபு பற்றி. ஐம்பதுகளில் இருந்து எண்பதுகளின் இறுதி வரை எடுத்துக் கொண்டால் ரசனை விமர்சனம் இங்கு பரவலாக இருந்தது. ஒரு படைப்பை அலசி ஆராய்ந்து தர்க்கரீதியாய் புரிந்து கொள்வதை விட வெறுமனே ரசித்து, அந்த உணர்வுகளை, உணர்வுரீதியான எதிர்வினையை பதிவு பண்ணுவது பிரதானமாய் இருந்த்து. க.நா.சு தன் வாசிப்பு ரசனையை தர்க்கரீதியாய் வாசகனுக்கு கடத்த முடியும் என நம்பவே இல்லை. அதனால் தனக்கு ஏன் ஒரு நாவல் பிடிக்கிறது என்று அறிய வாசகனை அவனாகவே படித்து பார்க்க சொல்வார். அவர் தன் தரப்பை விளக்க முயல மாட்டார். இதை ஒரு கொள்கையாகவே வைத்திருந்தார். சில விமர்சன கட்டுரைகளில் தனக்கு பிடித்த நாவல்களின் அத்தியாயங்களை மொத்தமாகவே மேற்கோள் காட்டுகிறார். பின்னர் தொண்ணூறுகளில் நிறப்பிரிகை போன்ற அமைப்புகள் கோட்பாட்டு ரீதியிலான விமர்சனத்தை பிரதானப்படுத்தின. ஆனால் ரெண்டாயிரத்துக்கு பிறகு கோட்பாட்டு விமர்சனம் தொய்வுற்றது. மீண்டும் இன்றுவரை ரசனை விமர்சனம் தான் கோலோச்சுகிறது. நமக்கு ஏன் கோட்பாட்டு விமர்சனம் ஏற்புடையதாக இல்லை. இயல்பாகவே இந்தியர்களுக்கு ரசனைபூர்வமான போக்கு தான் ஏற்பாக உள்ளது? இது ஒரு பண்பாட்டு பிரச்சனையா?”
ரவிக்குமார்

மனுஷ்யபுத்திரன்: “முன்பு இடதுசாரிகள் வலுவாக இயங்கினார்கள். இன்றவர்கள் அதே வீச்சுடன் இயங்குவதில்லை. இது ஒரு காரணம். இன்று சிறுபத்திரிகைகளில் அதிகமாய் புத்தக மதிப்புரைகள் வருவதில்லை. தொண்ணூறுகளில் பெண்ணியம், தலித்தியம், பின்நவீனத்துவம் ஆகியவை விவாதிக்கப்பட்டன. ஆனால் கடந்த பத்தாண்டுகளில் தமிழில் விமர்சனம் எனும் துறை படிப்படியாக செத்து போய் விட்டது. தமிழில் இலக்கிய விமர்சனம் எனும் துறையே இன்று இல்லை.”
ஆர்.அபிலாஷ்: “இதற்கும் நம் மன அமைப்புக்கு ஏதாவது சம்மந்தம் உள்ளதா?”
தமிழவன்

மனுஷ்யபுத்திரன்: “இல்லை. நான் அப்படி நினைக்கவில்லை. ஒரு படைப்பை அலசுவதற்கு அதற்கான கருவிகள் வேண்டும். விமர்சனக் கருவிகள் அறிமுகம் ஆகும் போது தான் விமர்சனத் துறையே உயிர்ப்பு பெறுகிறது. தொண்ணூறுகளில் அமைப்பியல்வாதம் எனும் ஒரு கருவி இங்கு அறிமுகமாகிறது. அன்றிருந்த முக்கியமான விமர்சகர்களான தமிழவன், நாகார்ஜுனன், ராஜ் கௌதமன் போன்றோரின் கல்வியல் பின்னணியையும் நாம் கவனிக்க வேண்டும். அவர்களின் கல்விப்பின்புலம் இயல்பாகவே அவர்களுக்கு விமர்சன பயிற்சியை, கோட்பாட்டு அறிமுகங்களை அளித்தது. அ.மார்க்ஸ் போன்றவர்கள் அரசியல் பின்னணியில் இருந்து வருகிறார்கள். ஆனால் ரெண்டாயிரத்துக்கு பிறகு இப்படியான கல்வி, அரசியல் பின்புலத்துடனான ஆட்கள் அதிகம் நம் விமர்சன துறைக்குள் வரவில்லை.” 


ராஜ் கௌதமன்

ஆர்.அபிலாஷ்: “இதை ஒட்டி ஒரு கேள்வி. தொண்ணூறுகளில் கோட்பாட்டு விமர்சனம் உச்சத்தில் இருந்த போது கூட சுந்தர ராமசாமியின் பள்ளியை சேர்ந்தவர்கள் அதை நிராகரித்தார்கள். இன்றும் அவர்கள் இவ்வித விமர்சனத்தை ஏற்பதில்லை. ஆக, க.நா.சுவில் இருந்து சு.ரா, அவரில் இருந்து இன்றுள்ளவர்கள் என கோட்பாட்டு விமர்சனத்துக்கு மாற்றான அல்லது எதிரான ஒரு தரப்பு இங்கு இருந்தது, இருக்கிறது தானே? அவர்கள் தான் நிலைக்கிறார்களா?”

மனுஷ்யபுத்திரன்: “சு.ராவின் பள்ளியினர் அப்படி செய்ததற்கான காரணங்களையும் நீங்கள் பார்க்க வேண்டும். கோட்பாட்டுவாதிகள் விமர்சனம் செய்த போது அரசியல் சார்ந்த நோக்கங்கள் தான் பிரதானமாய் இருந்தது. அதன் கலாச்சார, இலக்கிய மரபு, மொழி சார்ந்த பல விசயங்கள் புறந்தள்ளப்பட்டன.
ஒரு எழுத்தாளன் ஒரு கவிதையை எழுதும் போது ஒரு திட்டவட்டமான அரசியல் அதன் பின்னணியில் செயல்படுகிறது என்கிற அளவில் தான் அவர்கள் விமர்சன கருவிகளை பயன்படுத்தினார்கள். அமைப்பியல்வாதத்தை எடுத்துக் கொண்டால் அதை முழுக்க முழுக்க ஒரு படைப்பின் மொழி அமைப்பின் பாங்கை காட்டுவதற்காக தான் பயன்படுத்தினார்கள். அதை நாகார்ஜுனன் போன்றோர் வழிமொழிந்தார்கள். அ.மார்க்ஸ் போன்றவர்கள் படைப்பு என்பதை வெறும் அரசியலாக மட்டுமே பார்த்தார்கள்.”

ஆர்.அபிலாஷ்: “ஆம். இந்த இடத்தில் ராஜ்கௌதமனின் புதுமைப்பித்தன் கட்டுடைப்பு வாசிப்பும் கவனிக்கத்தக்கது.”

மனுஷ்யபுத்திரன்: “என் புகார் இது தான். இலக்கிய பிரதி எனும் சிக்கலான ஒரு விசயத்துக்குள் இவர்கள் ஒரு சின்ன டார்ச் அடித்து வெளிச்சம் ஏற்படுத்த பார்க்கிறார்கள். அந்த டார்ச் ஒளி காட்டுவது மட்டுமே தான் பிரதி சொல்லும் உண்மை என வலியுறுத்துகிறார்கள். எனக்குத் தெரியும் உண்மை அது மட்டும் அல்ல என. ஒரு பிரதியின் வேறு பல விசயங்களை மறைப்பதன் வழியாக தனக்கு சாதகமான சில விதிமுறைகளை அதை ஒட்டி இவர்கள் உருவாக்க எத்தனிக்கிறார்கள். 

அ.மார்க்ஸ்

உதாரணமாக, அ.மார்க்ஸ் பழமலயின் கவிதைகளை விமர்சிக்கிறார். அதில் பழமலய்க்குள் செயல்படுகிற நிலப்பிரபுத்துவ விழுமியங்களை அம்பலப்படுத்த முயல்கிறார். ஆனால் பழமலயின் எழுத்து என்பது வெறுமனே நிலப்பிரபுத்துவ மனப்பான்மை மட்டும் இல்லையே. இந்த நவீன வாழ்க்கையுடன் தொடர்புடைய பல குறிப்புகளை அவர் கவிதைகளில் காணலாம். ஒரு கவிதை சரியான மொழி அமைப்பில் இருக்கிறதா, அது என்ன மதிப்பீடுகளை பேசுகிறது என்பதைத் தான் அது வேறொன்றை பிரதிநுத்துவப்படுத்துகிறது. ஆனால் மார்க்ஸுக்கு அது தேவையில்லை.
ஒரு விளம்பரத் தட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். எந்தவித சிக்கல்களுக்கும் இல்லாத ஒரு எளிய பிரதி அது. இருந்தும் அது அதிலுள்ள வண்ணங்கள், அதன் படிமம், ஸ்டைல், அது பிரதிநித்துவம் செய்யும் கலாச்சார மதிப்பீடு எல்லாம் சேர்ந்து பார்க்கிற ஒவ்வொருவருக்குள்ளும் புது பிம்பத்தை ஏற்படுத்துகிறது. ஒரே விளம்பரத்தை நாம் எல்லோரும் ஒரே மாதிரி பார்ப்பதில்லை. ஆனால் இதை விட சிக்கலான, பன்முகங்களை கொண்ட ஒரு இலக்கிய பிரதியை நீங்கள் மிக தட்டையாக ஒரு விமர்சன கருவியை கொண்டு அணுகுவது தவறு. அப்போது உங்கள் அதிகாரத்தை செலுத்துவதற்கான ஒரு இடமாக நீங்கள் விமர்சனத்தை பயன்படுத்துகிறீர்கள் என்று அர்த்தம்.
ஆனால் அப்படி ஒரு கவிதையை நீங்கள் தட்டையாக்கி கொல்ல முடியாது. உங்களை அந்த இடத்திலேயே விட்டு விட்டு அக்கவிதை காலத்தின் ஊடாய் பயணித்து கொண்டே இருக்கும். இப்படி தொண்ணூறுகளில் சில விமர்சகர்கள் தமது கருவிகளை பரிசோதனை பண்ணிப் பார்ப்பதற்கான ஒரு சாக்காக கவிதையை பார்த்தார்கள். கவிதை மீது தீர்ப்பு எழுதுவதற்கான மார்க்கமாக நினைத்தார்கள். இது தான் அவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டு.


பாரதியை ஒரு சாதி வெறியனாக கூட இவர்கள் சித்தரித்தார்கள். ஆனால் எனக்கு பாரதிதாசனை வாசிக்கையில் அவர் நிலவுடைமை மனப்பான்மை கொண்டவராக தெரிகிறார். ஒரு பண்ணையார் உட்கார்ந்து கவிதை எழுதுவது போல் படுகிறது. பாரதிதாசன் பெண்ணடிமைத்தனத்தை ஆதரிக்கிறதாய் தொனிக்கிற வரிகளை எழுதியிருக்கிறார். அதேவேளை சாதிய சமூகத்தை எதிர்க்கிறவராகவும் இருக்கிறார். இந்த முரண்பாட்டை நாம் எப்படி ஏற்க போகிறோம்?
அது போல் பாரதியார் பெண்ணடிமைத்தனத்துக்கு மறைமுகமாக ஆதரவளிக்க்க் கூடிய பல வாக்கியங்களை எழுதியிருக்கிறார். ஆனால் பெண்ணடிமைத்தனத்துக்கு எதிரான வரிகளையும் நாம் பாரதியில் பார்க்கலாம். அவை பிரபலமாக பேசவும் படுகின்றன. இந்த வரியை பாருங்கள்:
“பெண்ணுக்குள் ஞானத்தை வைத்தான்
புவி பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக்குள்ளே சில மூடர்
நல்ல மாதர் அறிவை கெடுத்தார்”

இந்த வரி முற்போக்கானதான் பிற்போக்கானதா? ரெண்டாகவும் பார்க்கலாம். “பெண்ணுக்குள் ஞானத்தை வைத்தான்/ புவி பேணி வளர்த்திடும் ஈசன்” எனும் போது அறிவு கடவுளால் தரப்படுகிற ஒன்று எனும் மதபூர்வமான கருத்து வருகிறது. “மண்ணுக்குள்ளே சில மூடர் / நல்ல மாதர் அறிவை கெடுத்தார்” எனும் போது பெண்களுடைய ஆற்றலையும் இயல்பையும் இந்த சமூகம் தான் அழிக்கிறது, அவர்களுடைய திறன் வெளிப்படாமல் சமூகம் தடுக்கிறது எனும் மிக முற்போக்காக ஒரு கருத்தையும் பாரதியார் முன்வைக்கிறார். ஒரே வாக்கியத்துக்குள் ஏற்க முடியாத ஒரு கருத்தும், இன்று ஏற்கக் கூடிய மிக மிக அவசியமான ஒரு கருத்தையும் அவர் முன்வைக்கிறார். இப்போது நீங்கள் பாரதியை முற்போக்காளர் என்பீர்களா, பிற்போக்காளர் என்பீர்களா?”

ஆர்.அபிலாஷ்: “நீங்கள் இப்படி சொல்லுகிறீர்கள் என கொள்ளலாமா: தொண்ணூறுகளின் கோட்பாட்டு விமர்சகர்கள் ஒரு படைப்பின் முழுமையை கருத்தில் கொள்ளாமல், அதன் ஒரு பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு அது மட்டுமே தான் அப்படைப்பின் கருத்து என வலியிறுத்தினார்கள். சரியா?

மனுஷ்யபுத்திரன்: “அதாவது நான் முழுமையை கூட வலிறுத்தவில்லை. ஒரு பிரதிக்குள் முரண்பட்ட கருத்துக்கள் இருக்கும். அவற்றில் ஒன்றை மட்டும் எடுத்துக் கொள்கிறார்கள். இன்னொன்றை கைவிடுகிறார்கள். அல்லது கண்டுகொள்ளாமல் விடுகிறார்கள்.”

ஆர்.அபிலாஷ்: “இதை ஒட்டி ஒரு சந்தேகம். பிரமிளின் “காவியம்” கவிதையை நான் விமர்சிக்கையில் ஏதேனும் ஒரு தரப்பை அழுத்தி தான் விளக்குகிறேன். ஆன்மீகத்தை பேசுகிறேன் என்றால் வேறு தரப்புகளை கைவிடுகிறேன் தானே. நீங்கள் படிக்கையில் இது ஆன்மீகத்தை பற்றிய கவிதை இல்லையே என தோன்றலாம். ஆக இப்படி ஒரு தரப்புக்கு அழுத்தம் கொடுப்பது விமர்சனத்தின் இயல்பு தானே? அது அதன் உள்ளார்ந்த ஒரு பிரச்சனை தானே? இதை கோட்பாட்டு விமர்சகர்களின் குற்றம் மட்டுமேவாக பார்க்க வேண்டுமா?”


மனுஷ்யபுத்திரன்: “இந்த அழுத்தம் எப்போது வன்முறையாக மாறுகிறது என பார்க்க வேண்டும். உங்கள் அரசியல் சமூக கருத்துக்களை இலக்கியத்துடன் நேரடியாக தொடர்பு படுத்தும் போது விமர்சனம் வன்முறையாகிறது. நீங்கள் “அந்நியன்” நாவலை எடுத்துக் கொள்ளுங்கள். அந்நாவலை வெறும் ஒரு இனவெறியை வெளிப்படுத்தும் படைப்பாக பார்க்க முடியும். உதாரணமாய் அதில் நீக்ரோக்கள், அரேபியர் மீதான குரோதம் வெளிப்படுகிறது. அது பற்றி தமிழிலேயே விமர்சனக் கட்டுரைகள் வந்துள்ளன. ஆனால் அதற்காக அதை நாம் ஒரு இனதுவேச நாவலாக மட்டுமாக பார்க்கலாமா?”

ஆர்.அபிலாஷ்: “இல்லை, கூடாது.”

மனுஷ்யபுத்திரன்: “ஆக, அதை ஒரு இனதுவேச நாவலாக பார்க்கும் போது அதை நாம் நம் அரசியல் நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்துகிறோம் என அர்த்தம்.”

ஆர்.அபிலாஷ்: “அப்படி பயன்படுத்தக் கூடாது என சொல்கிறீர்களா?”

மனுஷ்யபுத்திரன்: “பயன்படுத்தக் கூடாது என நான் சொல்லவில்லை. ஆனால் அப்படியான நோக்கத்தை மட்டுமே கொண்டு இலக்கிய பிரதியை குற்றம் சாட்டக் கூடாது என்கிறேன். இதற்கு ஒரு நீண்ட வரலாறு உள்ளது. முகமது நபியின் காலத்தில் இஸ்லாத்திற்கு எதிரானவை என கருதப்பட்ட பல பிரதிகள் இதே போன்ற நோக்கத்திற்காக எரிக்கப்பட்டுள்ளன. அதை எழுதினவர்கள் நாக்குகளை அறுக்க வேண்டும் என முகமது நபியின் மகன் உம்மர் அப்துல்லா கூறினார். கிறித்துவத்துக்கு எதிரான பிரதிகளும் இவ்வாறு எரிக்கப்பட்டுள்ளன.
ஒரு கவிஞனோ கலைஞனோ ஒரு சமூகத்தின் முரண்பட்ட முகங்களின் தொகுப்பாக தான் இருக்க முடியும். அந்த முரண்பாடுகளை மறுதலித்து விட்டு அவனை ஒரு புள்ளியில் நீங்கள் மையப்படுத்தும் போது அந்த பிரதியைப் பற்றின உங்களுக்கு சௌகரியமான பார்வையை முன்வைக்கிறீர்கள்.
அப்படி முன்வைக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் அது அந்த பிரதியின் ஒரு தரப்பினுடைய வாசிப்பு மட்டும் தான். ஆனால் அது அப்பிரதியின் மீதான தீர்ப்பாக ஒரு போதும் ஆகக் கூடாது.
ஜெயமோகன் என் கவிதைகள் பற்றி எழுதும் போது என் கவிதைகளின் மையம் உடல் சார்ந்த துயரம் மட்டும் தான் என்கிறார். உடலின் வாதைகள், இச்சைகள் பற்றின சித்திரம் என் கவிதைகளில் உண்டு தான். ஆனால் அதை வைத்து ஒட்டுமொத்தமாக என் கவிதைகளின் உலகம் இது தான் என ஒரு பிம்பத்தை கட்டுவித்தால் அதனால் எந்த பயனும் இல்லை. அப்படி நீங்கள் என்னை பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தவிர.
ஆனால் ஒரு படைப்பை அணுகும் போது அது சுதந்திரமாக உங்களுக்குள் விரிவுபெற அனுமதிக்க வேண்டும். அதன் பல்வேறு வாசல்களை தட்ட தயாராக நீங்கள் இருக்க வேண்டும்.
ரசனை விமர்சனத்திற்கும் இந்த கோளாறுகள் எல்லாம் உண்டு தான். ரசனையாளர்களும் தாம் ரசிக்கிற ஏதோ ஒரு அம்சத்திற்காக ஒரு படைப்பை கொண்டாடுகிறார்கள். அது மொழியின் அழகாகவோ, ஒரு படைப்பு எழுதப்பட்ட விதமாகவோ, ஒரு குறிப்பிட்ட வாக்கியமாகவோ இருக்கலாம். ஆனால் ஒரு படைப்பை நாம் திறந்த மனதுடன் அணுக வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.”