அனல் தெறிக்கும் வளி ஏகும்
வாகனங்களைத் தேற்றி ஓடி
வரும் பசுந்
திரள்
காவிரி
தலை நிமிர்ந்தால் அரங்கன் அருள் பாலிக்கக் கோபுரம்
வெடித்த நில மீறி
உயர்ந்த பனைகள்
ஒரு நூறேனின் முறிந்த பனைகளில்
முன் நகர்ந்து குழம்பும் அணில்
எட்டா இலக்கு பனையேறும்
எழுதிய பாம்புகள்
உச்சி வெயில் உலோக முருக
ஒளிரும் காவிரிப் பாலம்
வெடித்த இளமாவின்
முதல் நறுமணம் நாசியில் ஏறும்
நுழை வாயில்
முன் காலெடுத்து பிச்சை கேட்கும் கோயில் யானை
சிர மேல் கரம் தொட்டு வாழ்த்த
உடல் விரைக்க ஒடுங்கும் சிறுவன்
கற்குவியலில் காணும் சிறு பாம்பு
அடித்துக் கொல்லும் இளம் பட்டர்
ஆயிரம் தலை தூக்கிய சேடன்
பரிவினால் அரங்கன் பள்ளி
ஆண்டுகள் சில நகருமுன்
உறவுகள் தழுவி நின்ற காற்று
நுரையீரல்
நனைக்கும்
முறிந்த பனை போலச் சரிந்து விட்ட சொந்தங்கள்
அரங்கா துயில் நீ எனும் பட்டர் இசைக்க
செவி ஏறும் பண்
உயர் சாளரம் வழி விழி காண
நலுங்கும் கோவிலின் பொற்கலசம்