குழப்பத்தில் எழுதிய கவிதை
வகுப்பறையில் சிரித்துப்பேசி
பாடம் நடத்தியதற்காக
துறைதலைவர் அவர் முகத்தை
எனக்கு அணிவித்தார்
வழக்கமாகப் பூசும் பவுடரை
கையில் வைத்துப் பார்த்துகொண்டிருக்கிறேன்
கவிதை எழுதுவதற்கென்றே
கண்டுபிடித்த புனைபெயரில்
ஏற்கனவே யாரோ
எழுதிக்கொண்டிருப்பதை அறிந்து அவசரமாக
அவரை இணையத்தில் தேடுகிறேன்
எழுதிய வரிகளில்
பிரபல கவிஞரின்
தாக்கம் இருப்பதுபோல் தோன்றவே
மீண்டுமொருமுறை அவர் தொகுப்பை
வாசிக்கத் துவங்குகிறேன்
தான் பார்த்த நீலப்படங்களில்
ஆண்களுக்குத் தடித்த குறி இருந்தது என்கிறாள்
நான் ஏக்கத்துடன்
என்னுடையதை நீவி கொடுக்கிறேன்
நண்பனின் பாணியில் நடந்ததாலேயே
என்று சொல்லி
அழுவதுபோல் சிரிக்கிறான்
பூங்காவில் தவறாகத் தோள் தட்டியவன்
இப்படித்தான் நேற்று யாரோ
என்னிடமே என்னைக் கேட்க
ஒருமுறை திரும்பிபார்த்து
'நான் தாங்க' என்றேன்.
காட்சி ஆட்டம்
காணும் காட்சிகளை
இழுப்பதும்
திருப்பி வைப்பதுமாக
விந்தி விந்தி வருகிறது கால்
இடது வலது
தவழ்ந்துவந்து இடதுகை
நீட்டிய பேத்தியை கிள்ளி
தன் வாழ்நாளின்
கடைசிப் பத்துரூபாயை
வலதுகையில் திணித்தாள்
படுத்தப் படுக்கையாயிருக்கும் பாட்டி
இவர்கள் இருவருடையதையும்
அள்ள வந்த
இடதுகை சூம்பியவன்
சரியாக வலதுகையை முதலில் நீட்டினான்
மஞ்சள் ரத்தம் தேவை
நாமக்கல் மற்றும் ராசிபுரம் பகுதிகளில்
மஞ்சள்நிற தட்டுப்பாடு
கடுமையாக நிலவிவருகிறது
மஞ்சப்பை தைக்க
மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்ய
அவள் பக்தைகளுக்குப் புடவை நெய்ய
லாரி ஆட்டோக்களுக்கு அடிக்க
நம்பர் பிளேட் எழுத
தாலிகயிறில் பூச
கட்சி கொடிக்கு
கறிக்கு
குழம்புக்கு
மஞ்ச நோட்டீசுக்கு
கோயில் நோட்டீசுக்கு
பருவப்பெண்னின் முகத்துக்கு
என எதற்கும்
எங்கேயும் மஞ்சள் இல்லை
காமாலையால் தாக்கப்பட்டவர்கள்
கடத்தப்பட்டார்கள்
மஞ்சள்நிற சிறுநீர்
லிட்டர் ஆயிரத்தை எட்டியது
ஊர் செல்வந்தர் ஒருவர்
தன் மகள் திருமணப் பத்திரிக்கைக்கு
மஞ்சள் தடவ
பேருந்தில் கைக்குழந்தையுடன்
பிச்சையெடுத்து கொண்டிருந்தவளை கொன்று
அவளது மஞ்சள் அட்டைகளைத் திருடினார்
இந்த லட்சணத்தில்
அடுத்த ஆட்சியில்
எல்லாப் பள்ளி கல்லூரி பேருந்துகளுக்கும்
சிகப்புநிறம் அடிக்கவிருப்பதாக
வெளங்காதவன் ஒருவன்
கிளப்பி விட்டிருக்கிறான்
வதந்திதான் என்றாலும்
எதற்கும் இருக்கட்டுமென்று
என் நண்பனுக்கு
போன் செய்தேன்
'நண்பா!
நீ ஓ பாசிட்டிவ் தானே?'