எங்கும் காலப்புழுதி நிறைந்து கிடக்கிறது.
உடைந்த செங்கல் குவியல்களின்
இடுக்குகளினின்றும் கசியும்
மெல்லிய விசும்பொலி
ஒரு நூறு வயதானது.
காற்று வெளியுடன்
குமருகள் பூப்படைந்த ரகஸ்யங்களும்
இருமிச் செத்தவர்களுடையதும்
உதடு கிழிந்து
மண்டை ஒடைந்த மனைவிமார்களின்
அவல ஒலங்கள்
கலந்து அலைந்தன.
நினைவு கலைந்த ஒரு கணத்தில்
சிதறிய ஓடுகளின் நடுவே
சார்த்தி வைத்த கணவனின் பிம்பம்
பேத்திக்கான பெருமூச்சோடு
முக்காடிட்டு குத்தவைத்து
இருகண் ஒரமும் கருநீர் வழிந்து நிற்க
மரியம்மாள் கிழவி.
புருவமேட்டு வியர்வை கண்பட்டு
எரிச்சலில் துடைக்கும் வேளை
அரசு அதிகாரியின்
முடி அடர்ந்த காதுக்குள் குடிபுகுந்தது
அவளின் ஆவி.
கவிஞர் அன்புச்செல்வன் சிறு குறிப்பு