நிழல் தரும் மலர்ச்செடி - சேயோன் யாழ்வேந்தன்

. Last shadow by tgphotographer

நிழல் தரும் மலர்ச்செடி
இடையில் சிறுத்த
கரிய
அழகிய
அதன் நிழலுக்காகத்தான்
அந்தச் செடியை
நான் வாங்கினேன்
நிழலில் கூட அது
கறுப்பு மலர்களை
பிறப்பித்திருந்தது
நிழலுக்காகத்தான்
அந்த மலர்ச்செடியை
நான் வாங்குவதாக
உன்னிடம் சொன்னபோதே
மர்மப் புன்னகை
பூத்தாய்
செடியை நான்
மடியில் வைத்து
பேருந்தில் அமர்ந்தபோதுதான்
பார்த்தேன்
நிழலின்றிச் செடி
அம்மணமாய் இருந்ததை.
உடனே நான்
உன்னிடம் ஓடி வந்தேன்
செடியை நீ
நிழலின்றி
கொடுத்ததைச் சொன்னேன்
வெட்கமின்றி நீ
வாய்விட்டுச் சிரித்தாய் -
இங்கேயும் இல்லை பார்
அச்செடி நிழலென்று.
பெண் வியாபாரத்தில்
ஆண் சொல்
அம்பலம் ஏறுமா?
சோர்வுடன் நான்
வீடு திரும்பி
வாசலில் செடியை வைத்தேன்
என் சோகம்
பொறுக்காமல்
மறைத்து வைத்திருந்த
நிழலை
விரித்துச் சிரித்தது
சிறு குழந்தைபோல்
செடி