முந்தின இரவின்
முடிவற்ற குரைப்பை
தலைக்கு வைத்துத் தூங்கியது
தெரு நாய்.
துளியும் உறங்கா அவர் முகத்தில்
தொங்கியது
வாதையின் வௌவால்.
*
‘பேசிப் பிரயோஜனமில்லை’
என்று யாருடனோ
பேசிக் கொண்டிருந்தார்
தனியாக.
*
‘இன்று என்ன கிழமை?’ கேட்டார்.
‘செவ்வாய்க் கிழமை’ சொன்னேன்.
தெருவையே பார்த்துக் கொண்டு இருந்தவர்
வெயிலின் குரலில் ஒளிர்ந்தார்
‘தெருவில் போய்க்கொண்டிருக்கிற நாய்
திங்கட் கிழமையின் ஜாடையில் இருக்கிறது’.
*
‘அதை வெளியே போகச் சொல்’
சற்று முன் அவர் குடித்த
கஞ்சிப்பாத்திர விளிம்பில்
அமர்ந்து பறந்து அமர்ந்த ஈயைக்
காட்டியபடி இருந்தது
சுருக்கம் நிறைந்த அவரது
சுட்டு விரல்.
*
மாத்திரைத் தகடுகளை
ஜன்னல்வழி வெளிச்சத்தில்
உற்றுப் பார்த்துச் சிரித்தவர்
’என்னுடைய டயரி வரிகளை இவை
நேற்றிரவில் அழித்துக்கொண்டு இருந்தன.
கையும் களவுமாகப் பிடித்துவிட்டேன்’
சொல்லி முடித்து
எழுதாத மார்ச்.13ம் பக்க வரிகளை
என்னிடம் அவர் வாசிக்கத் துவங்கினார்.
*
திருப்பித் திருப்பிச் சொல்கிறார்
‘எந்த நடையில் போய் உட்கார்வது
என்று தெரியவில்லை’.
உட்கார்ந்த வாக்கிலேயே
ஒரு வீட்டு நடையில்
கண்ணை மூடியிருந்தார் அவரது
உடன் பிறந்த தம்பி
ஒரு மார்ச் மாத பிற்பகலில் முன்பு.
*
‘கடல் ஆமைக் குஞ்சுகள்
கடலுக்குப் போய்விடும்
தானாக’
சொப்பனத்தை வர்ணிப்பது போல
அவர் சொல்கையில்
உச்சிப் பொழுதாகிவிட்டிருந்தது.
*
ஆச்சரியமாக இருக்கிறது.
அக்காக் குருவிக் குரலுக்கு
அவர் எதிர்க்குரல் எழுப்பியது.
*
இடுப்புத் துணி முற்றிலும் நழுவ
கழிப்பறையில் அவர் நிற்கிறார்.
ஒற்றைச் சிறுகுருவி
உட்கார்வது போல
பழுத்த வேப்பிலை சுழன்று விழுகிறது
அவர் படுக்கையில்.
*
விளக்கை அணைக்கவே இல்லை.
விசிறியை நிறுத்தவே இல்லை.
அவர் தூங்கவும் இல்லை.
விழிக்கவும் இல்லை.
*