என் பிணவறைக்குள்
எதையெதையோத்
தேடிக் கொண்டிருக்கிறீர்கள்.
தரையெங்கும்
மிதிபட்டு நசுங்கிக் கிடக்கின்றன
கடைசியாய் உதிர்த்த சொற்கள்.
உங்கள் காலடிகளால்
அழிக்கப் பார்க்கிறீர்கள்
எனது காலடிகளை.
மூடிய கண்களை
நெருங்கி உற்றுப் பார்த்து
சந்தேகம் போக்கியவர்கள்
கடந்து போகிறார்கள்
உதிராதப் புன்முறுவலோடு!
உங்களுக்குத்
தெரிந்திருக்கப் போவதில்லை,
எனதறையின்
மூலையிலிருக்கும் தொட்டிமீன்கள்
வாயை வெளிநீட்டிக்
குடித்துக் கொண்டிருக்கின்றன
என் கடைசிப் பார்வையையும்;
உங்கள் மிதித்தலுக்குத் தப்பிய
என் நினைவுகளையும்!