சற்று காலத்துக்கு தமிழ்க் கவிதைகள் நீர்த்துப் போய் விட்டன என்று ஒரு புகார் நிலவியது. ரெண்டாயிரத்தின் பிற்பகுதியில் கவிதையில் புது பாணிகளோ
கருத்தாக்கங்களோ உருவாகவில்லை. மொழிபெயர்ப்பு வழி முன்பு நிகழ்ந்தது போல் அயல்நாட்டு
கவிஞர்கள் முழுவீச்சில் இங்கு அறிமுகப்படுத்தப்படவில்லை. தொண்ணூறுகளில் உச்சத்தில்
இருந்த கவிஞர்கள் பலர் இப்போது மெல்ல சமதளத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
முக்கியமான கவிஞர்கள் உரைநடையில் ஆர்வம் செலுத்தினர். இளம் கவிஞர்களுக்கு
முன்மாதிரிகள் இல்லாமல் ஆயினர். ரெண்டாயிரத்தின் பிற்பகுதியில் முகுந்த நாகராஜனைத்
தவிர குறிப்பிடத் தகுந்த அறிமுகங்கள் நிகழவில்லை என்ற விமர்சகர்கள் இது கவிதையின்
ஒரு இறங்குமுக காலம் என்றனர்.
இன்னொரு புறம் கவிதைகளின் எண்ணிக்கை பல மடங்கு பெருகியது. அதே வேளை
பத்திரிகைகள் கவிதைகளுக்கான கதவுகளை மூடின. கவிதை நூல்கள் விற்காது என்று கூறி பதிப்பகங்கள்
கவிஞர்களை வாசலிலே வைத்து திருப்பி அனுப்பினர். காகித விலை உயர்வும், நாவலுக்கு
ஏற்பட்ட அபரித மதிப்பும் கவிதையை எதிர்மறையாய் பாதித்தது. கவிஞர்களின் விமர்சனக்
கூட்டங்கள் நக்சலைட் ரகசிய சந்திப்புகளைப் போல் ஆயின. கவிதை மீது ஒரு ஏளனம்
பொதுவாக உருவாகியது. தமிழ்க் கவிதை மெல்ல மெல்ல தன் திசையை இழந்தது.
ஆனால் கடந்த இரு வருடங்களில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்து
வருகிறது. பல இளம் கவிஞர்கள் முதல் தொகுப்பிலேயே வாசகனை கவர்ந்தார்கள். சபரிநாதன்,
நீலகண்டன், கோசின்ரா, ஏ.ஏ.பைசால், மனுஷி போன்றவர்களை குறிப்பிடலாம். இந்த பட்டியலில்
விடுபடுகிற மேலும் பல முக்கிய அறிமுகங்களும் இருக்கலாம். கதிர் பாரதி தன் முதல்
தொகுப்பான “மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்” தொகுப்புக்காக சாகித்ய அகாதமியின் யுவ
புரஸ்கார் விருது பெற்றார். இன்மையின் இந்த முதல் இதழிலேயே சில
இளங்கவிஞர்களின் படைப்புகள் நல்ல தரத்துடன் உள்ளதை கவனிக்கலாம். பைசால் போன்ற இலங்கையை
சேர்ந்த புது கவிஞர்கள் ஈழக் கவிதைகளின் ரொமாண்டிக்கான ”போராளி” மரபை விடுத்து ஆத்மாநாம்,
பிரமிள், தேவதச்சனின் பாணிக்கு நகர்ந்துள்ளதும் உற்சாகமளிக்கும் போக்கு.
இனி நாம் செய்ய வேண்டியது இப்போக்கை தக்க வைப்பதும்,
வளப்படுத்துவதும். புரோமோஷன் வகை கூட்டங்களை விடுத்து கவிதை குறித்த ஆழமான விவாதக்
கூட்டங்களை நடத்த வேண்டும். தொண்ணூறுகளில் தமிழவன் எழுதியது போன்று கவிதைக்
கோட்பாட்டு கட்டுரைகளை நிறைய எழுத வேண்டும். அதேவேளை கவிதை பற்றின கட்டுரைகளை பூடகமான
அரூபமான மொழியில் அல்லாமல் நெகிழ்ச்சியான எளிய மொழியில் புது வாசகர்களுக்கு
புரியும் படியாய் எழுத வேண்டும். முன்பு போல் கணிசமான மொழிபெயர்ப்புகள் வெளிவர
வேண்டும். ரெண்டாயிரம் வருட ஆழம் கொண்ட தமிழ்க் கவிதையின் ஆணி வேர் வலுவானது. நாம்
செய்ய வேண்டியது புது வேர்கள் பட்டுப் போகாமல் காப்பது தான்.
-