எங்கிருக்கிறாய்
என் தோழனே குசேலா
துவாரகை வனம்கிடக்கும்
தனியன் கிருஷ்ணன்தான்
எங்கிருக்கிறாய்
இப்போது
ஒருபிடி அவலை
எத்தனை யுகங்களுக்கு
மெல்வது?
நீல நரம்புகள் புடைத்து
தெறிக்க
பாதத்தில் இறங்கிய
பாணம்
பச்சை விஷத்தை மட்டும் ஏற்றிவிட்டு
நெளிந்து கிடக்கிறது
துருவேறி
மரணமும் கைவிட்டதோ உன்
மனத்திலும் என்
பெயறழிந்ததோ
திசையும் தொலைவும்
இருண்டதோ
காற்றுக்கும் என்குரல்
கசந்ததோ
உன்னை கண்டு சொல்ல
யுகாதி யுகங்களாய் மங்கைகள்
புலம்பும்
காதல் மொழிகளெல்லாம்
காற்றில் சாபமென
நெடியேறி
சூழ்ந்து நெறிக்கும்
குரல்வளையில்
குழலின் இதயம்தொடும்
சிறுதுளி காற்றுக்கும்
இடமில்லை
அவர்கள் ஓயாது உருகிவடிக்கும்
கண்ணீரெல்லாம்
ஒன்றுகூடியோடும்
யமுனையின் மறுகரையில்
என்றோ எனை கைவிட்டு கரையொதுங்கிவிட்டது
என் காதலின் மோட்சம்
பீலியின் கண்ணிலும்
பூவிழுந்துபோனது
நீலம் என்பதோ வெறும்
நினைவென்றானது
சாகாது துடிக்கும் நாகத்தின்
உடலை
சல்லடையென துளைக்கும்
ஆயிரம் எறும்புகள் நண்பா
மரணத்திற்கு குறுக்கே
நிற்கும்
மணித்துளிகள்
எங்கு திரும்பினும் காண்பது
யாசிப்பின்
கைகளே
எத்திசை காற்றிலும் தேவையின்
குரல்களே
போரும் வெற்றியும் போகத்தில்
உச்சமும்
ஆற்றலும் அதிகாரமும்
உறவும்
உரிமையும்
நலமும் பலமும் காமமும் ஞானமும்
எத்தனைகோடி சலிப்புறு
சில்லறைகள்
மன்னன் நான்
மைத்துனன் நான்
காவலனும் காதலனும்
நானேதான்
சாரதி நான் சகலமும் நான்
செயலும் செய்வினையும்
சூத்திரமும் சமைத்துண்ட
பாத்திரமும்
நானே
யாரும் குறைசொல்ல ஏசிச்
சாபமிட
எஞ்சிய கற்றூண் மட்டும்நான்
எனக்கென என்ன தருவாய்
என்று நான்போய் கேட்க
யாருண்டு உன்னைவிட்டால்
நானே தொடங்கிய விளையாட்டென்றாலும்
தானே முடியும்வரை விடுதலையில்லை
பொம்மைகளால் கைவிடப்பட்ட
பிள்ளையென ஆகிவிட்டேன்
குசேலா
நீள்கடல் துறையைநான்
நீந்தித்தொடும்
நாள்வரையில்
கொறித்து மெல்வதற்கு
மீண்டும்
ஒருபிடி அவல் கொண்டு வருவாயா?