பயம்
ஒரு எச்சரிக்கையின்பயத்தில்
நிலைகொள்ளவில்லை என்னிருப்பு
சாஷ்டங்கமாக தலை பணிந்து செல்வதைப் போல்
தலை சீவிப் போகிறான்
ஒருவன்
வேல் கம்பும்
அரிவாள்களும்
கொலைகளுக்கு மரத்துவிட்டன
பயத்தின் கம்பீரங்களில்
வீரம் வெட்கிச் சாகிறது
எதிரிகளின் பாத அதிர்வுகளில்
இன்னுமின்னும்
விண்ணைப் பிளக்கிறது
அச்சத்தின் வீரியங்கள்
இப்படித்தான்
கழிகின்றன இரவுகள்
இந்த இரவு கழித்தால் போதுமென
சவத்துடனும் வாழலாம் போல
ரொம்பவே கடினம்
பயத்துடன் வாழ்தல்.
மழலையின் மொழித்துவக்கம்
புரிந்தும் புரியாததைப்போலிருக்கிறது
ஓர் மழலையின் மொழித் துவக்கம்
உருப்பெற்றுவிடாத
ஓர் நிகழ்வின் பாதியனுமானங்கள்
பிரசவிக்கப்பட்டிருக்காத
பாதி மகவின்
எஞ்சிய அபிலாஷைகள்
இன்னதன்றுணரப்படாத
பின் நவீனத்துவக் கவிதையின்
ஆழ்ந்த வார்த்தையாக்கங்கள்
இவைகளை ஒத்திருக்கிறது
அந்தக் குழந்தையின் ஆரம்பப் பரிபாஷை
காற்றிடமும்
பொம்மைகளிடமும்
அவர்களின் குழந்தைகளான நம்மிடமும்
எப்போதோ அழிந்து போய்விட்ட
அல்லது
இன்னமும் தோன்றியிருக்காதொரு மொழியின் வழியே
அவர்கள் சரசமாடிக்கிடக்கையில்
நம்மைக் காப்பாற்றுவதில்லை
நாமறிந்த எந்த மொழிகளும்.