என்.டி ராஜ்குமாரின் கல் விளக்குகளில் தூண்டப்பட்ட தீ - நாகபிரகாஷ்



'சவுட்டி இறுக்கி ஊருக்கு வெளியே ஒதுக்கி வைக்கப்பட்ட'வர்களின் வலிகளையும் கொண்டாட்டங்களையும் திண்டாட்டங்களையும் பதிவுசெய்யும் கவிதைகளாக மட்டுமில்லாது மனதுக்கு நெருக்கமாகி, பிரச்சாரமோ அல்லது மேம்போக்கு அரசியல்கூத்தாகவோ இல்லாத கவிதைகள் இந்த 'கல்விளக்குகள்' என்னும் என்.டி.ராஜ்குமாரின் தேர்ந்தெடுத்த கவிதைகளின் தொகுப்பில் உள்ளவை.

'பிரம்மத்திற்குள் மறைந்திருந்தோ
ஒரு சாரருக்கு மாத்திரம் தெரிந்த மொழிக்குள்
ஒளிந்திருந்தோ கதைகள் பேசாமல்

கோழைவாயோடு
வெற்றிலைக் குதப்பிக் கொண்டே
பறட்டைத்தலையோடு திரியும்
தங்கச்சாமியின் உடலில் புகுந்து
திங்கு திங்கென்று ஆடிக் கொண்டே
எல்லோருக்கும் தெரிந்த மொழியில்
குறிகள் சொல்லி, பண்ணிக்கறி தின்று
சாராயம், சுருட்டு குடித்துக் கொண்டே
சேரிகளில், பொறம்போக்குகளில்
சாக்கடையோரங்களிலாயிருக்கும் எங்கள்
சனங்களின் சாமியின்'

கொல்லங்கோட்டு அம்மனென்றும், அயனியோட்டுத் தம்புரான் என்றும் வரிசைகட்டி வரும் நாட்டார் தெய்வங்கள் புராணங்கள் வேண்டாதவர்கள். புராணங்களுக்கு வேண்டாதவர்கள். என்ன செய்ய? அவர்கள் மக்கள் நடுவில் தங்கச்சாமியிலும் வந்திறங்கி நலம் விசாரிப்பவர்கள். தொன்மங்கள். பெரும் வலிகளில் தோன்றிய தொன்மங்கள். அவற்றைபோன்ற நிலையான, நிபந்தனையற்ற உறவுகள் பல கொண்ட மனிதர்கள் அவர்கள்.

'குலதெய்வம் கூட
பேய்களோடு எங்களுக்கு நெருங்கிய தொடர்புண்டு
எளிதில் வசப்படும் இவை எல்லோரையும் பயமுறுத்தும்'

மேலும் அவை 'பேச்சுல கத்திவைக்கிற சவங்க'ளைப்போலவோ, சில 'மகரபூஷண'ங்களை போல் அடங்கியிருக்க எதிர்பார்ப்பவையோ கிடையாது. காட்டுத் தெய்வங்களோடு அன்யோன்யமாய் சண்டையிடுவது எந்தவிதத்தில் பக்தி யோகத்தில் சேராமல் போனது?

'பசி தீர்க்க பனையாய் மாறிய காளியம்மையென
மஞ்சணையிட்டு தொழும்பக்தி'

இடி விழுந்து அது கருகியபின்னும் தொடர்வது.

தேங்கிவிடும் சிலரின் எண்ணங்களை தாக்கச் செய்கிறதாலேயே முக்கியத்துவம் பெறும் கவிதைகள் சில இதில் உண்டு. அடிவாங்குவது 'பிச்சயெடுத்திட்டு கண்டும் காணாம போறது' போன்ற பொது புத்திகளும்தான்.

'வரலாறு சொல்லச் சொல்ல
நீ கொடுத்த வன்மையான முத்தத்தின்
கணக்கெண்ணி முடியவில்லையென்
கறுத்த பெண்ணே'

ஊடலின் காதலின் உறவுகளோடான தருணங்கள் இயல்பாக பதிவாகும் கவிதைகள். விளையாட்டான வார்த்தைகள் இடம் பார்த்து அமர்ந்திருக்கின்றன.

'அவள் எனக்கு பசி தீர்த்தவள்
நீ காமம் தீர்த்தவள்
எருமைபோல வளர்ந்தநான்
அவளுக்கு குழந்தை

எனக்கு என்னைப் போலல்லாத
ஒரு பிள்ளை வேண்டும்

பற்றியெரிகிற தீயை
புணர்ந்து அணைக்கிற அன்பு மனைவியே

ஓங்கிய கையை நிறுத்திவிடு
மூச்சுத் திணறுகிறது

சூசகமாய் ஒருவார்த்தைசொல்

சோற்றில் விஷம் வைத்து
என் அம்மாவைக் கொன்று விடுகிறேன்'

ஊர் வளர்ந்து நிறைய மாற்றங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இயல்பிலிருந்து பிறழும் காரியங்களே இயல்பாகையில், தான் வளர்ந்த விதத்தின் மீதுள்ள பிடிப்பு வெளிப்படும் விதம். கற்றல் தொலையும் அவஸ்தை. நிலையின்மை.

'மகன் ஒரு விளையாட்டுக்கார் வாங்கிக் கேட்கிறான்
அது குளிர்சாதனம் பொருந்திய
கண்ணாடிப் பெட்டிக்குள்ளிருக்கிறது
பாம்புத் தோலில் நானொரு தாளம் செய்துகொடுக்கிறேன்
அவனொரு நாய் பொம்மை வாங்கிக் கேட்கிறான்
எருக்கலம் புதருக்குள்ளிருந்து
ஒரு நாய்குட்டியைக்கொண்டுவந்து கொடுக்கிறேன்
அது அவன் பின்னால் வாலாட்டிக் களிக்கிறது மேலும்
அது மோப்பம் பிடிக்கக் கற்றுக்கொடுக்கிறது'

'சீராக இயங்கிக்கொண்டிருக்கிறது காடு
காட்டை கலைக்கின்றன திடீரென மிருகங்கள்
மூதாதைகள் வண்டுகளாகப் பறந்துவந்து
ஆழ்ந்து குடைகின்றனர்
மூங்கில் தடிகளின் வரி ஊளையிட்டுச் செல்கிறது
பேய்க்காற்று இனிமையான அதிர்வுகளுடன்
மரங்களுக்குள் பதுங்கியிருக்கும் அற்புதங்கள்
பட்சிகளின்குரல்களை பலவிதமாய் எழுப்புகிறது
குரங்கு தன்மனைவிக்கு பேன்பார்க்கவும்
கரடி தன்இணையோடு சேரவும் விளிக்கும்
மர்மம் நிறைந்த குரல் பாறையை சென்று தட்டி
கபாலம் வந்து விழுகிறது
குதிரைகள் கூட்டமாய்குதித்தாடிப் பாடியோடுகிறது
காட்டெருமைகளைப் போல
கால்களில் தாளங்களை சிதறவிட்டு
பறவைகளின் தாளங்கள் சிறகுகளிலிருந்தும்
மிருகங்களின் தாளங்கள் கால்களிலிருந்தும்
பலவாறாய் எழுகிறது
காட்டின் சமன் குறைகிறது'

'அணில் அழகானது' என்பதும் 'ஓணான் அழகற்றது' என்பதும் மட்டுமே எல்லா இடங்களிலும் பிரச்சனைகளின் காரணமாயிருக்கிறது.

'தங்கள்கணக்குப் புத்தகங்களில்
நியதிக்குபதில்
கறுப்பர்களைக் கொல்லுகிற
விஷக்குப்பிகளை அடுக்கி'வைப்பவர்கள் அவ்வப்போது வந்து போகிறார்கள். தொடர்ந்து இருக்கச் செய்கிறார்கள்.

'இன்று அல்லது இப்போது அல்லது இந்த நொடியில்
ஏதேனும் ஒன்றிங்கு நிகழப்போகிறது
சமூகத் துரோகியென்றோ
அனாதைப் பிணமென்றோ தூக்கியெறிய
அவர்கள் எங்களை
மிகக் கடினமாகவோ அல்லது ஒரு
சுண்டெலியைப் போலவோ நசுக்கக்கூடும்
அல்லது நாங்களொரு
பயங்கரமான கொலையாளியாக மாறவேண்டும்
ஏனெனில்
எதற்கும் துணிந்து விட்ட நாங்களிந்த நாட்டில்
நிம்மதியாக வாழ வேண்டியிருக்கிறது'

'எங்களை நோக்கியந்த திட்டமிட்ட குற்ற விரல் நீளுகிற போது
இரும்பு விர ல்கொண்ட ஏகலைவனை
எனது முதல் மாணவி தேடுகிறாள்'

அப்படி எத்தனை இன்னல் வந்தாலும் வாழமுடியும் என்ற நம்பிக்கை வெளிப்படும் வரிகள். சவால் விடும் தைரியம். இன்னும் கூட ஏகலைவன் இருக்கச் செய்கிறான். ஆனால், அவன் முடவனல்ல. திறன், திறமை இருக்கும் வரை அவன் முழுமையானவன். என்றென்றும் நிலைத்திருப்பான்.

'குருவாயூரில் ஒரு கருங்குயில்
பாடச் சென்றது
அதன் நிறம் பிடிக்காமல்
ஓட்டியடித்தன கல்த்தூண்கள்
குரலுக்கேது நிறமெனக் கேட்டொரு
கம்பீர நாட்டையிலிருந்து கண்ணீர் ஒழுகி
வரலாறை மூழ்கடித்தது
அதில் மூச்சுத்திணறிக் கொண்டிருந்ததொரு
புராதன ஓடம்
முப்புரிச் செவிகள் வர்ணம் பார்க்கின்றன
பாம்பெனக் கிடக்கும் கல்மெத்தையில்
பாடிக் களிக்கின்றன பல்லிகள் எலிகள்
பாச்சாக்கள் வெளவால்கள்
அதன் ஏகாந்தம் கலையாமலிருக்க
அசையாமல் கிடக்கிறான் அனந்தன்
பொதுவிலின்னும் உதிக்க மறுக்கிறது
அனந்தபுரிகோட்டைச் சூரியன்'

அந்தக்குயில் தனக்காக மட்டுமேனும் பாடிக்கொண்டிருக்க மனம் வேண்டுகிறது. அப்படியானால், என்றேனும் ஒரு நாள் எல்லோர் மனதிலும் சிம்மாசனம் போட்டு அமர்வாள் அவள்.

'வேட்டையாடி தின்றுகொண்டிருந்த
வேலனுக்குத் தெரியும்
தேவயானையைக் காண்பித்து
ஆருடத்தைத் தட்டிப்பறித்தகதை.
இப்போது குறத்தி சொல்வது குறி
சுப்ரமண்யர்கள் சொல்வது
ஜோஸ்யம்'

தொகுப்பின் கடைசி கவிதை எத்தனையோ விதங்களில் முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு பிரிட்டீஷ் காலத்துக்கு முந்தைய காட்சியாக என் மனதில் அந்த சித்திரம் எழுந்தது. அது அங்கிருந்து வரலாற்றை, அந்த ரத்தத்தை என் வீட்டு வாசல் வரைக்கும் கொண்டுவந்து கொப்பளிக்கவிட்டது. மனுஸ்மிருதியோடு தேங்கிவிட்ட எல்லாவற்றையும் ஒரு வெள்ளம் வந்து அடித்துக்கொண்டு போக வேண்டியிருக்கிறது. சிறுசிறு துண்டுகளாக்கக்கூட நம்மால் முடியாதா என்ன? கல் விளக்குகளில் தூண்டப்பட்ட தீயில் பார்வையின் எல்லைக்குள் வரும் எல்லாம் தெரிகிறது. இதில் நமது பங்கை நாம் தெரிந்து கொள்வது இன்றியமையாதது.

'ஒரு கலையம் கஞ்சிக்காய்
தீண்டல் துணி கழுவியும்
யோனியைப் பறி கொடுத்தும்
பூப்பு வரி கட்டியும்
மாறாப்புப் போடமுடியாமல்
மானங்கெட்டுச் செத்தயெங்கள் பெண்டுகளும்
திருகியெறியப்பட்ட முலை தேடி
வதைபட்டு செத்தவர்களும்தான்
எங்கள் தலைமூத்த அம்மைகள்
இவர்களின் விந்துகளில் விழுந்த
வெட்டுக்களும் கீறல்களுமாய்
பிறப்புரிமைத் தேடியலையும்
நாங்களும்
எங்கள் இனியும்'