நிழல் தேடி - கனவு திறவோன்

நிழல் தேடி நீண்ட தூரம் 
போனேன்

அழகழகு ஜன்னல்கள்
வாசல்கள்
வேய்ந்த வீடுகள்
எங்கும் நிழல்
நுழைய அனுமதி இல்லை

பசுமை காக்க
தெருவில் நின்ற மரங்களை
அகற்றி
தேரியில்
நட்டதால்
தெருவெங்கும்
இலைகள் இல்லை
ஈரம் இல்லை
நிழலும் இல்லை

குடைக்குள் ஒழிந்த
சன் ஸ்க்ரீன் பூசியத் தேகங்கள்
நிழல் தேடி வானத்தை
மீண்டும் மீண்டும்
பார்க்கின்றன
மேகமுமில்லை
சூரியனுமில்லை
ஆனாலும் 
நிழலுமில்லை

ஊருக்குக் கிழக்கே
ஒற்றை மரத்தின் கீழே
சருகுகளும் நிழலும்
விரவிக் கிடந்தன
தேடியது கிடைத்தது
தேகத்தைக் கிடத்தினேன்
சருகுககள் 'குசுகுசு'வென்று
பேசியது கேட்காமல்
தூங்கிப் போனேன்.

உஷ்ணம் சுட்டெரிக்க
எழுந்தேன்
கம்பிகளாய் நிழல்
அங்கும் இங்கும் நீண்டு
கிடந்தது
மரத்தில் மீதமிருந்த
இலைகள்
ஒன்றிரண்டு
வானுக்கு 'டாடா'
காட்டிக் கொண்டிருந்தது
என்ன நடந்தது?
எழுந்து நடந்தேன்
மீண்டும்
கருகத் தொடங்கியிருந்தச்
சருகுகள்  
காலைப் பிடித்துக்
கெஞ்சின
'நீயாவது நிழல் தா' என்பது போல.

கொஞ்ச நேரம் வெயில் வாங்கி
நிழல் தந்து
மீண்டும்
நிழல் தேடி நீண்ட தூரம்
போனேன்