ஊரில் யாருக்கு
காத்துக்குத்து என்றாலும்
வீட்டு வேலியில்
வளர்ந்து நிற்கும்
வாதமுடக்கி மரத்தின்
ஒருகிளை முறித்து
இரு கீற்றாக்கி
இடுப்பில்
இருபுறமும் இருவரும் இடுக்கியவாறு
ஏதோ மந்திரம்
ஜெபிக்க
பிரிந்த இரு
கீற்றுகளும்
ரயில் பூச்சியின்
நடைவேகத்தில் நடுவில்
இணையும் புள்ளியில்
மீண்டும் முறித்து
இடுப்பில்
தேய்த்துவிட்டு வலி விலக்குவாள்
முப்புடாதிப்பாட்டி
என்றோ வேலிக்காக
நடப்பட்ட
வாதமடக்கி
மரக்கிளையிலிருந்து
விருட்சமாகிய
அந்தமரம் அவளுக்கு கோவில்.
பேய் மழைக்காலம்
தொடங்கியிருந்த
அந்த நாட்களில்
தலைகொள்ளா
குழையுடனும் மஞ்சள்
நிறப்பூவுடனும்
செழித்து நின்ற
மரத்தின்
குழையும் கிளையும்
பூக்களும்
கிணற்றடி
குண்டுக்கு
தொளி
உரமாகியிருந்தது
காற்றில்
முறிந்தால் வீடேபோய்விடும் என்பதால்
அடுத்த நாள்
காத்துக்குத்து பிடிக்கவந்த
தெக்குத்தெரு
சுமதிக்கு
வாதமுடக்கி
கிளைதேடி அலைந்து
கிடைக்காமல்
விசும்பி அழுதபோது
வெட்டப்பட்ட
இடத்திலிருந்து
தளிர்விடத்
தொடங்கியிருந்தது
வாதமுடக்கிமரம்.