பொம்மலாட்டத்து காளைகள் - ந.புஹாரிராஜா





இன்னமும் நினைவிருக்கிறது,
சைக்கிளும்,பால் கேனுமாய்
அண்ணாமலை ரஜினிகாந்த்
படம் போட்ட வாழ்த்து அட்டை
அனுப்பிய பால்ய நண்பனின்
பொங்கல் வாழ்த்து மடல்.
வாடிவாசல்லயே மடக்கலாம்னு
பார்த்தேன் அந்த செவல மாட்டை
முடியாமபோச்சுஎன
தொடை இடுக்கில் கசியும்
ரத்தத்தை உதறிவிட்டு,
பாலமேடு,அலங்காநல்லூர்
ஜல்லிக்கட்டுகளில் அள்ளி வந்த
பீராவையும் அண்டாக்களையும்
பற்றி அங்கலாய்த்துக்கொள்ளும்
மாமாவும் அவரது சகாக்களும்.

மசுரு வேணும்னா என்னய விட
அவ பெருசா வச்சுருக்கலாம்
என் வீட்டு முளைப்பாரிய விட
எவ பெருசா வளர்த்துருக்க போறா?’
பார்த்து பார்த்து முளைப்பாரி
வளர்க்கும் சிந்தாமணி அக்கா.
மனோகரியாய் மாறிப்போன
மனோகரன் அண்ணனுக்கு தான்
என்மேல எவ்வளோ பிரியம்.
பொம்மலாட்டத்து காளைகள்
முட்டிவிடும் என பயந்தாலும்
முட்ட விடமாட்டான் என்ற போதிலும்
முகம் புதைக்க தவறுவதில்லை
அவன் பாவடைக்குள்.
இப்படித்தான் இருந்தன ,
திரெளபதி அம்மன் கோவிலின்
பெரும்பாலான மார்கழி மாத திருவிழாக்கள்