1) எரிச்சல்
நூற்றுக் கணக்கான செடிகளின்
நூற்றுக் கணக்கான மலர்களின்
நூற்றுக் கணக்கான தேனீக்களின் சேகரிப்பின்
ஒரு சின்னத் தேக்கரண்டியின் அளவிலான
தேன்
தரையில் சிந்தி விட
பழைய செய்தித்தாளின் சிறு துண்டு கொண்டு
அதைத் துடைத்து
குப்பைத்தொட்டியில் வீசுகிறேன் நான் -
மீதமிருக்கும் கையின் பிசுபிசுப்பு
எரிச்சலூட்டுவதாய் இருக்கிறது
~*~
2) உரையாடல்கள்
குரல்கள் - சப்தங்கள் -
குரல்கள். சுற்றிலும். எங்கும்.
எல்லோரும் எப்போதும் எதாவது
பேசிக்கொண்டே இருக்கிறார்கள்
பேசுவதற்காய் எத்தனை எத்தனை
விஷயங்கள் உள்ளன இவர்களுக்கு?
சில குரல்களினூடே சிரிப்புச் சத்தம் -
சிலவற்றின் ஊடே விசும்பல்களும் கண்ணீரும்
சில குரல்களினூடே கோபம்
குரல்கள் மாறி மாறி ஒலித்துக் கொண்டே இருக்க -
நடு நடுவே ஐஸ் வண்டியின் மணிச்சத்தம் -
விரையும் கார்களின் மோட்டார் சத்தம் -
பொறுமையின்மையின் கார் ஹாரன்கள் -
குழந்தைகள் கூவியவாறே விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்
விற்பவர்களின் கூவல்கள், இடைச்செருகல்கள் -
குழந்தைகளும் தாய்மார்களின் பேச்சொலி -
உலகம் மொத்தமும் பேசிக்கொண்டே இருக்கிறது -
எல்லோர்ருக்கும் எப்போதும்
உடன் பேசிக்கொண்டேயிருக்க யாரோ இருக்கிறார்கள்
வெள்ளைச் சட்டை அணிந்த முதியவர் ஒருவர்
அத்தனையையும் பார்த்தவாறேயும் கேட்டவாறேயும்
மொட்டை மாடி வெயிலின் நாற்காலியில் அமர்ந்து இருக்கிறார்
அவர் தனியாகவே இருக்கிறார் -
உடன் பேச யாருமே இல்லாத போதும்
அவர் தன்னுடனேயே பேசிக் கொண்டிருப்பது -
அவரது தலையின் அசைவிலிருந்தும் - கைகளின்
அசைவிலிருந்தும் தெரிகிறது.
நீண்ட ஒரு உரையாடலை அவர்
தன்னுடனேயே முடித்துக் கொண்டு - தன்னுடன்
தான் செய்து கொண்டிருந்த விவாதம்
முடிவு ஏதுமின்றி முடிந்து விட - மிக்க அதிருப்தியுடன்
கீழே இறங்கிச் சென்று விடுகிறார்.
மொட்டை மாடி வெயில் அப்படியே இருக்கிறது.
அவர் இல்லாத வெற்று நாற்காலியும்
அப்படியே இருக்கிறது -
நாற்காலியின் நிழலும் இருக்கிறது - அவரது
நிழல் இப்போது இருக்கிறதா இல்லையா -
தெரியவில்லை.
யாருமற்ற மொட்டை மாடியின் வெயிலில்
இப்போதும் நடந்து கொண்டேயிருக்கிறது -
ஒரு உரையாடல் -
எப்போதும் போலவே.
~*~
3) சொற்கள்
எல்லோரும் வந்திருந்தனர்.
வந்திருந்த எல்லோரும் -
அவரவர் பங்குக்கு
ஏதேதோ சொல்லி விட்டு -
கடமை முடிந்த திருப்தியுடன்
வீடு சென்று விட்டனர்.
இப்போது, இங்கே இந்த
இரவும் நானும் மட்டுமே.
அவர்கள் அனைவரும்
சென்று விட்ட போதும்
அவர்களின் சொற்கள்
என்னைச் சுற்றி மிதந்து கொண்டே
இருக்கின்றன -
தனித் தனியாயும், குழுக்களாயும் -
கண்ணாடித் தொட்டியினுள்ளே நீந்தும்
மீன்களின் தனிமையின் சாயல்கள் கொண்டு -
இறக்கைகள் இல்லாததால்
அவர்கள் விட்டுச் சென்ற சொற்களால்
இங்கிருந்து விடுதலை பெற்றுப் பறந்து
சென்று விடவும் முடியவில்லை -
அனைத்து சொற்களும் - அங்கேயும் இங்கேயுமாய் என்னைச் சுற்றிச்
சுற்றி
மிதந்து அலைந்து கொண்டிருக்கின்றன.
இந்த அறையை நிரப்பும் தங்க நிற ஒளியில்
மிதக்கும் சொற்களின் நிழல்களில், அந்த
சொற்களின் அர்த்தங்கள் தேடியவாறே
அமர்ந்திருக்கிறேன் நான்.
4. சத்தியமாய் இப்போது ஓரு பொய் வேண்டியிருக்கிறது
சத்தியமாய் இப்போது ஓரு பொய் வேண்டியிருக்கிறது -
இப்போது செய்வதற்கோ சொல்வதற்கோ எதுவுமே இல்லாததால்
உண்மைகள் இப்போதும் உண்மைகளாகவே இருக்க -
உண்மைகளின் உண்மை அலுத்து விட -
உடனடியாய் இப்போது ஒரு பொய் வேண்டியிருக்கிறது.
எப்போதும் யாரும் சொல்லியிராத -
எப்போதும் யாருமே கேட்டிராத -
ஒரு புத்தம் புதுப் பொய் வேண்டியிருக்கிறது இப்போது.
ஒரு பூ பூப்பது போல -
இடி இடித்து முழக்குவது போல -
மின்னல் வெட்டி வெட்டி மறைவது போல -
பறவைகள் சிறகடித்து இங்கிருந்து அங்கேயும்,
அங்கிருந்து இங்கேயும் - பறந்து பறந்து
சென்றும் வந்தும் கொண்டிருப்பது போல -
செய்ய எதுவுமேயில்லாத போதும் நகர்ந்து கொண்டேயிருக்கும்
இந்தக் கணம் போல -
இருந்தும் இல்லாமல் இருக்கும் என் இருப்பைப் போல -
இயல்பானதாய், மிக இயல்பாய்
நிகழ வேண்டும் அந்தப் பொய்.
சொன்ன உடனேயே அதை யாரும் நம்பி விடக் கூடாது -
"அது ஒரு பொய்யோ?" என்றெண்ண வேண்டும் அனைவரும்
அந்தப் பொய் மீண்டும் மீண்டும் சொல்லப்பட
அதை அனைவரும் மெல்ல மெல்ல நம்பத்
தொடங்க வேண்டும்
மீண்டும் மீண்டும் சொல்லப்பட -
அந்தப் புத்தம் புதிய பொய், அது இயல்பானதொரு
நல்ல பொய் என்பதால் -
அனைவராலும் நம்பப் பட வேண்டும் -
அப்போது அந்தப் பொய் - இன்னுமொரு உண்மையின்
உருப் பெற்றிருக்கும் -
இவ்வாறாய், புதிதாய்ப் பிறந்திட்ட அந்தப் பொய் -
மேலும் பொய்யாகவே இருந்திட முடியாமல்
ஒரு அங்கீகரிக்கப்பட்ட உண்மையாகவே மாறியிருக்கும் -
அதை அனைவரும் நம்பியிருக்க -
அது ஒரு பொய்யே இல்லை - அப்பட்டமான
உண்மை என்பர் அனைவரும்.
அப்போதும் உண்மைகள் அனைத்தும் -
உண்மைகளாகவே இருக்கும்.
சற்று முன்னே பிறந்திருந்த, நம்பக் கூடிய, எல்லோராலும்
நம்பப்பட்ட பொய்யும் சேர்த்து -
உண்மைகள் அனைத்தும் மீண்டும் அலுப்பூட்டுவனவாய்
இருக்கும் -
மீண்டும்.
மீண்டும்.
மீண்டும்.
மீண்டும் அப்போது -
சத்தியமாய் இன்னொரு
பொய்யின் தேவை
பிறக்கும்.
ஒரு புத்தம் புதிய பொய் -
எப்போதும் யாரும்
சொல்லியிராத -
எப்போதும் யாருமே
கேட்டிராத...