எழுத்தாளர்கள் சண்டை போடலாமா? மனுஷ்யபுத்திரன் பேட்டி (பாகம் 2)


இந்த பகுதியில் மனுஷ்யபுத்திரன் எழுத்தாளர்களின் கருத்தியல் மோதல்களின் வரலாறு, முந்தைய எழுத்தாள சண்டைகளுக்கும் இன்று நடப்பவற்றுக்குமான வேறுபாடு, எழுத்தாளனை ஒரு வாசகன் சராசரிக்கு அப்பாற்பட்டவனாக பார்ப்பதில் உள்ள சமூகவியல் கோணம் ஆகியவற்றை அலசுகிறார்.
 
ஆர்.அபிலாஷ்: சமீபமாக ஒரு வாசகர்களிடம் ஒரு பாணி உருவாகி வருகிறது. இலக்கிய சர்ச்சைகளை, எழுத்தாளர்களிடையே விமர்சன ரிதியாக உருவாகிய தகராறுகளைக் கண்டு கோபமடைகிறார்கள். எழுத்தாளர்கள் இப்படி சண்டை போட்டுக்கலாமா என கேட்கிறார்கள். ஆனால் நமக்கு ஒரு நீண்ட விவாத பின்னணி உள்ளது. பொதுவாக விமர்சனம் என்றாலே கெட்டது, வயிற்றெரிச்சலின் விளைவு என்கிற உணர்வு ஜனரஞ்சக ஆட்களிடம் உண்டு. அகிலனை க.நா.சு விமர்சித்த போது அப்படித் தான் அகிலனின் வாசகர்கள் கூறினார்கள். ஆனால் தீவிர மரபு விமர்சனத்தை, கருத்தியல் மோதல்களை ஆரோக்கியமான ஒன்றாக தான் பார்த்துள்ளது. அது சில சமயம் குழாயடி சண்டையாக மாறினாலும் கூட அதன் பின்னால் ஒரு வலுவான கருத்தியல் மாறுபாடுகள் இருந்துள்ளன. கருத்தியல் சண்டைகள் முக்கியம் இல்லையா? ஏன் இன்றைய வாசகர்கள் கருத்து மோதலை வெறுக்கிறார்கள்?
இன்னொரு கேள்வி வாசகர்கள் ஒரு எழுத்தாளன் மீது மிகையான எதிர்பார்ப்புகள் வைக்கிறார்களா என்பது. எழுத்தாளனும் சாதாரண மனிதன் தானே? அவனை ஒரு பிம்பமாக, சமூக போராளியாக கற்பனை பண்ணிக் கொள்கிறோமா?
மனுஷ்யபுத்திரன்: எழுத்தாளன் என்ன நினைக்கிறான் என யார் கவலைப்படுகிறார் என நினைக்கிறீர்கள்?
ஆர்.அபிலாஷ்: வாசகர்கள்
மனுஷ்யபுத்திரன்: வாசகர்கள் என்றால் அவர்கள் யார்? இந்த சமூகத்தில் எந்த பகுதியை சேர்ந்தவர்கள்?
ஆர்.அபிலாஷ்: சிறுபத்திரிகை, இலக்கியம் வாசிக்கிறவர்கள்
மனுஷ்யபுத்திரன்: இல்லை. நம்முடைய வாசகர்கள் ஒன்று கடந்த கால எழுத்தாளர்கள், அல்லது சமகால எழுத்தாளர்கள் அல்லது எதிர்காலத்தில் எழுத்தாளராக போகிறவர்கள். உண்மையிலே வாசகன் என்றொருவன் நம் சமூகத்தில் இருக்கிறாரான் என்பதே எனக்கு ரொம்ப சந்தேகமாக இருக்கிறது. அடுத்து உங்க கேள்விக்கு வருகிறேன். ஏன் பட்டுக்கோட்டை பிரபாகரோ ராஜேஷ் குமாரோ சண்டை போட்டுகிறதில்ல? ஏன் சாரு நிவேதிதாவும் ஜெயமோகனும் சண்டை போட்டுக்கிறாங்க?  




இதில் நிறைய விசயங்கள் உள்ளன. ஒரு எழுத்தாளன் எதிர்வினை செய்யும் போது, reactionary ஆக செயல்படும் போது நமக்கு ஏன் எரிச்சல் வருகிறது? க.நா.சுவின் கோபம் அல்லது சுந்தராமசாமியின் கோபத்திற்கு பின் அவர்கள் வாழ்நாளின் மொத்த உழைப்பும் இருக்கிறது. வண்ணதாசன் பற்றி சுந்தர ராமசாமி ஒரு statement வைத்தார். “பெண் ஸ்பரிசத்திற்கு ஆண்கள் இளிக்கலாம். இளிக்கிறார்கள். ஆனால் எந்த மகோன்னத எழுத்தாளனின் ஸ்பரிசத்திற்கும் வாழ்க்கை இளிக்காது.” (வண்ணதாசன் கதைகள், சுந்தர ராமசாமி). அதாவது வாழ்க்கையை இவ்வளவு லட்சியபூர்வமாய் பார்க்காதீர்கள் என அவர் வண்ணதாசனைப் பார்த்து சொல்கிறார்.

இந்த வாக்கியம் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்றால் அதன் பின் சுந்தர ராமசாமியின் மொத்த இலக்கிய படைப்புகள், இலக்கியம் பற்றின அவரது அணுகுமுறை ஆகியவை உள்ளன. இந்த வாக்கியத்தை நியாயப்படுத்துவதற்காக தன் வாழ்நாள் முழுக்க சுந்தர ராமசாமி உழைக்கிறார். சுந்தர ராமசாமி ஒரு பகுத்தறிவாளர். ஒரு நவீன இலக்கிய பள்ளியை சேர்ந்தவர். அவருடைய படைப்புலகில் அல்லது வாசிப்புத் தளத்தில் கற்பனவாதமாய் (romantic) எழுதுவதற்கோ ஒன்றை லட்சியபூர்வமாய் முன்வைப்பதற்கோ இடமில்லை. கற்பனாவாதத்திற்கு எதிரான இந்த வாக்கியத்தை நியாயப்படுத்துவது தான் சுந்தர ராமசாமியின் மொத்த வாழ்க்கையுமே!
க.நா.சு அகிலனைப் பற்றி எழுதிய விமர்சனமும் முழுக்க அவர் இலக்கிய பார்வையில் இருந்து வருகிறது. அவர் வாழ்க்கை முழுக்க இவ்விமர்சனத்தை நியாயப்படுத்த ஏராளமான மொழிபெயர்ப்புகளை பண்ணுகிறார். விமர்சனங்கள் எழுதுகிறார். சில குறிப்பிட்ட வகையான இலக்கியங்கள் தாம் பொருட்படுத்தத்தக்கவை என்கிற ஒரு தெளிவான பார்வை அவருக்கு இருந்தது. அகிலன் கடந்த காலத்தின் எழுத்தாளன் என்பது க.நா.சுவின் மதிப்பீடு. அவருக்கு அகிலன் மீது எந்த தனிப்பட்ட வெறுப்பும் இல்லை. இது முழுக்க கருத்தியல் ரீதியான எதிர்ப்பு.
புதுமைப்பித்தன் கல்கி மீது கொண்டிருந்ததும் இப்படியான எதிர்ப்பு தான். இந்த எதிர்ப்பை நியாயப்படுத்த அவர் நூற்றுக்கணக்கான கதைகள் எழுதுகிறார். தொடர்ந்து கல்கியுடன் சண்டை போட்டுக் கொண்டே இருந்தார். இலக்கிய மதிப்பீடுகள் சார்ந்து செய்கிற சண்டைகளுக்கு எப்போதும் ஒரு மதிப்பு உண்டு. இலக்கியத்தோடு எந்த சம்மந்தமும் இல்லாத ஆட்கள் தான் ஏன் எழுத்தாளர்கள் சண்டை போடுகிறார்கள் எனக் கேட்கிறார்கள்.

அன்று பொத்தாம் பொதுவாக எழுத்தாளன் சண்டை போடுகிறான் என யாரும் கூறவில்லை. அன்று கல்கி கோஷ்டி, புதுமைப்பித்தன் கோஷ்டி என் இருந்தது. அதே போல் க.நா.சுவை ஆதரிப்போரும் அகிலனை ஆதரிப்போரும் இருந்தார்கள்.
ஆர்.அபிலாஷ்: இடதுசாரிகளும் ஒரு தரப்பாக இருந்தார்கள்
மனுஷ்யபுத்திரன்: ஆம் இடதுசாரிகளும் ஒரு புறம் வலுவாக இருந்தார்கள். அது போல் வெங்கட்சாமிநாதன் மிகக் கடுமையாக இடதுசாரிகளைத் தாக்கினார். தருமு சிவராம் (பிரமிள்), வெங்கட்சாமிநாதனுக்கு இடையே மிகக் கடுமையான மொழியில் சண்டைகள் நடந்திருக்கின்றன. அப்போது கூட இது ஒரு தனிப்பட்ட தாக்குதல் என யாரும் நினைக்கவில்லை. இவர்கள் எல்லோரும் ஒரு இலக்கிய தரப்பை முன்வைத்து இயங்கினார்கள்.
ஆனால் இந்த எண்பதுகளின் காலகட்டம் முடிந்து இப்போது இன்னொரு காலகட்டம் தோன்றி உள்ளது. ஜனரஞ்சக மீடியா தீவிர எழுத்தாளர்களை உறிஞ்சிக் கொண்டது. எழுத்தாளர்களுக்கு வேறு மாதிரியான வாய்ப்புகள் தோன்றுகின்றன. ஒரு பக்கம் விருதுகள், இன்னொரு பக்கம் சினிமா வாய்ப்புகள் என. விகடனில் கதை எழுதுகிறார்கள். இந்த மாதிரியான diversions (கவனச்சிதறல்கள்) உருவாகின்றன. அமைப்புகளுடன் உள்ள தொடர்புகள் இல்லாமல் ஆகின்றன.
இதற்கு முன்னால் க.நா.சு அல்லது சுந்தர ராமசாமிக்கு இலக்கியம் படிக்கக் கூடியவர்கள் தாம் வாசகர்களாக இருந்திருக்கிறார்கள். இப்போது எழுத்தாளனுக்கு பல தரப்பட்ட ஆட்கள் வாசகர்களாக இருக்கிறார்கள். இவ்வாசகர்ளுக்கு இலக்கியம் மீது பெரிய ஒரு commitment (கடப்பாடு) இருப்பதில்லை. இன்று எழுத்தாளர்கள் தங்களுக்கு தளபதி போல் இயங்க சில வாசகர்களை வைத்திருக்கிறார்கள். இப்படியான நிலை எப்படி வந்தது என நினைக்கிறீர்கள்?
ஒரு பக்கம் சமூக வலைதளங்களின் தாக்கம். அதோடு வணிக இதழ்களில் எழுத்தாளன் இயங்கும் போது அவர்களின் லட்சியவாத நிலைப்பாடு நீர்த்துப் போகிறது. முன்பு போல இன்று எழுத்தாளனுக்கு தீர்மானமான நம்பிக்கைகள் ஒன்றும் இல்லை. ஆனால் அப்படி இருக்க வேண்டும் என நம் சமூகம் எதிர்பார்க்கிறது. அதனால் கருத்தியலில் ஆர்வம் இழக்கிற எழுத்தாளன் தன்னை முன்வைக்க தொடங்குகிறான். தன்னை ஒரு நிறுவனமாக மாற்றிக் கொள்கிறான். தன்னை வழிபடுகிற, தனக்கு மட்டும் விசுவாசமாக இருக்கிற வாசகர் படையை கட்டுவிக்கிறான். இந்த வாசகர்களுக்கு இலக்கிய ரீதியான கடப்பாடு ஒன்றும் கிடையாது. தனிமனிதர்களை வழிபடுகிறார்கள் என்பது மட்டும் தான் இவர்களின் ஒரே qualification. இவர்கள் வெறும் followers (தொண்டர்கள்), வாசகர்கள் அல்ல.
ஆர்.அபிலாஷ்: இது சரியா அல்லது தப்பா?
மனுஷ்யபுத்திரன்: இது சரியா தப்பா என்கிற விவாதமே தேவையில்லை என நினைக்கிறேன். இதன் விளைவுகளைத் தான் நாம் பேச வேண்டும். ஒரு எழுத்தாளனுக்கு எதற்கு தொண்டர்கள்? அவன் அரசியல்வாதியோ, சினிமா நடிகனோ அல்ல. பத்து லட்சம் வாசகர்களை வைத்து அவன் என்ன பண்ணப் போகிறான். எழுத்தாளன் என்பவன் தனிமையில் இருந்து இயங்கக் கூடியவன். இவ்வளவு தொண்டர்களை உருவாக்கினால் ஒரே அனுகூலம் அதிக புத்தகம் விற்கும் என்பது மட்டும் தான். ஆனால் அவன் எழுதுவதற்கும் இதற்கும் என்ன சம்மந்தம்? இந்த வாசகர் எண்ணிக்கை அதிகப் படுத்துவதனால் அவனது எழுத்தின் மதிப்பு அதிகமாகப் போகிறதா? ஒரு எழுத்தாளனுக்கு தேவையான input (உள்ளீடு) வேறு. ஒரு பிரபல நடிகனுக்கு இந்த பிம்ப வழிபாடு தேவை. அரசியல்வாதிக்கு அது தேவை. அவன் அதை வேறு ஒன்றாக மாற்றுவான். ஆனால் எழுத்தாளனுக்கு? புத்தகம் விற்க வேண்டும் என்பது பதிப்பாளனின் பிரச்சனை. ஒரு எழுத்தாளன் இதன் வழியாக தன் அடுத்த படைப்பு நோக்கி எப்படி நகர முடியும்? அருந்ததி ராய் இந்திய ஆங்கில இலக்கியத்தில் ரொம்ப பிரபலமான ஒருவர். ஆனால் ஒரு இலக்கியவாதியாக அவருக்கு எந்த மதிப்பும் இல்லை. 
ஆர்.அபிலாஷ்: அதாவது, எந்த ஒரு கோட்பாட்டு ரீதியான பின்னணியும் இல்லாமல் எழுத்தாளர்கள் சண்டை போடும் போது மக்களுக்கு கோபம் வருகிறது என கூறுகிறீர்கள். அப்படித் தானே?
மனுஷ்யபுத்திரன்: ஆமாம். இந்த சண்டைக்கு பின்னால் வெறும் போட்டியும் தனிமனித துவேசமும் இருக்கிறதென்று வாசகர்கள் உணர்கிறார்கள். 
ஆர்.அபிலாஷ்: இதை ஒட்டி இன்னொரு கேள்வி கேட்கிறேன். தினசரி வாழ்க்கையில் இது மாதிரியான தனிப்பட்ட சச்சரவுகளை அலுவகங்களில், குடும்பத்துக்குள், வெளியில் நாம் எத்தனையோ சந்திக்கிறோம். பொருட்படுத்தாமல் கடந்து போகிறோம். ஏன் ஒரு எழுத்தாளன் இன்னொரு எழுத்தாளனிடம் சண்டையிட்டால் மட்டும் நமக்கு பிடிக்கவில்லை?
மனுஷ்யபுத்திரன்: இந்திய சமூகம் கலை, இலக்கியம் என்பதை கடவுளின் வரமாக பார்க்கிறது. கலையை glorify (மிகைப்படுத்துகிற) ஒரு மனோபாவம் நமக்கு உள்ளது. ஒரு கலைஞன் சராசரி மனிதனை விட மேலானவன் என்பது தான் இங்குள்ள பொதுக்கருத்து. எளிமையாக சொல்கிறேன். சில காலத்துக்கு முன்னர் ஒரு ஊரில் முக்கியமான நபர்கள் யாரென்றால் பள்ளிக்கூட வாத்தியாரும் போஸ்ட் மாஸ்டரும் தான். இவர்கள் தாம் பல கிராமங்களில் கல்வி அறிவு பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். இவ்விருவரின் பாத்திரஙக்ள் பற்றி இலக்கியங்களில் பல பதிவுகள் உள்ளன. தங்களால் தங்களைப் பற்றி சொல்ல முடியாதவற்றை, தங்கள் உணர்ச்சிகளை வாழ்க்கையை எழுதக் கூடியவன் என்று தான் பொதுமக்கள் எழுத்தாளனை பார்க்கிறார்கள். அவர்கள் எப்போதுமே அவனுக்கு ஒரு மேலான இடத்தை கொடுக்கிறார்கள்.
ஆனால் எழுத்தாளன் தனக்கு அப்படி ஒரு மேலான இடத்தை தர வேண்டாம், நான் ஒரு சராசரியான சாதாரண ஆள் தான் என சொல்லும் போது இவர்கள் அவன் எழுத்தை ஒட்டி உருவாக்கின லட்சியவாதம் நொறுங்குகிறது. தனக்கு தெரியாத, தான் யோசித்திராத விசயத்தை பேசும் போது அவனை வாசகன் தனக்கு மேலான ஒருவராக நினைக்க தலைப்படுகிறான். ஆனால் ஒரு எழுத்தாளன் அப்படி இருக்கணும் என்று அவசியமில்லை. ஒரு எழுத்தாளன் ஒரு உண்மையை எதிர்கொள்வது ஒரு தொழில் சார்ந்த விசயம். அதனால் அவன் ஞானி ஆகுவதில்லை. ஆனால் சமூகம் அவனை ஞானம் பொருந்திய மேலானவனாக கருதுகிறது. ஆனால் உண்மையில் அவன் அப்படியானவன் அல்ல. அவன் நம்மைப் போல் பாலியல் ரீதியான பிறழ்வுகளில் ஈடுபட்டாலோ சமூகத்தில் யாரையாவது புண்படுத்தும்படியாய் பேசினாலோ வாசகனால் தாங்க முடிவதில்லை.
வாசகர்கள் எப்போதுமே லட்சியபூர்வமாய் தான் பார்ப்பார்கள். ஏனென்றால் எழுத்தை கடவுளாக பார்த்த சமூகம் இது. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களிடம் கூட இந்த உணர்வு இருக்கிறது. “இந்த எழுதுகோல் தெய்வம், இந்த எழுத்தும் தெய்வம்” என்கிற வாக்கியம் வெறுமனே பாரதியார் கவிதை மட்டுமல்ல, இந்த சமூகத்தின் உளவியல் அதில் உள்ளது. 
ஒருமுறை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தியின் நூலகத்துக்கு போயிருந்தேன். பல அரிய நூல்கள் அங்கிருந்தன. இந்த புத்தகங்கள் எங்கிருந்து கிடைக்கின்றன எனக் கேட்டேன். இவற்றில் பெரும்பாலானவை நாட்டுக்கோட்டை செட்டியார்களின் தனிப்பட்ட சேகரிப்புகள். அவர்களின் வீடுகளுக்கு சென்று வாங்கி வந்தேன் என்றார். இந்த நாட்டுக்கோட்டை செட்டியார்களுக்கு ஒரு விசேச பழக்கம் உண்டு. அச்சில் எந்த நூல் வந்தாலும் அதை ஒரு பிரதி வாங்கி பாதுகாப்பாய் எடுத்து வைப்பார்கள். படிக்க மாட்டார்கள். ஆனால் சரஸ்வதி பூஜையின் போது அத்தனை புத்தகங்களை எடுத்து வைத்து கும்பிடுவார்கள். பூஜை அறையில் ஒரு சிலை இருப்பது போல் தான் அவர்கள் புத்தகங்களை பாதுகாத்தார்கள். இப்படித் தான் பதிப்பில் இல்லாத பல அரிய பழைய நூல்கள் பாதுகாக்கப்பட்டன. ஆக நம்மூரில் புத்தகம் என்பது கடவுள் நம்பிக்கையின், சாதிய கலாச்சார நம்பிக்கையின் ஒரு பகுதியாக இருந்து வந்துள்ளது.
ஆர்.அபிலாஷ்: பௌத்த மடாலயங்களில் புத்தகங்கள் பிரதியெடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது போல்…
மனுஷ்யபுத்திரன்: இந்த மரபுக்குள் கலைஞனுக்கான இடம் ரொம்ப முக்கியமானது.எழுத்தாளனை இங்கே யாரும் மதிப்பதில்லை என்று புலம்புகிறார்கள். ஆனால் இது உண்மை அல்ல. நீங்கள் ஏதோ ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கிறீர்கள் என்று கொள்வோம். அங்கிருந்தபடி குப்பையாய் ஒரு கவிதைத் தொகுப்பு போடுங்கள். ஒரு ஐம்பது பேருக்கு கொடுங்கள். உங்களைப் பற்றின அவர்களின் அணுகுமுறையில் உடனே ஒரு சின்ன மாற்றத்தை உணர்வீர்கள். உங்களுடைய படைப்பு ஏதோ பதிப்பில் வருகிறது, கல்லூரி மலரில் ஒரு கவிதை எழுதுகிறீர்கள், மற்றவர்களிடம் இருந்து கூடுதலாக ஏதோ ஒன்று செய்கிறீர்கள். உடனே உங்கள் மீதான மதிப்பு அதிகமாகிறது. உங்களை விட அதிக அறிவுள்ள ஒருவர் பக்கத்திலே இருப்பார். ஆனால் ஒன்றுமே எழுதியிருக்க மாட்டார். அவரை பொருட்படுத்த மாட்டார்கள். அதனால் தான் புத்தகங்கள் பதிப்பதில் நம் மக்களுக்கு பெரும் ஆர்வம் உள்ளது.
இப்படியாக எழுத்தை, ஞானத்தை உயர்வாக எண்ணி கொண்டாடக் கூடிய சமூகத்தில் எழுத்தாளன் மிகையாகத் தான் பார்க்கப்படுவான். உண்மையான வாசகன் ஒரு போதும் எழுத்தாளனின் தனிப்பட்ட வாழ்க்கையை பார்த்து புண்பட மாட்டான்.