மனுஷ்யபுத்திரன் பேட்டி (பகுதி 3)

புகைப்படம் நன்றி பிரபு காளிதாஸ்
இந்த பகுதியில் மனுஷ்யபுத்திரன் தமிழ் இலக்கிய உலகில் சீனியாரிட்டிக்கு ஏன் அபரித மதிப்பு உள்ளது, வயதுக்கும் பிம்பத்துக்குமான தொடர்பு என்ன ஆகிய கேள்விகளை அலசுகிறார்.

ஆர்.அபிலாஷ்: பாப்லோ நெருடா எழுத ஆரம்பித்து 14 வயதில் சிலி முழுக்க அறியப்பட்ட கவிஞன் ஆகிறான். ஹெமிங்வே 26 வயதுக்குள்ளே அமெரிக்காவில் பிரபலமாகிறார். மேற்கில் பொதுவாக ஒரு எழுத்தாளன் அங்கீகாரம் பெறுவதற்கான காலம் – அதாவது முதிர்ச்சிக்கான காலம் (maturation period) குறைவாக இருக்கிறது. அதாவது இரண்டு மூன்று வருடங்கள். மாறாக தமிழில் ஒருவர் தோன்றி அங்கீகாரம் பெற 10இல் இருந்து 20 வருடங்கள் எடுக்கிறது. ஏன் நரைத்த தலை ஒரு சிறந்த எழுத்தாளனுக்கான முக்கிய அறிகுறியாக இங்கு பார்க்கப்படுகிறது?

மனுஷ்யபுத்திரன்: ஒரு சமூகத்தில் எழுத்தாளனை கண்டறிந்து அங்கீகரிப்பது யார் என நாம் முதலில் கேட்க வேண்டும்.

ஆர்.அபிலாஷ்: ஊடகங்கள்

மனுஷ்யபுத்திரன்: ஆம் ஊடகங்கள் மற்றும் வாசகர்கள். இங்கே வாசகர்கள் என்றொரு பெரிய தரப்பு இல்லை. ஒரு சின்ன குழு தான். அவர்களிலும் பாதி பேர் எழுத்தாளர்கள். இந்த ஏற்கனவே உள்ள எழுத்தாளர்களுக்கு புதிதாய் தோன்றி வரும் ஒரு இளம் எழுத்தாளனை அங்கீகரிப்பதில் ஈகோ சிக்கல்கள் உள்ளன.
தங்களுடைய கௌரவத்தை விட்டுக் கொடுப்பதான அச்சம் அவர்களுக்கு ஏற்படுகிறது. ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்.


இமையத்தின் முதல் நாவல் வெளிவந்த போது சுந்தர ராமசாமி அதைப் புகழ்ந்து எழுதினார். உடனே இமையத்துக்கு சிறந்த எழுத்தாளர்களின் வரிசையில் ஒரு இடம் கிடைத்தது. ஆக, ஒரு எழுத்தாளனை அறியப்பட வைக்க இங்குள்ள விமர்சகர்களும் எழுத்தாளர்களும் தான் முன்வர வேண்டும். பல மேற்கத்திய நாடுகளில் தான் வாழ்ந்த காலத்தில் புறக்கணிக்கப்பட்ட எழுத்தாளர்கள் பல வருடங்களுக்கு பின் ஒரு விமர்சகர் அல்லது மொழிபெயர்ப்பாளரால் மறுகண்டுபிடிப்பு செய்யப்பட்டு முன்னெடுக்கப்படுகிறார்கள். பிரபலமாகிறார்கள். இங்கு அப்படி ஒரு செயல்பாடே நடப்பதில்லை. 


ஆனால் அங்கீகரிக்கப்பட்ட எழுத்தாளர்கள் தம்மை விட வயதான எழுத்தாளர்களை பாராட்ட தயங்குவதில்லை. ஏனென்றால் அவர்கள் தமக்கு போட்டியாளர் அல்ல என அவர்களுக்கு தெரியும். ஒரு ஊடகம் ஏற்கனவே அறியப்பட்ட எழுத்தாளனின் பிரபல்யத்தை பயன்படுத்த தான் முனையும். அதனால் அவனை அது முன்னெடுக்கும். விளைவாக, தமிழில் இளம் எழுத்தாளர்கள் ஏதோ ஒரு discriminationக்கு (பாகுபாட்டுக்கு) ஆளாகிறார்கள். ஏன் இந்த பாகுபாடு நடக்கிறதென்றால் ஏற்கனவே மூத்த எழுத்தாளர்கள் இந்த இடத்தை முழுக்க அடைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இன்னொரு விசயம். இந்திய சமூகம் ரொம்ப காலம் சர்வீஸில் உள்ளவர்களை மதித்து வழிபடுகிற ஒன்று. அதாவது ஒரு வேலையை எப்படி செய்கிறீர்கள் என்பதை விட, எத்தனைக் காலம் செய்கிறீர்கள் என்பதை வைத்து தான் உங்களை மதிப்பிடுவார்கள். இது ஒரு பொதுபுத்தி. இந்த பொதுபுத்தி தான் இலக்கிய மதிப்பீடுகளின் போது உள்ளே வருகிறது. உண்மையில், இந்த அனுபவம், வயது என்பவை எதுவுமே செல்லுபடியாகாத இடம் தான் இலக்கியம் என்பது. ஒருவர் ஒரே ஒரு நாவல் எழுதி விட்டு கூட முக்கியமான எழுத்தாளர் ஆகி விடலாம்.

ஆர்.அபிலாஷ்: இதை ஒட்டி இன்னொரு கேள்வி. 2011 ஜூன் மாதம் கன்னியாகுமரியில் சுந்தரராமசாமியின் 80வது நினைவுநாளை ஒட்டி காலச்சுவடு ஒரு கருத்தரங்கு நடத்துகிறது. அங்கு ஜெயமோகன் தீபச்செல்வனை பார்க்கிறார். அக்கூட்டம் பற்றின பதிவில் அவர் தீபச்செல்வன் பற்றின தன் மனப்பதிவை இவ்வாறு குறிப்பிடுகிறார்: “ஈழத்தில் இருந்து தீபச்செல்வன் வந்திருந்தார். சின்னப் பையன்”. (http://www.jeyamohan.in/?p=16815) அதாவது இது தான் அவர் மனதில் எழும் முதல் மற்றும் ஒரே எண்ணம். இந்த சிந்தனை என்னவிதமான உளவியலில் இருந்து வருகிறது? தீபச்செல்வன் சின்ன தொப்பையுடன் நாற்பது வயது ஆளாக இருந்தால் தான் எழுத்தாளனாக இருக்க முடியும் என்கிற பொதுப்புத்தியில் இருந்தா?
மனுஷ்யபுத்திரன்: இது ஒரு கள்ளங்கபடமற்ற எதேச்சையான குறிப்பாக கூட இருக்க வாய்ப்புண்டு. நீங்கள் எப்போதுமே எழுத்தின் வழியாக ஒரு லட்சியபூர்வமான பிம்பத்தை உருவாக்குகிறீர்கள். ஒரு இளம் எழுத்தாளர் தீவிரமான அரசியல் கட்டுரைகள் எழுதுகிறார். வரலாற்று பின்புலத்துடன் ஈழ சமூகம் பற்றி எழுதுகிறார். ஆனால் அவரை நேரில் பார்க்கையில் நன்கு தெரிந்த பக்கத்து வீட்டு பையன் போல் பக்கத்தில் வந்து உட்கார்கையில் உங்களுக்குள் உள்ள பிரமை உடைகிறது. நாம் எப்போதுமே இப்படி எழுத்தாளனை ஒரு பிம்பமாக கட்டுவித்து அதனால் பின்னர் ஏமாற்றமடைகிறோம். இதை ஒட்டி இன்னொரு சம்பவம் சொல்கிறேன். 


சுஜாதாவுக்கு வயதாவதை ஏற்றுக் கொள்ள முடியாத பல வாசகர்களை கண்டிருக்கிறேன். புத்தகக் கண்காட்சியில் அவரை பார்க்கிறவர்களால் சுஜாதாவின் பெயரில் ஒரு தாத்தா உட்கார்ந்திருப்பதை ஜீரணிக்கவே முடிந்ததில்லை.

ஆர்.அபிலாஷ்: அவரது எழுத்தில் இறுதி வரை இருந்த இளமை ததும்பல் ஒரு காரணமாக இருக்கலாம்.


மனுஷ்யபுத்திரன்: என்னுடைய விசயம் நேர்மாறானது. கடந்த இருபது வருடமாக என்னை முதலில் சந்திப்பவர்கள் “நீங்கள் எதிர்பார்த்ததை விட இளமையாக இருக்கிறீர்கள்” என்று என்னிடம் திரும்பத் திரும்ப கூறுவார்கள். ஏனென்றால் நான் “படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்” தொகுப்பில் எழுதியுள்ள பல கவிதைகளை ஒரு நாற்பது வயதுக்கு மேலான ஆள் தான் எழுதியிருக்க முடியும் என பலர் நம்பினார்கள். அவர்கள் தான் என்னை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார்கள். சுஜாதாவிடம் உங்களுக்கு இவ்வளவு வயதாகி விட்டதா என்கிறார்கள்; என்னிடம் நீங்கள் இவ்வளவு சின்ன வயதா என்கிறார்கள். இது பிம்ப உருவாக்கத்தால் ஏற்படுகிற குளறுபடி. பிம்ப வழிபாடு நம் மரபினுடைய ஒரு பகுதி. எழுத்தாளன் மட்டும் எப்படி விதிவிலக்காக இருக்க முடியும் சொல்லுங்கள்?