பெருவாழ்வு போதாப் பேரரசன்
ஆத்மாநாம்
தகவல்:-
(2011 ஆமாண்டு நான் எழுதிய ஆத்மாநாம் நினைவுகளை விதைத்தவன் என்னும் கட்டுரையின் சில பகுதிகளை
இந்த அத்தியாயத்தில் எடுத்தாண்டிருக்கிறேன்.)
ஆத்மாநாம் கவிதைகள் குறித்து உணர்வுப்பூர்வமான பதிவுகளை வாசித்திருக்கிறேன்.ஆத்மாநாம்
இந்த உலகத்தில் 34 வருடங்கள் வாழ்ந்தவன்.தற்கொலை செய்துகொண்டவன்.அடுத்த காலத்தை
முன் கூட்டிச் சிந்தித்தவன்.கவிதை உலகில் எப்போதும் மதிப்புக் குறையாமல் இருந்துவரும்
இருக்கப் போகும் சில பெயர்களில் குறிப்பிடத் தக்க பெயர் அவனுடையது.
ஆத்மாநாமின் கவிதாமொழி உன்னதமானது.அபூர்வமானது என்றும் சுட்டலாம்.
ஆத்மாநாமின் வரிகளை மேல் நோக்கலாகக் கடக்கையில் அவை சதா எரிச்சலையும் இயலாப்
போதாமைகளையும் முணுமுணுக்கிற வார்த்தையாடல்கள் என்று புரியக் கூடும்.ஆனால்
மெய்ம்மையில் ஆத்மாநாமின் வரிகள் பல வாசிப்புகளுக்குப் பின்னதாய்த் திறந்து விடும்
அனுபவஸ்தானம் அபூர்வமானது.ஒரு மந்திரத்தை எத்தனையாவது முறை உச்சரிக்கையில் மாயம்
நிகழும் அதிசயம் போல அது.
ஆத்மாநாமின் கவிதைகள் எண்ணிக்கையில் நூற்றுச்சில்லறை தான் இருக்கக் கூடும்.
கவிதை என்பது எண்ணிக்கையில் இல்லை என்பதைச் சாற்றிக்கொண்டே இருக்கப் போகும் சாஸ்வதங்கள்
அவை.ஆத்மாநாமின் கவிதா நம்பகங்கள் துல்லியமானவையாக இருந்திருக்கின்றன.குழப்பங்களோ மேலோட்டங்களோ
பின்னால் மாற்றி அமைத்துக்கொள்ளக் கூடிய கருத்துப்போலிகளோ கொஞ்சமும் அற்று அவரது கவிதைகள்
அத்தனையும் வெகு துல்லியமாய்த் தனிக்கின்றன.
கற்றலின் பால் நம்பிக்கை கொண்ட தன்னைப் புதுப்பித்துக் கொண்டே முன் நகர்வதைத் தன் வாழ்க்கையாகத்
தீர்மானித்துக் கொண்ட நகரப்புழுக்கங்களிலிருந்து தப்பித்தலுக்கான முயல்வுகளில் அயராத வாழ்க்கை தன் முன்
வைக்கும் அத்தனை அபத்தங்களுக்கும் மாற்று அபத்தமாய்த் தன்னை நிறுவத் தலைப்படுகிற எதன் மீதும் ஆழ்ந்த
பிடிமானம் கொண்டு தேங்கிவிடாத அதீதமும் அபூர்வமும் கலந்து பிசைந்த மனம் ஆத்மாநாமுடையது.அவர் கவிதைகளின்
வாயிலாக வெளிப்படுவதும் அதுவே.
எதாவது செய்
எதாவது செய் எதாவது செய்
உன் சகோதரன் பைத்தியமாக்கப்படுகிறான்
உன் சகோதரி நடுத்தெருவில் கற்பிழக்கிறாள்.
சக்தியற்று
வேடிக்கை பார்க்கிறாய் நீ
ஏதாவது செய் ஏதாவது செய்
கண்டிக்க வேண்டாமா
அடி உதை விரட்டிச் செல்
ஊர்வலம் போ பேரணி நடத்து
ஏதாவது செய் ஏதாவது செய்
கூட்டம் கூட்டலாம்
மக்களிடம் விளக்கலாம்
அவர்கள் கலையுமுன்
வேசியின் மக்களே
எனக் கூவலாம்
ஏதாவது செய் ஏதாவது செய்
சக்தியற்றுச் செய்யத் தவறினால்
உன் மனம் உன்னைச் சும்மா விடாது
சரித்திரம் இக்கணம் இரண்டும் உன்னை
பேடி என்றும் வீரியமிழந்தவன் என்றும்
குத்திக் காட்டும்……….”
இந்தக் கவிதையின் மூலம் குந்தர் கிராஸ் எழுதிய டூ சம்திங் என்னும் கவிதை.மனிதகுலத்தின் இழத்தலுக்கும் அழிதலுக்குமான ஒட்டுமொத்த அழைப்பொலியாக
ஆத்மாநாம் எழுதிய இந்தக் கவிதையை முன் வைக்க முடியும்.ஈழத்தில் நிகழ்ந்த கோர இன அழிப்பை இந்தக் கவிதைக்குள் எளிதாகப் பொருத்திக் கொள்ள முடிவது.
ஆச்சர்யமான மெய்மையின் தொடர்ச்சியே.பொதுவாகவே இன அழிப்பு போர் பயங்கரங்கள் யாவும் மனிதகுலத்தின் ஒட்டுமொத்த நகர்வுக்கும் எதிர் திசையில் நகர்த்தக் கூடிய எதிர்ச்செயல் என்பதை உலகின் சர்வ நிலங்களைச் சேர்ந்த கலைஞர்களும் தத்தமது கலாமுயல்வுகளெங்கும் பிரதிபலித்தவாறே தான் இருந்திருக்கின்றனர்.இது மொழிகளுக்கு அப்பாற்பட்ட உன்னதம் எனலாம்.அந்த வகையில் குந்தர்கிராஸின் மூலமும் ஆத்மாநாமின் பிரஞையும் ஒருங்கே இயங்கியதன் அடியொற்றியே இந்த எதாவது செய் என்னும் கவிதையைக் கொள்ள முடிகிறது.ஆற்றாமையின் வடிகாலாக ஒரு கவிதை இருந்துவிடுவது சிறப்பன்று.மாறாக எழுதப்பட்ட எழுத்துக்களின் வெம்மை பெருங்காட்டை எரிக்கக் கூடிய தழலாக அந்தக் காகிதத்தை மாற்றத் தலைப்படுவதே கவிதையின் நிச இயங்குதளம்.ஆத்மாநாமின் பல கவிதைகளும் அவ்வகைச் சான்றுகளே.
பதில்:
குற்றுகர முற்றுகரச் சந்திகளை
சீர்சீர் ஆய்ப் பிரித்து
தளை தளையாய் அடித்து
ஒரு ஒற்றை வைத்து
சுற்றிச் சுற்றி வந்து
எங்கும் மை நிரப்பி
எழுத்துக்களை உருவாக்கி
பொருளைச் சேர்த்து
வார்த்தைகள் ஆய்ச் சேர்த்து
ஒவ்வொரு வாக்கியத்திற்கும்
கமா மற்றும் முற்றுப்புள்ளி வைத்து
ஏதாவது சொல்லியாக வேண்டும்
நமக்கேன் வம்பு
பொதுவாகவே நிபந்தனைகளையும் நிர்ப்பந்தங்களையும் கடுமையாக நிராகரிக்கும் மனம் கொண்டவரான ஆத்மாநாம் மொழியைப் பிரயோகிப்பதிலும் அதனை ஒரு கலகமாகவே முன்னெடுத்துச் சென்றார் எனலாம்.தன் கவிதைகளெல்லாவற்றிலுமே “பெரிய”, மற்றும் “அமைப்பு” ஆகியவற்றைச் சாடுவதை மறைநுட்பமாகவே கையாண்டிருக்கிறார்.
களைதல்:
என்னைக் களைந்தேன்
என் உடல் இருந்தது
என் உடலைக் களைந்தேன்
நான் இருந்தது
நானைக் களைந்தேன்
வெற்றிடத்துச்
சூனிய வெளி இருந்தது
சூனிய வெளியைக் களைந்தேன்
ஒன்றுமே இல்லை.
சொல்லி முடிக்கப் பட்ட தத்துவங்களை சதா சர்வகாலமும் அவற்றிற்குள்ளிருக்கும் அபத்தங்களை பகடி செய்வதன் மூலமாய் பதில் தேவையற்ற தனது கூற்றுக்களை சொல்லிச் செல்கிற கவிதைகளை அனேகமாக எழுதி இருக்கிறார் ஆத்மாநாம். மேற்சொன்ன கவிதை அவற்றுள் ஒன்று.
மனத்தின் கவிதைகள்:
கழிவறையின் விட்டத்தைப் பார்த்தான்
தூக்கில் அவன் தொங்கப் போவதில்லை
எனினும் பார்த்தான்.
இந்த வரிகள் நினைத்துப் பார்த்தலுக்குள் நிகழ்ந்து மீளும் தற்கொலை என்பது வெறும் ஒற்றைச் சொல் அல்ல என்பதும் அதன் நீட்சியாக விரிந்துகொண்டே செல்லக் கூடிய முடிவிலி தரும் அயர்ச்சியும் இவ்வரிகளில் பொதிந்திருக்கும் மாயம் எனலாம்
முத்தம்
முத்தம் கொடுங்கள்
பரபரத்து/நீங்கள்
முன்னேறிக்கொண்டிருக்கையில்
உங்கள் நண்பி வந்தால்
எந்தத் தயக்கமும் இன்றி
இறுகக் கட்டித் தழுவி
இதமாகத் தொடர்ந்து
நீண்டதாக
முத்தம் கொடுங்கள்
……………
விடுதலையின் சின்னம் முத்தம்
………………..
இருக்கும் சில நொடிகளில் உங்கள் இருப்பை நிரூபிக்க
…………………….
ஆபாச உடலசைவுகளை ஒழித்து.
சுத்தமாக
முத்தம்
முத்தத்தோடு முத்தம்
என்று முத்த சகாப்தத்தை
துவங்குங்கள்.
முத்தம் என்ற கவிதையில் வரக் கூடிய முத்தம் என்ற சொல்லை வழமையான வாழ்வில் பல இடங்களிலும் தென்படக் கூடிய பொதுச்சொல்லாகக் கருதிவிட முடியாது.
ஆத்மாநாம் தன் கையில் அகப்படக் கூடிய பல சொற்களை அவற்றின் வழக்கமான தோற்றத்தில் இருந்து விடுவித்து இன்னொன்றாக வேறொன்றாக மாற்றிவிடும் அபாய ஆட்டத்தைத் தன் பல கவிதைகளில் நேர்த்தியிருக்கிறார்.
ஆத்மாநாமின் கவிதைகள் பெரும்பாலும் கட்டளைத் தொனியில் நேரடியாக தன் முன் அமர்ந்திருக்கும் ஒருவனுடன் உரையாடுவதற்கான சாத்யங்களாகவே நீள்கின்றன.இது அவரது கவிதாபலம்.இது அவரது கவிமொழி.ஆத்மாநாம் உருவாக்கிய தன்னந்தனிப் பாணி என்றே இதனைச் சொல்லலாம்.அதற்கு முன்னும் பின்னுமான
இப் பாணியிலான கவிதைகளைப் பிறர் எழுத முற்படுகையிலெல்லாமும் ஆத்மாநாமின் கவியுலகின் இன்னொரு கதவின் வேறொரு திறப்பாகவே அவற்றைக் கொள்ளலாம்.ஆத்மாநாம் தன் கண்ணுக்கு முன்னே தெரியாத திசைகளை காலத்தை வாழ்தலை அப்போது இருக்கப் போகும் மானுடர்களைக் குறித்துச் சிந்தித்தவரும் அப்படியான சிந்தனையின் தெறிப்புகளைத் தன் கவிதைகளின் ஊடே பிரதிபலித்தவரும் ஆவார்.
ஆத்மாநாம் தனது கவிதைகள் தவிரவும் மிக நுட்பமான மொழிபெயர்ப்புக்கள், விமர்சனங்கள் என பல தளத்திலும் இயங்கியவர். அவர் இன்றைக்கு இருந்து இருந்தால் இப்போது அறுபத்து மூன்று வயதாயிருக்கும். 1951 ஆமாண்டு பிறந்தவர். அவருடன் சேர்த்து அவரது அதி உன்னத நுட்பமான தனித்த ரகசியமான மெல்லிய கவி உலகமும் அவர் எழுதவிருந்த எழுதியிராத அத்தனை கவிதாநுட்பங்களும் தற்கொலை செய்து கொண்டன.
ஆத்மாநாமின் கவிதைகள் உடைத்து நொறுக்குவதற்கு எந்தவிதமான பிரயத்தனமும் தேவையற்ற கண்ணாடிச் சருகினால் எழுப்பப் பட்ட சித்திரங்களைப் போலத் தோற்றமளிப்பது உண்மையில் அவரது கவிதைகளுக்குள் ஒருவரை இழுத்துப் பிடித்து அமர்விக்கக் கூடிய ஜாலவித்தையே தவிர வேறில்லை.ஆனால் முழுவதுமாய் ஆத்மாநாமின் கவிதைகளைக் கடந்து விடக் கூடிய ஒருவரும் அந்தக் கவிதைக்கு முன்னால் இருந்தவராக இருக்கப் போவதில்லை.கீழ்க்கண்ட ஆத்மாநாமின் கவிதை வரிகளைப் போலவே.எத்தனை எளிமையோ அத்தனை சூன்யமும் நிரம்பியவை.
இந்தக் கவிதை
எங்கு எப்படி
முடியும்
என்று எனக்குத்
தெரியாது.
முடிகையில்
இருக்கும் நான் (இருந்தால்)
ஆரம்பத்தில்
இருந்தவன் தானா..?
தொடரலாம்
அன்போடு
ஆத்மார்த்தி