ஓயாப் பெரு நடனம் 1 - ஆத்மார்த்தி





கவிதை என்பது கிறக்கமான சொல்.இந்த அளவுக்கு ஆயிரம் ஆண்டுகளைத் தாண்டி வேறோர் பதம் நிலைக்குமாவெனத் தெரியவில்லை. யாராவது ரெண்டாயிரம் ஆண்டுகளாக உயிரோடு இருப்பவர்களைக் கேட்டறிந்து கொள்ள ஆவல். எல்லா நிலங்களிலும் எல்லா மொழிகளிலும் கவிதை என்பது உச்சபட்சமான அங்கீகரிக்கப்பட்ட மேடையாகத் தொடர்ந்து வருவது தற்செயலல்ல.


கவிதை என்பது எல்லோர்க்குமான விருப்பமாக எப்போதும் நிரந்தரிக்கிறாற் போலத் தொனித்தாலும் உண்மையில் கவிதை என்பது கருணையற்ற மிருகமாகவே விளங்கி வருகின்றது. தமிழில் கவிதை மரபு குறித்தெல்லாம் இது எத்தனையாவது பத்தி என்றால் அயற்சியே தரும்.ஆனாலும் கவிதை எழுதுகிற ஆவலாதியில் கவிதை எழுதுகிறோம் என்ற நம்பகத்தில் இயங்கத் தலைப்படுகிற பெருவாரியானவர்கள் கூடக் கவிதை பற்றிப் பேசுவதையும் எழுதுவதையும் அவ்வளவாக விரும்புவதில்லை என்றும் தோன்றுகிறது. கவிதை குறித்த உரையாடலை விட்ட இட்த்தில் இருந்து நாம் ஆரம்பிக்க வேண்டி இருக்கிறது.

இது ஆத்மார்த்தி என்னும் ஒரு எழுத்துக்காரனின் பத்தி என்று எடுத்துக்கொள்ளலாம். அதனுள் இருபத்துச் சில்லறை ஆண்டுகளாகக் கவிதை என்னும் மகாபித்து ஒன்றைப் பிடித்துக் கொண்டும் அது எங்கே குணமாகி விடப் போகின்றதா என்று தனக்குள் கவலைப் பட்டுக் கொண்டும் திரிகின்ற வாசகன் ஒருவன் தான் உண்மையில் இந்தப் பத்தியை எழுதுவதற்குரிய முகாந்திரத் தகுதி கொண்டவன் என்னும் அடிப்படையில் ஒரு பத்தி முழுவதுமாய்க் கவிதை கவிதை என்று பேசப்போகிறதை இங்கே சொல்லி வைக்கலாம். இலக்கியக் கூட்டங்களுக்கான ஆகமங்களோ அல்லாது திறனாய்தல் கட்டுரைகளைச்சமைப்பதற்கான ரெசிப்பிகளோ எதுவுமற்று விட்டேற்றித் தனமான வாக்கியங்களால் முழுவதும் கட்டப்பட்ட கவிதை குறித்த ஒரு தொடர்பார்வை என்ற சத்தியத்தை மட்டும் செய்துவைக்கிறேன்.
தூரத்தே புணரும் தண்டவாளங்கள் அருகருகே வந்ததும் விலகிப் போயின”
 இந்தக் கவிதையை எங்கே வாசித்தேன் எனத் தெரியவில்லை. தொண்ணூற்றி மூன்றாம் வருடம் பன்னிரெண்டாம் வகுப்பில் பாஸ் செய்த பிற்பாடு வாழ்க்கையில் சிறிது பிரகாசம் தெரிந்தாற் போல இருந்தது. என்னவாவது செய்து எவனாகவாவது ஆகிவிடலாம் என்னும் நம்பிக்கை ஒரு மனிதனுடைய வாழ்வில் முதல்முறை ஏற்படுவதற்குச் சில சர்டிபிகேட்டுகள் தேவைப்படுகின்றன. அப்படி எனக்கும் அரசாங்கத்துக்கும் இடையே நடந்த இரண்டாவது சம்பிரதாயமான +2 தேர்வில் எதையோ மார்க்கு என வாங்கினாலும் தேறி இருந்தேன். அந்த நேரத்தில் மதுரை திருப்பரங்குன்றத்தில் இப்போது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கமாக இருப்பது அப்போது எழுத்தாளர்களுக்கு மாத்திரமாக இருந்த ஞாபகம். அவர்கள் குன்றத்து பேருந்து நிலையத்தில் ஒரு கரும்பலகையை நட்டு வைத்து அதில் தினமும் கவனம் கலைக்கக்கூடிய வரிகளை எழுதி வைப்பார்கள். அப்படி ஒருதினம் மேற்சொன்ன வரிகள் தான் அனேகமாக நான் வாசித்த முதல் நவகவிதை என்று சொல்வேன்; இதை எழுதிய கலாப்ரியாவை அந்த பஸ் பயணத்தின் போது அழகிய யுவதியாகக் கருதிக் கொண்டது வாழ்தலின் அறியாமை நமக்குக் கொடுத்தருளுகிற கொடைகளில் ஒன்று எனலாம்.
பின்னாட்களில் கலாப்ரியா மிக அதிகப் பரிச்சயம் உள்ளவராக மாறியதும் நிகழ்ந்தது. தமிழ்க் கவிதைகளில் தன் சித்துவிளையாட்டுகளை அடிக்கடி நிகழ்த்தி வைப்பவர் கலாப்ரியா.

“நின்றால்
நிலை இடிக்குமென்று கருதி
முழங்காலிட்டுத் தூக்குமாட்டிச் செத்துப் போனார் நண்பனின் அப்பா”
 என்னும் கலாப்ரியாவின் ஸ்னேகிதனின் தாழ்வான வீடு என்னும் கவிதையின் முடிவு வரிகள் நமக்குள் ஏற்படுத்துகிற அதிர்ச்சி பலமானது. பல தினங்கள் அந்தப் பெயரும் முகமுமற்ற நண்பனின் அப்பாவின் முழங்கால்கள் என் தூக்கங் கெடுத்தன. அவர் மரித்ததற்கான காரணங்களை நான் என் கற்பனா சக்தியின் துணைகொண்டு அதிகம் பட்டியலிட்டேன். கலாப்ரியாவின் இந்தத் தண்டவாளக் கவிதை நம்முன் வைப்பது அலாதியான ஒரு அனுபவம் அல்லவா..?
நேரடியாக தூரத்தே புணரும் தண்டவாளங்களையும் அவை அருகருகே வந்ததும் விலகிப் போவதையும் எத்தனை முறை பார்த்திருக்கிறோம்..? வெறும் காட்சிப்பிழையா..? கானல் நீர் என்று காலங்காலமாய் உருவகித்து வந்ததன் இன்னொரு மாற்றியமைக்கப்பட்ட வடிவமா இக்கவிதை..? இங்கே சொல்லப்படாத ஒரு ரயில் விரைதலில் தொடங்கி ஒருவர் பின் ஒருவராக விளையாடிக் களிக்கும் இரயில் நிலையத் தருணங்கள் வரை எவ்வளவு நீட்சியை இதன் காட்சி கொண்டதாயிருக்கின்றது..? ஒரு இரயில் நிலையத்தில் காத்திருத்தல் தொட்டு கைவிடப்பட்ட இரயில் பாதையைப் பிரித்தெடுக்கும் ஊழியனொருவனின் உணர்தல் வரை எத்தனை பெரிய அகன்ற காட்சியை இது தன்னகத்தே கொண்டிருக்கின்றது.? பூடகமற்ற வார்த்தைகளால் ஒரு கதைத்தன்மை கலந்த ரகசியமொன்றைச் சொல்ல முயலும் கலாப்ரியாவின் கவிதைமொழிக்கு இந்தக் கவிதை ஒரு சிறந்த உதாரணம்.

தாலியா ராவிகோவிட்ச் 68 வயது வாழ்ந்த இஸ்ரேலியக் கவிதாயினி. இவருடையசூழ்ச்சியறிந்த கரம்” (Wicked Hand) என்னும் கவிதை வாசிக்கிறவர்களின் மனதின் ஆழத்தில் கீறும் வல்லமை கொண்டது. எழுதிய மூல மொழி ஹீப்ரூ. அதன் ஆங்கில மொழிபெயர்ப்பை இங்கே பார்க்கத் தருகிறேன்.



இதன் ஈற்று வரிகள் சாதாரணம் போலத் தோன்றினாலும் மருட்சி தருவது நிசம்.
"அப்பா என்னை அடிப்பதை நிறுத்திவிட்டார்
 ஆனாலும் அந்தப் பயம் தொடர்கிறது.
எப்போதும் நிற்காது"
 A Wicked Hand
Dahlia Ravikovitch
Smoke rose in the slanted light
And my daddy was hitting me.
Everyone there laughed at the sight,
I’m telling the truth, and nothing but.
Smoke rose in the slanted light.
Daddy slapped the palm of my hand.
He said, It’s the palm of a wicked hand.
I’m telling the truth, and nothing but.
Smoke rose in the slanted light
And Daddy stopped hitting me.
Fingers sprouted from the wicked hand,
Its works endure and will never end.
Smoke rose in the slanted light.
Fear singes the wicked hand.
Daddy stopped hitting me
But that fear endures and will never end.

தீமையின் கரம்

மெல்லிய வெப்பத்திலிருந்து புகை எழுகிறது
என் அப்பா என்னை அடித்திக்கொண்டிருந்தார்
அங்கிருந்த எல்லோரும் சிரித்திக்கொண்டிருந்தார்கள்
நான் உண்மையை சொல்லிக்கொண்டிருக்கிறேன் வேறொன்றுமில்லை.

மெல்லிய வெப்பத்திலிருந்து புகை எழுகிறது
அப்பா என் உள்ளங்கையில் அறைந்தார்
இது தீய கரத்தின் உள்ளங்கை என்றார்
நான் உண்மையை சொல்லிக்கொண்டிருக்கிறேன் வேறொன்றுமில்லை


மெல்லிய வெப்பத்திலிருந்து புகை எழுகிறது
அப்பா என்னை அடிப்பதை நிறுத்தினார்
பாவ கரங்களிலிருந்து விரல்கள் மூளையிட்டன
அதன் செயல்கள் எப்போதும் முடிவடையாது தொடரும்.

மெல்லிய வெப்பத்திலிருந்து புகை எழுகிறது
அச்சம் தீமையின் கரத்தை மெலிதாக எரிக்கிறது.
அப்பா என்னை அடிப்பதை நிறுத்தினார்
ஆனால் அச்சம் எப்போதும் முடிவடையாது தொடரும்

(மொழியாக்கம் சர்வோத்தமன்)
 //ஒற்றைச்சிதையினிலே உம்மெல்லோரையும் ஒருங்கே வைத்து எரித்திட்டாலும் வயிற்றெரிச்சல் தீராது.//// இந்தக் கவிதையை..?!!! எழுதியவர் .அடுத்த அத்தியாயத்தில் இவர் அகப்படுவார்.அதுவரை யாராக இருக்கும் என்பதை சற்று யோசித்துவையுங்கள்