கவிஞர் தி.பரமேஸ்வரியுடன் நேர்காணல் (பா.சரவணன்)






இந்தப் பேட்டிக்காக கவிஞர் தி.பரமேசுவரியை சந்தித்த இடம், நகரின் பரபரப்புகளின் சுவடு கூட இல்லாமல், பெருநகரின் மையப் பகுதியில் இருக்கும் அவரது தாத்தா வாழ்ந்த வீடு. கவிஞர் தன் தாத்தா பயன்படுத்திய மரநாற்காலியில் அமர்ந்தார். அறையின் மூன்று புறமும் , கண்ணாடியால் மூடப்பட்ட அலமாரிகளுக்குள் செம்பழுப்பு சீருடையணிந்த ‘பைண்ட்’ செய்யப்பட்ட புத்தகங்கள் காவலர்கள் போல் அணிவகுத்திருந்தன. அறைக்கு முன்னாலிருந்த கூண்டிலிருந்து பல வண்ண வளர்ப்புப் பறவைகளின் மொழியில்லாப் பேச்சுகள் ஒலித்துக்கொண்டே இருக்க, பேட்டி தொடங்கியது

பா.சரவணன்: பிரசுரமான முதல் கவிதை…?

தி.பரமேஸ்வரி: இளந்தமிழன் என்ற பத்திரிகையில் என் முதல் கவிதை வந்தது. தமிழை அன்னைத் தமிழ் என்றும் சொல்கிறார்கள் கன்னி என்றும் சொல்கிறார்கள் என்பதைப் போன்ற கவிதை. +2 அல்லது கல்லூரி முதலாம் ஆண்டில் என்று நினைக்கிறேன். அதை என் தாத்தா (ம.பொ.சி) வீட்டுக்கு வருவோரிடமெல்லாம் சொல்லி மகிழ்ந்தார்.

பா.சரவணன்: முதலில் அதிக கவனம் பெற்ற கவிதை ?

தி.பரமேஸ்வரி: ஆனந்த விகடனில் ஒரு தொகுப்பு வெளியிட்டிருந்த கவிஞரின் கவிதைகளை வெளியிட்டுவந்தனர். என்னுடைய ஆறு கவிதைகள் , புகைப்படத்துடன் இடம்பெற்றன. அடுத்து உயிர்மையிலும் தாமரையிலும் வெளியான கவிதைகள் எழுத்தாளர்கள் கவனித்துப் பாராட்டிய  கவிதைகள்.

பா.சரவணன்: முதல் தொகுப்பைப் பற்றி…?

தி.பரமேஸ்வரி: நான் திருவண்ணாமலையில் பணியிலிருந்தபோது த.மு.எ.ச கூட்டங்களுக்குச் செல்வேன். அங்கு பவா. செல்லதுரை மற்றும் ரேணு கோபால், அன்பு ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. அவர் புத்தகக் கடை நடத்திக்கொண்டிருந்தார். அதற்குமுன் கட்டுரைகளையும் சங்க இலக்கியங்களையுமே அதிகம் வாசித்திருந்தேன். அப்போதுதான் நவீன இலக்கியங்களைத் தீவிரமாக வாசிக்க ஆர்ம்பித்தேன். பல புத்தகங்களைத் தேடித்தேடி வாசித்தேன். பவா.செல்லதுரை கடையிலிருந்தால் அவரும் புத்தகங்களை தேர்வு செய்ய உதவுவார். அப்போது நான் கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தேன். ஜெயஸ்ரீ ( மொழிபெயர்ப்பாளர்) வீட்டில் தங்கியிருந்தபோது என் கவிதைகளை வாசித்துக்காட்டினேன். அவர் பவாவிடம் என் கவிதைகள் நன்றாக இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். பவா கவிதைகளை கொண்டுவரச் சொன்னார். அடுத்தநாள் மிகுந்த ஆர்வத்துடன் கவிதைகளை ஒரு கோப்பில் போட்டு எடுத்துச் சென்றேன். கோப்பின் மேல், தி.பரமேஸ்வரி, முதுகலைத் தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி என்று எழுதியிருந்தேன். அவர் ‘கவிஞருக்கு எதுக்குங்க இந்த முகவரி’ என்று அந்த முகவரியை அடித்துவிட்டு , ஏழெட்டு பக்கங்களைப் பிரித்து படித்துவிட்டு , அப்படியே டைப் செய்யக் கொடுத்தார். என் கவிதைகள் புத்தகமாகப் போகின்றன என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. ‘ பவா ஒருதடவ படிச்சிப் பாருங்க’ என்றதற்கு ‘அதெல்லாம் நல்லாத்தான் இருக்கும்’ என்றார். அதுதான் ‘எனக்கான வெளிச்சம்’. முதல் தொகுப்பு என்னைப் பொறுத்தவரை சந்தோஷமான விஷயமாக மட்டுமே அமைந்தது. என் துயரம்,தனிமை,சந்தோஷம் ஆகியவற்றை எழுதி எழுதி ஒளித்து வைத்திருந்தவை கவிதையாயின.  

பா.சரவணன்: முதல் தொகுப்புக்குப் பின் உங்கள் கவிதையில் மாற்றங்கள் ஏற்பட்டதா?

தி.பரமேஸ்வரி: என் இரண்டாம் தொகுப்பு ‘ஓசை புதையும்வெளி’ வெளியான போதுதான் கவிதையை எப்படி எழுதவேண்டும், அதில் என்னென்ன உத்திகள் இருக்கின்றன, அவற்றை எப்படிப் பயன்படுத்துவது , உத்திகள் மட்டுமே கவிதையாகி விடுமா போன்ற கேள்விகள் என்னுள் தோன்றின. இந்தக் கேள்விகளுக்கு யுவபாரதி மணிகண்டனுடனும், ச.விஜயலட்சுமி இருவருடனுமான உரையாடல்கள் மிக முக்கியமானவை.இன்றைக்கு வரைக்குமான என் வளர்ச்சியில் இவர்களுக்குப் பெரும் பங்குண்டு. அரசியல், சமூகம் பெண்ணியம், வரலாறு, தத்துவம் என பல விஷயங்கள் பற்றியும் தொடர்ச்சியான விவாதங்களை இவர்களுடன் நிகழ்த்தியிருக்கிறேன். அப்போது முகநூலில் இயங்க ஆரம்பித்திருந்தேன். கவிஞர் பொன்.வாசுதேவன் நிறைய கவிஞர்களின் கவிதைகளை முகநூலில் பகிர்வார். என் இலக்கியப் பயணத்தில் அதற்குமொரு பங்குண்டு.. ஒரு விஷயத்தை வெவ்வேறு கவிஞர்கள் எப்படிப் பார்க்கிறார்கள், எப்படிப்பட்ட மொழியைப் பயன்படுத்துகிறார்கள், படிமங்களை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கவனிக்கத் தொடங்கினேன். இதை அறிந்து செய்யவில்லை, என்னை அறியாமல் என் மனதுக்குள் அது ஊடுருவி இருந்தது. மூன்றாம் தொகுப்பு , முந்தைய தொகுப்புகளிலிருந்து  எந்த அளவுக்கு மாறியிருக்கிறது என்பதைக் கவனித்தேன். கவிதை என் வாழ்க்கையோடு எந்த அளவுக்குப் பிணைந்திருக்கிறது என்பதையும்  அப்போதுதான் உணர்ந்தேன். குடும்பம் சார்ந்த மனுஷியாக இல்லாமல் எழுத்து என் வாழ்க்கையாக இருக்கிறது என்பதையும், சமூகம் சார்ந்த மனுஷியாகவே பெரும்பான்மையும் இருக்கிறேன் என்பதையும் உணர்ந்த காலகட்டமும் அதுதான்.

பா.சரவணன்: நல்ல கவிதையை எப்படி வரையறுக்கிறீர்கள்?



தி.பரமேஸ்வரி: கவிதை என்றால் என்ன என்று மிகச் சரியாக என்னால் வரையறுக்க இயலாது. கவிதையைப் படிக்கும்போது அது என்னை ஏதோ ஒரு விதத்தில் பாதிக்க வேண்டும். ஒரே ஒரு வரியோ அல்லது வார்த்தையோ, கவிதைக்குள் என்னை ஈர்க்கிறது என்றால் அந்தக் கவிதையைத் திரும்பத் திரும்பப் படிக்கிறேன். கவிதையில் பயன்படுத்தப்படும் சொற்கள், அதன் வலிமை, சொல்லப்பட்ட முறை, வாசகனுக்கு உணர்வை கடத்தும் தன்மை ஆகியவற்றையே கவிதைக்கான இலக்கணமாகப் பார்க்கிறேன். காலம்கடந்தும் வெவ்வேறு சூழல்களில் ஒரு கவிதை நம் நினைவுக்கு வருகின்றதென்றால் , அதுவே அந்தக் கவிதையின் வெற்றி என்று  நினைக்கிறேன். தேவதேவன், நகுலன், ஆத்மாநாம் கவிதைகள் நான் திரும்பத் திரும்ப வாசிப்பவை. கவிதையின் பாடுபொருள் சார்ந்து ஒரே கவிதையில் காலத்தைத் தாண்டுபவர்களும் உண்டு. ”ஆவீன மழை பொழிய இல்லம் வீழ அகத்தடியாள் மெய் நோக அடிமை சாக’ என்று தொடங்கும் இந்த ஒரு கவிதை மூலம் கவிராயர் காலங்கள் கடந்து வாழ்கிறார்.

பா.சரவணன்: பிடித்த கவிஞர்கள் யார் யார்?…

தி.பரமேஸ்வரி: தமிழில் பலரது கவிதைத் தொகுப்புகளை நான் வாசித்திருக்கிறேன். ஏதேனும் ஒரு கவிதையாவது அதில் பிடித்திருக்கும். அந்தப் பட்டியல் மிகப்பெரியது. எனக்கு யாரையும் பிடிக்காது என்று கிடையாது. சிலரது கவிதைகள் எனக்குப் புரியாது என்றால் நான் ஒதுங்கிக்கொள்வேன்.

பா.சரவணன்: எழுத ஆரம்பித்தபோது அதிக தாக்கம் ஏற்படுத்திய கவிஞர்கள் யார்?

தி.பரமேஸ்வரி: எழுதத் தொடங்கியபோது பிடித்த கவிஞர் சுகுமாரன். இப்போதும் பிடிக்கும். அந்தச் சமயத்தில் அவரது சில கவிதைகளை மனப்பாடமாகச் சொல்வேன். அவரது கவிதைகளில் ஆழமும் எளிமையும் இருக்கும்.
யூமா வாஸுகியும் பிரான்ஸிஸ் கிருபாவும் எனக்கு மிகவும் பிடித்த கவிஞர்கள். அடிப்படையில் நான் உணர்ச்சிக்கொந்தளிப்பானவள். அன்பைத் தேடி ஓடுபவள். யூமாவும் பிரான்ஸிஸ் கிருபாவும் அன்பைப் பேசிப்பேசிக் கொல்லக்கூடியவர்கள். தீராமல் அன்பைப் பேசிக்கொண்டிருப்பவர்கள்.  ஒருகட்டத்தில் நகுலனும் ஆத்மாநாமும் வாசிக்கத் தொடங்கினேன். தோல்வியுற்ற மனநிலையிலும், அன்பின் சிக்கல்கள் நேரும்போதும் இந்த இருவரின் கவிதைகளும் என்னை ஆற்றுப்படுத்தின.
எல்லாக்காலத்திலும் என்னைத் தாங்கிப்பிடிக்கும் கவிதைகளாக, பெண்களின் கவிதைகளைத்தான்  சொல்லமுடியும். சுகிர்தராணி , உமாமகேஷ்வரி, சுகந்தி சுப்ரமணியன், சிவரமணி, தமிழ்நதி ஆகியோரை நான் திரும்பத் திரும்ப வாசிக்கிறேன்.

பா.சரவணன்: உங்களுக்குப் பிடித்த பிறமொழிக் கவிஞர்கள்…

தி.பரமேஸ்வரி: நான் படித்ததில் அன்னா அகமதோவா , சில்வியா ப்ளாத், மஹ்முத் தர்வெஷ் ஆகியோரைப் பிடிக்கும்.

பா.சரவணன்: காதல் கவிதைகள் ஏன் அதிகம் எழுதப்படுவதில்லை?

தி.பரமேஸ்வரி: காதல் உணர்வின் நீட்சி காமம். சங்க இலக்கியங்களில் காதலை,  காமம் என்றார்கள். இன்றைக்குப் பயன்படுத்தும் பொருளிலல்ல அக்காமமென்பது.  காதலைப் பற்றி பிரான்ஸிஸ் கிருபா நிறைய எழுதியிருக்கிறார், உருகி உருகி எழுதியிருக்கிறார். நான் முகநூலில் பார்த்துக்கொண்டிருப்பதில் நிறையபேர் எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அக்கவிதைகள் அந்த அளவுக்கு ஆழமாக இருக்கிறதா, கவிதையாக இருக்கிறதா என்ற கேள்வி இருக்கிறது.
 இன்னொரு விஷயம் என்ன தோன்றுகிறதென்றால், இன்று எல்லாரும் தெளிவாக இருக்கிறார்கள். உலகமயமாதலின் சகல துன்பங்களிலும் நாம் அழுந்திப் போய்க் கிடக்கிறோம். காதலும் வணிகமாகி விட்டது. முன்பெல்லாம் காதல் என்பது பேசி, பிறகு நட்பாகி, அதன் பிறகு காதலாகி, , அந்தக் காதலை கடற்கரையில் வளர்த்து… இன்றைக்கு அவ்வளவு நேரமே கிடையாது. ஃபாஸ்ட் ஃபார்வார்ட் காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் . பீட்சா சாப்பிடுவது போலத்தான் ஆகிவிட்டது காதலும். கடகடவென காதலைச் சொல்லி, உடனே காமத்துக்குப் போய் , பிறகு அது முறிந்தோ அல்லது கல்யாணத்திலோ முடிகிறது. அல்லது தொடங்கும்போதே ஆணோ, பெண்ணோ அல்லது இருவருமோ இது காமத்துக்காக மட்டுமே எனத் தெளிவாக இருப்பது. இப்படி எல்லாமே வேகமாக முடிந்துகொண்டிருப்பதும் காதல் பற்றிய கவிதைகள் குறைவாக இருப்பதற்குக் காரணமாக இருக்கலாம்.
காதலை மனதிற்குள் போட்டுப்போட்டு மறுகும்போதுதான் சொற்களாக வெளிப்படும். இன்று அதை நிறையப் பேசிப் பேசி வெளியேற்றிவிடுகிறோம். நம்  கையில் அலைபேசி இருக்கிறது. உடனே குறுஞ்செய்தியாக அனுபுகிறோம், அல்லது மணிக்கணக்கில் பேசுகிறோம். அதனாலும்  கவிதைகளுக்கான சந்தர்ப்பங்கள் குறைந்துவிட்டன.

பா.சரவணன்: ’நான்’ என்று ஆரம்பிக்கும் கவிதைகள் ஏற்படுத்தும் சிக்கல்கள் என்ன?

தி.பரமேஸ்வரி: தன்-மைய மனநிலைக் கவிதைகள் பெரும்பாலும் நானென்றே தொடங்கும்., தன்னை மையமாக வைத்து யோசிக்கும் எழுத்தாளர்களே பெரும்பான்மையும்.. கவனமாகத் திருத்தும்போது அப்படி எழுதிய ‘நான்’ என்பதை மாற்றுவோர் அதிகம். இதில் அதிகமும் சிக்கல் நேர்வது பெண்களுக்குத்தான். கவிதையில் வரும் நான் என்பது அந்தப் பெண்னைக் குறிப்பதாகவே வாசிக்கப்படுகிறது. அதில் வரும் முலையும் யோனியும் அந்தப் பெண்ணினுடையதாகவே கற்பனை செய்யப்படுகிறது. கவிதையை விடவும் அந்தக் கவிஞர்தான் அந்த இடத்தில் பிரதானப்படுகிறார். கவிஞரே அப்படி யோசிக்காவிட்டாலும், அதை விரும்பாவிட்டலும் பல இடங்களில் அந்த விபத்துதான் நேர்கிறது. அது பல சிக்கல்களுக்கும் இடம்கொடுக்கிறது.

பா.சரவணன்: இது வேண்டுமென்றே செய்யப்படுகிறதா…?

தி.பரமேஸ்வரி: ஒரு பக்கத்தில் இதை வேண்டுமென்றே செய்வதும் நடக்கிறது. இதன் மூலம் கிடைக்கும் கவனத்தையும் பரபரப்பையும்  பார்த்து, வேண்டுமென்றே பரபரப்பை உருவாக்கவும் கவனத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும் இப்படி எழுதுவதும் நடக்கிறது
வேண்டுமென்றே எழுதுபவர்கள் ஒருபுறம் இருந்தாலும், ‘நான்’ என்று ஆரம்பிக்கும் கவிதைகளைக் கொண்டு எழுதுபவரைத் தாக்குவதை  பல சமயங்களில் மூத்த எழுத்தாளர்களே செய்கின்றார்கள். எளிதாக வாசகரை கவிதையோடு அடையாளப்படுத்திக் கொள்ளக்கூடிய ‘நான்’ எனத் தொடங்கும் வடிவத்துக்கு இது ஆபத்தாக ஆகிவிடுகிறதே?

எனது கவிதைகளில் ‘நான்’ என்று எழுதும்போது பலமுறை அப்படி எழுதவேண்டாம் என்று அறிவுரைகள் வந்திருக்கின்றன. இப்படி எழுதினால் உன்னையும் அதோடு தொடர்புப்படுத்தி பேசுவார்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். ’நான்’ என்று எழுதாவிட்டாலும் பெண்கவிஞர்களைப் பொருத்தவரை ‘தடைசெய்யப்பட்ட பாடுபொருட்களைப்’ பாடினால் அப்படித் தொடர்பு படுத்துவார்கள். நான் எனத் தொடங்கும்போது சிக்கல் இன்னும் அதிகம். என் கவிதைகளில் சிலவற்றை தன்மை வடிவத்திலிருந்து ’அவள்’ என்று மாற்றியும் இருக்கிறேன் . பல கவிதைகளில் நான் என்பது மிகச்சரியாகப் பொருந்தியிருக்கும்போது அந்த வடிவத்தை அப்படியேதான் வைத்திருக்கிறேன். அதே சமயத்தில் திட்டமிட்டு அப்படி எழுதியதும் இல்லை.

பா.சரவணன்: ஃபேஸ்புக் கவிதைகளால் ஏற்பட்ட நன்மைகள், தீமைகள்…

தி.பரமேஸ்வரி: நான் இதை ரொம்ப நல்ல விஷயமாகத்தான் பார்க்கிறேன். அதிகாரம் உடைந்துபோயிருக்கிறது. எஃப்.பிக்கு முன்பு, நாம் ஒரு கவிதையை எழுதி, அனுப்பிவிட்டு, அந்தக்கவிதை வருமா வராதா எனத் தெரியாது. ஒவ்வொரு இதழாக வாங்கி வாங்கிப் பார்த்துக்கொண்டிருக்கவேண்டும். கவிதை பிரசுரமாகி இருந்தாலும் சிலர் சொல்லக்கூட மாட்டார்கள். பதிப்பாளருடன் நல்ல நட்பு இருந்தால் கவிதை வெளியாக வாய்ப்பு அதிகம் இருந்தது. இன்றைக்கு அப்படி இல்லை. யார் வேண்டுமானாலும் கவிதைகளைப் போடலாம். அதற்குள் நிறைய குப்பைகளும் வருகின்றன. ஆனால், நாம் எங்கோ இருந்துகொண்டு, எழுத்தின் மூலம் கவனப்படுவதும் இன்று முகநூலால்தான் வாய்த்திருக்கிறது. பெண்களுக்கு பெரிய வெளியைத் திறந்துவிட்டிருக்கிறது. சரியோ தப்போ அவர்கள் அதில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். புதிதாக எழுதுபவர்களுக்கு சிற்றிதழ்களில் உடனே எழுத வாய்ப்பு கிடைப்பதில்லை. முகநூலில் எழுதி கவனிக்கப்படுகிறார்கள். இன்று எல்லா பதிப்பாளர்களும், எழுத்தாளர்களும் முகநூலில் இருக்கிறார்கள். அவர்கள் பதிவுகளில் இருக்கும் கவிதைகளைப் படித்து நன்றாக இருக்கிறது என்று அவர்களிடமிருந்து கேட்டு வாங்கிப் போடுவதெல்லாம் நடந்திருக்கிறது.
அதன் மறுபக்கம் என்றால், எதுகவிதை என்றே தெரியாமல் வரிகளை மடக்கி மடக்கிப் போட்டு எழுதுவதும், அதற்கு நூற்றைம்பது லைக்களும், நூறு கமெண்ட்களும் வந்ததும் தான் பெரிய கவிஞர் என நினைத்துக் கொள்வதும் நடக்கிறது. அது தவிர்க்கமுடியாதது.
ஆனால் முகநூலில்  எழுதுபவர்கள் அனைவரையும் ‘ஃபேஸ்புக் எழுத்தாளர்’ என விமர்சனம் செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.

பா.சரவணன்: ஃபேஸ்புக்கில் எழுதுபவர்களில் உங்களுக்குப் பிடித்தவர்கள்..

தி.பரமேஸ்வரி: தொகுப்பு வருமுன்பிலிருந்தே சுஜாதா செல்வராஜைப் படித்து வருகிறேன். ஷாஹிதா, ஆனந்த் செல்லையா, சுகந்தி நாச்சியாள், இளமதி பத்மா, பா. சரவணன், கிருத்திகா ஸ்ரீதர், நிறம் வில்வம், சசிகலா பாபு, கமலி பன்னீர்செல்வம், அனிதா ஜெயக்குமார், கௌரிப்பிரியா என உடனடியாக இவர்கள் என் நினைவில் வருகிறார்கள். தொடர்ந்து இவர்களைப் படிக்கிறேன்.
.
பா.சரவணன்: தற்போது அரசியல் கவிதைகள் அதிகம் எழுதப்படுவதில்லையே, ஏன்?

தி.பரமேஸ்வரி: தமிழர்களுக்கு அரசியல் உணர்வு மிகவும் குறைவு என்பதை இங்கு வருத்தத்துடன் சொல்ல விரும்புகிறேன்.  தமிழகத்தின் வரலாற்றைச் சொல்லும் நூல்களுமில்லை; வருங்காலத் தமிழ்த்தலைமுறைகள் தம் வரலாற்றை அறிய வேண்டுமென்ற பிரக்ஞையுமில்லை.  ஈழத்துக் கவிஞர்கள் தொடர்ந்து அங்குள்ள சூழலைப் பதிவு செய்கிறார்கள். கவிதையென்றில்லை; நம் காலத்தின் பெரும் பதிவுகளைச் சொல்லும் சிறுகதைகளோ, நாவல்களோ கட்டுரை நூல்களோ எத்தனை எழுதப்பட்டிருக்கின்றன என்றொரு கணக்கெடுத்தால் நம் சிக்கல் விளங்கும்.

பா.சரவணன்: ஃபேஸ்புக்கில் கவிதை எழுதும் அல்லது எழுத முயலும் பல ஆண் கவிஞர்களுக்கு மூத்த மற்றும் சக கவிஞர்களின் வழிகாட்டுதலும் , விமர்சனமும் ஆதரவும் கருத்துப் பரிமாற்றங்களும் கிடைக்கின்றன. ஃபேஸ்புக்கில் கவிதை எழுதும் பெண்களுக்கு , மூத்த பெண்கவிஞர்களின் வழிகாட்டுதல், கருத்துப் பரிமாற்றங்கள் நடக்கிறதா?

தி.பரமேஸ்வரி: நாஞ்சில்நாடன், ஜெயமோகன் போன்றவர்கள் அவ்வப்போது கவனப்படுத்துவதைச் சொல்ல வேண்டும்.. தமிழச்சி தங்கபாண்டியன் பலரைத் தன் பேட்டிகளில் சொல்லியிருப்பார். குட்டி ரேவதி பெண்களை முன்னிலைப்படுத்தி ஆண் மையப்புனைவைச் சிதைத்த பெண் பிரதிகள் என்றொரு நூலை எழுதியிருக்கிறார். சுகிர்தராணி, குட்டி ரேவதி, தமிழ்நதி ஆகியோர் என்னை அலைபேசியில் அழைத்து கவிதைகள் நன்றாக இருக்கின்றன என்று சொல்லியிருக்கிறார்கள். சுகிர்தராணியுடன் கவிதை குறித்த உரையாடல்களைத் தொடர்ந்து நிகழ்த்தியிருக்கிறேன். பல நுணுக்கங்களை அவர் என்னுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
ஆனால், எனக்கு ஒரு வருத்தம் உண்டு; ஊடகங்களால் அதிகம் கவனிக்கப்படக்கூடிய பெண் படைப்பாளிகள், அடுத்து எழுதிக்கொண்டிருக்கின்ற ஆற்றலுள்ள பெண்களை அடையாளம் காட்டவேண்டும். அது அவர்களுடைய கடமையும் கூட என்பது என் கருத்து. தேவையான அளவுக்கு அவர்கள் சொல்லியிருக்கிறார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இந்த கவனம் இருப்பதாலேயே , எனக்கு வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் எனக்குப் பிடித்தவர்களைச் சொல்கிறேன்.

பா.சரவணன்: உங்கள் கவிதைகளைத் தொகுப்பாகப் படிக்கும்போது எப்படி உணர்கிறீர்கள்?

தி.பரமேஸ்வரி: நானறியாத என்னை எனக்கு என் கவிதைகள் அறிமுகப்படுத்துகின்றன. என்னைப் பாதித்த சில விஷயங்கள் ஏன் கவிதையாகவில்லை என்ற கேள்வியை எனக்குள்ளே பல முறை எழுப்பிக் கொண்டிருக்கிறேன். நான் தொடர்ந்து பயன்படுத்தும் சில சொற்கள், படிமங்கள், சில கவிதைகளின் ஒரே பாடுபொருள் நான் கவனிக்காத என்னை எனக்கு வெளிப்படுத்துவதை, மாற்றம் பெறும் மொழியை தொடர்ந்து கவனித்து வருகிறேன். என் கவிதைகளின் வழியே என்னைப் புதிதாகக் கண்டெடுக்கிறேன்.

பா.சரவணன்: ஆண் கவிஞர்கள் உரையாடும்போது தாங்கள் மேலானவர்கள் என்ற தொனியில் பேசுகிறார்களா?

தி.பரமேஸ்வரி: ஆண் கவிஞர்கள் என்னுடன் உரையாடும்போது நான் அப்படி உணர்ந்ததில்லை. ஆனால் வேறு தருணங்களில் கருத்து சொல்லும்போது, பெண்களைத் தங்களைவிட குறைவான இடத்தில்தான் வைக்கிறார்கள் என்பதை நான் பார்த்திருக்கிறேன். பெண்கள் எப்போதும் சுயபுலம்பல்களாக எழுதுகிறார்கள், குடும்பம் , கணவர், பிள்ளைகள் என்றே இருக்கிறார்கள் போன்றவற்றை குற்றச்சாட்டுகளாக வைக்கிறார்கள். நான் இந்த இசையைக் கேட்கிறேன் , அந்த இசையைக் கேட்கிறேன், இத்தனை உலக சினிமாக்களைப் பார்த்திருக்கிறேன், உனக்கு ஒன்றும் தெரியாது, நீ குண்டுசட்டிக்குள் குதிரைபோட்டிக்கொண்டிருக்கிறாய் என்ற தொனி இருக்கிறது. உடல் அரசியல் பேசும் கவிஞர்களைக் கொஞ்சம் உயர்வான இடத்தில் வைத்து, அவர்கள் தான் கவிஞர்கள் என்று பிரித்துப் பார்க்கும் தன்மையும் இருக்கிறது

பா.சரவணன்: தென் தமிழகக் கவிஞர்களுக்கு வடக்கை விட அதிகம் கவனம் கிடைக்கிறதா?

தி.பரமேஸ்வரி: தெற்கிலிருப்பவர்களுக்கு இயல்பிலேயே ஒரு உயர்வு மனப்பான்மை இருப்பதை நான் பல இடங்களிலும் கவனித்திருக்கிறேன். இலக்கியத்திலும் அது தொடர்கிறது. நான் காவிரித் தண்ணீர் குடித்து வளர்ந்தேன், தாமிரபரணியில் நீந்தினேன் என்றெல்லாம் பிதற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகம். புதிதாக எழுத வந்திருப்பவர்களிடம் இது ஆதிக்க மனோபாவமாகவே மாறிப் போயிருக்கிறது. வடக்கிலிருப்பவர்களுக்கு நல்ல மொழி கிடையாது, அங்கிருந்து நல்ல இலக்கியம் தோன்ற முடியாது போன்ற மொண்ணைவாதங்களை அவர்கள் பேசித் திரிகிறார்கள்.

பா.சரவணன்: இலக்கிய அரசியல் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறதா?

தி.பரமேஸ்வரி: குழு அரசியல் எப்போதும் எல்லாக் காலத்திலும் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. எழுத்தாளர்களுக்குள் சாதீயக் குழுக்கள் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. மேல்சாதி அரசியல் ஆதிக்கம் இருக்கிறது. நிலம் சார்ந்த அரசியலும் இருக்கிறது. இதழ், பதிப்பகம் சார்ந்தவர் என்ற அடையாளம் காட்டிக்கொள்ளும் அரசியலும் இருக்கிறது. தன் பகுதியிலிருந்து வரும் இளம் எழுத்தாளர்களைக் கிட்டத்தட்ட தத்தெடுத்துக்கொண்டு வாய்ப்புகள் பெற்றுத் தருவதும் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் பாராட்டுவதும் பதிலுக்கு அவர்களின் துதிபாடிகளாக இவர்கள் மாறுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

பா.சரவணன்: பெரிய ஆளுமையின் பெயர்த்தியாக இருப்பதால் பெற்றதும் இழந்ததும் என்ன?

தி.பரமேஸ்வரி: ம.பொ.சிவஞானத்தின் பெயர்த்தியாக ஒரு பிறவி கிடைத்ததை என் வரமாகவே கருதுகிறேன். அதற்காகக் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். வேடிக்கை என்னவென்றால், ம.பொ.சிக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையும் அன்பும் நான் எதிர்பார்க்காத பேரளவில் கொடுத்துத் திகைக்க வைக்கும்போது இதற்கு எனக்கு என்ன தகுதியிருக்கிறது என்ற எண்ணம் வரும். ம.பொ.சி மீது காழ்ப்பும் கோபமும் கொண்டவர்களிடமும் சிக்கியிருக்கிறேன். அப்போதெல்லாம் நான் என்ன செய்தேன் என்று வருத்தப்பட்டிருக்கிறேன். இப்போதெல்லாம் இரண்டையுமே சமமாக எடுத்துக்கொள்ளப் பழகி விட்டேன். இரண்டுமே எனக்கில்லையென்ற உணர்வோடே அணுகுகிறேன்.
ஆனால், பள்ளி, கல்லூரிக் கட்டுரைப் போட்டிகளில் கூட பரிசுபெற்ற என் கட்டுரைகளை தாத்தா எழுதிக் கொடுத்தாரா என்ற கேள்வியைச் சந்தித்து வருந்தியது போலவே இப்போதும் என் எழுத்து, பேச்சு ஆகியவற்றில் ம.பொ.சியைத் தேடுவதும் அவருடன் ஒப்பிடுவதும் நடக்கிறது. என் தனி வாழ்விலும் ‘ம.பொ.சி பேத்தி’ என்ற அடைமொழியை நான் முயன்றாலும் தவிர்க்க முடிவதில்லை.

பா.சரவணன்: விமர்சனங்கள் உங்கள் கவிதையைப் பாதிக்கின்றனவா?

தி.பரமேஸ்வரி: விமர்சனங்களை நான் வேண்டி விரும்பி வரவேற்கிறேன். அது என்னை மேலும் செழுமைப்படுத்துகிறது. நான் கவனிக்காத பக்கங்களைத் திறந்து செல்கிறது. ஆனால் சமீப காலங்களில் சரியான விமர்சனங்களையே செய்வதில்லையே. குழு மனோபாவத்தோடு ஒருவரை ஒருவர் தூற்றுவது நடக்கிறது. தப்பித்தவறி யாரேனுமொருவர் விமர்சிக்கும்போது குறை சொல்லிவிட்டால் அன்றிலிருந்து அவரை ஜென்மப்பகையாகக் கருதுவதும் அந்தக் குறைவுகளைச் சரிசெய்து கொள்ள வேண்டுமென்ற எண்ணமுமின்றி இருப்பதுமே இன்றைய போக்காக இருக்கிறது.

பா.சரவணன்: கிராமங்களிலிருந்து பெண் எழுத்துகள் பெரும்பாலும் வராமலிருப்பதற்குக் காரணமென்ன?

தி.பரமேஸ்வரி: நம் பாடத்திட்டத்திலிருந்து இலக்கியம் ஒதுக்கப்பட்டுக் கிடக்கிறது. எல்லோருக்கும் கிடைக்கும் வாய்ப்பிருக்கும் வணிக இதழ்களிலிருந்தும் நவீன இலக்கியம் ஒதுங்கியே இருக்கிறது. இதில் நகரம், கிராமமென்ற வேறுபாடு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நகரங்களிலேயே அரிதாகக் கிடைக்கும் இலக்கிய இதழ்கள் கிராமங்களில் கிடைப்பதற்கு வாய்ப்பில்லாமலே இருக்கிறது. அமைப்புரீதியாக இயங்கும்போது கிடைக்கும் அறிமுகத்தின்மூலமே இலக்கியத்துள் நுழைகிறார்கள். இன்றைக்கு கணினி இந்தச் சிக்கலை ஓரளவு தீர்த்திருக்கிறது என்று சொல்லலாம். முகநூல், பிளாக் எழுதுதல் போன்றவை எழுத்தின் மீது ஆர்வம் கொண்டுள்ள பலருக்கும் பெரிய வரம்.
கிராமமாயினும் நகரமாயினும் பெண்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருக்கிறது தானே. இதைச் சொன்னால் பலரும் மறுக்கக்கூடும். எழுதிக்கொண்டிருக்கும், தொடர்ந்து எழுதும் பெண்களின் எண்ணிக்கையைக் கவனித்தால் உண்மை விளங்கும்.

பா.சரவணன்: கவிதைகள் எதிர்கொள்ளும் புதிய சவால்கள்?

தி.பரமேஸ்வரி: பிற மொழிக் கவிதைகளை வாசிக்கும்போது, அவர்களின் பாடுபொருள் மலைப்பைத் தருவதாக இருக்கிறது. அண்மையில் வெளியாகும் தமிழ்க்கவிதைகளில் ஒரு தத்துவ வறட்சியையும் பெரும்பான்மையும் தன்-மையக் கவிதைகளாக மட்டுமே இருப்பதும் சற்றே சிந்திக்க வேண்டியவை. பேசப்பட வேண்டிய பல விஷயங்கள் இன்னும் பேசாமலே இருப்பதும் அதில் நாம் கையாள வேண்டிய புதிய உத்திகளையும் நவீன கவிதைகள் மக்களை விட்டு ஒதுங்கியிருப்பதை மாற்றிக் கொண்டு போவதையும் நம்முன் இருக்கும் சவால்களாகக் கருதுகிறேன். சங்க இலக்கியப் பாடல்களில் இயற்கை நம்முடனே பயணித்து இருக்கும். ஆனால் இன்று எழுதப்படும் கவிதைகளில் இயற்கையுமில்லை. சமூகச் சிக்கல்களுமில்லை.

பா.சரவணன்: கவிதை கடவுளின் இடத்தைப் பிடிக்குமா?

தி.பரமேஸ்வரி: கடவுள் இருக்கிறார் என்பதையே ஒப்புக்கொள்ளாத பெரும்பான்மையான எழுத்தாளர்களுக்கு மத்தியில், நீங்கள் கவிதை கடவுளின் இடத்தைப் பிடிக்குமா என்று கேட்கிறீர்கள். ‘தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்’ என்றுதான் ஞானசம்பந்தர் பாடியிருக்கிறார். சமய இலக்கியங்களில்  தமிழையும் சேர்த்துத்தான் வழிபட்டிருக்கிறார்கள். அப்படிப் பார்க்கும்போது , மொழியையும் இலக்கியத்தையும் கடவுளாகத்தான் நான் மதிக்கிறேன்.