முன்கால் இரண்டையும் மடக்கியவாறு
வாலைச் சுருட்டி பசலிக்கீரையை அவசரமாக
மேய்ந்துகொண்டிருந்த அன்றைய தினம்தான் காக்காச்சியை
அவளுக்கு பிடித்துப் போனது
அதன் முகத்தில் ஏதோ ஒரு கவலை இருப்பதாக
கவலைப்பட்டுக் கொள்வாள் அதன்பின் எப்போதும்
எந்த இரை வைத்தாலும் முதலில் காக்காச்சிக்கு
அதன் பின்தான் மற்றவைகளுக்கு
மடியில் கிடத்தி காதில் ரத்தம் குடிக்கும்
உண்ணியை எடுக்கும்போது சுகப்பட்டு கிடக்கும் காக்காச்சியின்
முகபாவனைகளை ரசித்துக் கொண்டே கொஞ்சுவது வழக்கம்
அது புழுக்கையை உதிர்ப்பது உலுக்கப்பட்ட
மரத்திலிருந்து உதிர்ந்துவிழும் நெல்லிபோல்
சிதறுவதைக் கண்டு குதூகலிப்பாள்
கடந்த மாதம் களஞ்சியம் ஓடையில்
சீத்தாமர இலையை தின்றதிலிருந்து எருக்கல் எடுக்க ஆரம்பித்தது
எவ்வளவோ மருத்துவம் பார்த்தும்
எருக்கல் மட்டும் நிற்கவேயில்லை
இருவாரத்தில் அரை உயிராகிப்போனது
தினமும் பத்திரகாளியம்மனிடம்
வேண்டிக்கொள்வாள்
எருக்கல் நின்றால் மாவிளக்கு எடுப்பதாக
இனி
இதை விற்றுவிட வேண்டும்
என்ற தந்தையின்
பேச்சை நினைத்தபடி
மறுநாள் பள்ளி முடிந்து திரும்பியதும்
முதல் வேலையாய்
தொழுவத்திற்குள்
செல்கையில்
காக்காச்சியின் கழுத்துக் கயிறுமட்டும்
அறுந்து கிடந்தது.
அவள் பத்திரகாளியம்மனிடம் கேட்டாள்
“எருக்கல் நிற்கும் வரை
அப்பா
ஏன் காத்திருக்கவில்லை?”