கவிதைக்கு மெய்ப்பாடு மிகவும் அவசியமானது, கவிஞன் காட்ட முனையும் காட்சியை வாசகரின் மனத்தில் தோற்றுவிப்பதில் மெய்ப்பாடு மிக முக்கியமான பணியை ஆற்றுகின்றது என்பதை விளங்கிக் கொண்ட நிலையில் அடுத்த கட்டத்திற்கு வருவோம். மெய்ப்பாடு என்றால் என்ன? மெய்ப்பாடு எவ்வாறு தோன்றி எவ்வாறு வெளிப்படுகின்றது, இதற்கான அடிப்படைகள் எவை? தொல்காப்பியர் முதலான கோட்பாட்டாளர்கள் மெய்ப்பாட்டை எவ்வாறு விளக்குகின்றனர் என்பதைச் சற்று விளக்கமாகப் பார்க்கலாம்.
மெய்ப்பாடு பற்றி மீண்டும் இங்கே சில விவரங்களைப் பார்க்க வேண்டியுள்ளது. இவ்வாறு பார்ப்பது மெய்ப்பாடு எவ்வாறு தோன்றுகின்றது என்பதை அறிவதற்கு வாய்ப்பாகின்றது.
மனிதனின் மனத்தில் உள்ளதை முகம் சிறப்பாகக் காட்டும் என்றாலும் முழு உடலும் மனத்தில் நிகழ்வதைக் காட்டுகின்றது. இவ்வாறு மனத்தில் உணர்வுகள் ஏன் தோன்றுகின்றன என்று கேட்கலாம். மனத்தில் நிகழ்வதைச் சிந்தனைகள், உணர்வுகள், பழைய நினைவுகள், கனவுகள் என்று வகைப்படுத்தலாம். இவற்றில் சிந்தனைகள், கனவுகள் முதலியவற்றை அக மனச் செயல்பாடுகள் எனலாம். உணர்வுகள் அவ்வாறானவை அல்ல. ஒருவருடைய மனத்தில் ஒரு சூழலில் ஒரு உணர்வு தோன்றுவதற்குப் புறக்காரணிகள் அவசியம். புறக்ககாரணிகள் இல்லாமல் தோன்றும் உணர்வுகள் வலுவற்றவை. புறக்காரணிகளால் தோற்றுவிக்கப்படும் உணர்வுகளே வலுவானவை. இவையே உடலிலும் வெளிப்படும். மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பனவாகவும் அமையும். எனவே உணர்வு வெளிப்பாடுகளுக்கு புறக்காரணிகள் அவசியம். ஒரு சூழலில் ஒரு புறக்காரணியால் ஒருவருடைய மனத்தில் தோன்றும் உணர்வுகள் பலவகையானவை என்று அறிஞர்கள் கூறுவார்கள். இந்த உணர்வுகளில் சிலவே முக்கியமானவை என்றும் கூறுகின்றனர்.
ஒரு புறக்காரணியால் மனத்தில் தோன்றும் உணர்வுகள் உடலில் வெளிப்படும் குறிகளே மெய்ப்பாடு எனப்படுகின்றன. புறக்காரணிகள் ஒரு மனிதரை எவ்வாறு பாதிக்கின்றன என்றும் பார்க்கவேண்டியுள்ளது. மனிதருக்கு உள்ள ஐம்புலன்களால் புற உலகை மனிதர்கள் அறிகின்றனர். மெய், வாய், கண், செவி, மூக்கு என்ற ஐம்புலன்கள் புற உலகை மனிதரின் மனத்துக்குள் கொண்டுசெல்லுகின்றன. ஐம்புலன்கள் வழியே மனத்துக்குள் செல்லும் நிகழ்வுகள் அல்லது தகவல்கள் மனத்தைப் பாதிக்கின்றன. அதனால் மனத்தில் பலவிதமான உணர்வுகள் தோன்றுகின்றன. அவ்வாறு தோன்றும் உணர்வுகள் உடலின்வழியே வெளிப்படுகின்றன. இவற்றையே மெய்ப்பாடு என்கிறோம்.
ஐம்புலன்கள் எவ்வாறு புறக்காரணிகளை மனத்திற்குள் செல்ல வழியாக இருக்கின்றனவோ அவ்வாறே மனத்தில் தோன்றும் உணர்வுகளை வெளிப்படுத்தும் வாயில்களாகவும் இருக்கின்றன. அதாவது மனத்தில் எழும் உணர்வுகளை வெளிப்படுத்தும் உடலாகவும் உள்ளன. எனவே இவற்றில் வெளிப்படும் குறிகளை மெய்ப்பாடு என்கிறோம்.
இதைத் தொல்காப்பியம் படைப்பாளிகளுக்கும் சொல்கிறது, வாசகர்களுக்கும் சொல்கிறது. இதைப்பற்றிப் பின்னர் விளக்கப்படும்.
மெய்ப்பாடுகளைத் தொல்காப்பியம் வகைதொகைப்படுத்திக் கூறுகிறது. எவ்வாறு வகைப்படுத்துகிறது என்று அறிவதற்கு முன்னர் தொல்காப்பியம் கூறும் மெய்ப்பாடு பற்றிய கோட்பாட்டை அறிதல் வேண்டும்.
இதை நான்கு நிலைகளில் தொல்காப்பியம் கூறுகின்றது.
1 சுவைக்கப்படும் பொருள். 2 சுவை உணர்வு (பொறி, புலன்)
3 குறிப்பு. 4 சத்துவம் (வெளிப்பாடு) சுவை போன்றது.
1 எந்தப் பொருளால் சுவை தோன்றுகின்றதோ அது சுவைப்பொருள் ஆகும்.
2 அந்தப் பொருளால் சுவை தோன்றுகிறது. இது புலன்களால் நடைபெறுகின்றது. இங்கு சுவை எனப்படுவது நாக்கால் அறியப்படும் இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கசப்பு ஆகிய ஆறு மட்டும் அல்ல. நம்மிடம் தோன்றும் அன்பு, வெறுப்பு, கோபம், நட்பு, சிரிப்பு முதலானவையும் சுவை என்றே இங்கு குறிக்கப்படுகின்றன.
3 குறிப்பு மனத்தில் ஏற்படும் உணர்வுக் குறிப்பு. இது என்னவென்று இந்த நிலையில் அறியமுடியாது. அங்கு உணர்வு தோன்றியிருக்கும், ஆனால் தெரியாத நிலை.
4 சத்துவம் என்பது உடலில் தோன்றும் வெளிப்பாடு என்னும் இதுவே மெய்ப்பாடு எனப்படுகின்றது. இங்கே காட்டிய நான்கில் இதுமட்டுமே வெளிப்படையாகத் தெரியும். அதாவது இதுதான் விளைச்சல். மற்றவை இதற்கு முன்னர் நடந்தவை.
இவற்றைச் சற்ற கவனமாக அலச வேண்டும். 1 முதலில் ஒரு பொருள் அல்லது நிகழ்வை ஒருவர் அறிகிறார், அல்லது உள்வாங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம். அதற்குக் காரணமான ஒரு பொருள் அல்லது நிகழ்வு அங்கு கட்டாயம் இருக்கவேண்டும். அதனால் தான் இந்த உணர்வுகள் தோன்றுகின்றன. காரணம் இன்றிக் காரியம் இல்லை. அவ்வாறு பொருள் அல்லது நிகழ்வு ஆகியவற்றை மனம் புலன்களின் வழியே உள்வாங்குகின்றது. மனத்தைப் பாதிக்கும் வகையில் உள்ள பொருள் அல்லது நிகழ்வே இங்கு முக்கியமானது. ஏனெனில் இதுவே சுவைக்கு அடிப்படை. 2 அவ்வாறு உள்வாங்கப்பட்ட நிகழ்வு அல்லது பொருள் மனத்தைப் பாதித்து உள்ளே எழுப்பும் உணர்வே சுவை எனப்படுகின்றது. இது இரண்டாம் நிலை. இந்த நிலையில்தான் மனம் வெளியில் தோன்றும் புறக்காரணிகளால் ஏற்படும் தாக்கத்தால் வேறுபாடு கொள்கிறது. அதாவது இயல்பான நிலையிலிருந்து வேறுபடுகின்றது. இந்த உணர்வு எல்லா நேரத்திலும் ஒரே வகையாக இருப்பதில்லை. புறக்காரணிகளுக்கேற்ப இது வேறுபடும். இதுவே சுவைகளுக்கு அடிப்படை. புறக்காரணி ஏற்படுத்தும் தாக்கத்தால் தோன்றும் இது சூழலைச் சார்ந்தது. ஆனாலும் இது எல்லோரிடமும் ஒன்றுபோலவே செயல்படும்.
3 குறிப்பு என்ற நிலையில் செயல்படும் இதையும் ஆழமாகப் பார்க்க வேண்டும். மனிதன் அல்லது பிற உயிர்கள் எல்லாமே உணர்வுகளை உடையன. ஒரு குறிப்பிட்ட சூழலில் எல்லா உயிர்களும் ஒரே மாதிரியான எதிர்வினையையே ஆற்றும். அதாவது அச்சம் ஏற்படும் சூழலில் அனைத்து உயிர்களுமே அச்சம்தான் கொள்ளும். எனவே இங்கு சூழல் சார்ந்து ஏற்படும் உணர்வுகள் முக்கியமானவை ஆகின்றன. ஒரு உணர்வு தோன்றவேண்டிய சூழலில் வேறு உணர்வுகள் தோன்றுவதில்லை.
4 இந்த நான்காவது நிலையையே நாம் பார்க்கின்றோம். காரணம் இது மட்டுமே உடலில் வெளிப்படையாகத் தோன்றுகின்றது.
மெய்ப்பாட்டுக் கோட்பாடு செயல்படும் நிலையை நாம் வேறு ஒரு வகையிலும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மேலே காட்டிய கோட்பாட்டில் நான்கு நிலைகள் கூறப்பட்டுள்ளன. இவற்றில் வெளிப்படையாகத் தெரிவது நான்காம் நிலையே. இந்த நான்காம் நிலையில் வெளிப்படும் மெய்ப்பாட்டைக்கொண்டு இதில் வெளிப்படும் சுவை எது என்று பார்வையாளர்/வாசகர் உணர்ந்து கொள்ள வேண்டும். இதற்குக் காரணமான நிகழ்வு எதுவாக இருக்கும் என்று இதன் அடிப்படையில் வாசகர்கள் அல்லது பார்வையாளர்கள் ஊகிக்க வேண்டும். எனவே மெய்ப்பாட் டை வலுவாக வெளிப்படுத்தினால் மட்டுமே இவ்வாறு பின்னோக்கிச் சென்று ஊகித்து அறிவது சாத்தியமாகும். இயல்பில் ஒன்று முதல் நான்கு வரையுள்ள நிலைகளில் தோன்றி வெளிப்படும் மெய்ப்பாட்டை, வாசகர் இறுதியிலிருந்து பின்னோக்கிச் சென்று ஒவ்வொரு கட்டமாக அறிய வேண்டியுள்ளது. நடைமுறையில் ஒருவாறு இருக்க, கலையில் வெளிப்படும்போது மாற்று நிலையில் வாசக மனத்தில் செயலாற்றுகின்றது.
கோட்பாடுகள் எவ்வளவு விளக்கினாலும் எளிதில் விளங்காதவை. இவற்றை விளங்கிக்கொள்வதற்கு எடுத்துக்காட்டுகளே ஏற்றவை. சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்.
1 ஒருவர் அடர்ந்த காட்டுவழியே போய்க்கொண்டிருக்கின்றார். நாம் அவருடன் போய்க்கொண்டிருக்கிறோம். முதலில் அவர் நடக்க நாம் பின்னால் நடக்கிறோம். வெளிச்சம் குறைவான நேரம். சென்று கொண்டிருக்கும் வழியில் திடீரென்று அவர் திடுக்கிட்டு நின்றுவிடுகிறார். நாம் பதற்றத்துடன் என்ன என்ன என்று கேட்கிறோம். அவர் பாம்பு என்கிறார். நாம் அங்கே பார்க்கும்போது பாம்பு இல்லை. அவருடைய நிலை இப்போது எப்படி இருக்கும்? அல்லது நாம் இந்த நிலையில் இருந்தால் நம்முடைய வெளிப்பாடுகள் எவ்வாறு இருக்கும்? கொஞ்சம் கற்பனை செய்து பார்ப்போம். பாம்பைப் பார்த்தவுடன் தோன்றும் உணர்வு எது? பதற்றம், அருவெறுப்பு, ஒவ்வாமை முதலியன. இப்போது அவருடைய உடலில் தோன்றும் மெய்ப்பாடுகளைப் பார்ப்போம். நடுக்கம் கொள்ளுதல், உதடுகள் துடித்தல், கண்கள் விரிதல், வியர்த்தல், நிலைகொள்ளாத்தன்மை ஆகியவற்றைப் பார்க்க முடியும். உடனே அங்கிருந்து பெயர்ந்துபோக நினைப்பார். இப்போது நாம் அவருடைய உடலில் நடுக்கம் முதலியனவற்றை மட்டும் காண்கிறோம். இவர் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்? என்ற எண்ணம் நமக்கு முதலில் தோன்றும். அவரது உடலில் தெரியும் குறிகளை வைத்து அவர் எதைக்கண்டோ அஞ்சியிருக்கிறார் என்று நாம் ஊகிக்கின்றோம். இதற்கு நாம் ஏற்கெனவே கண்ட அச்சப்பட்டவர்களின் செயல்கள் நமக்குக் கைகொடுக்கின்றன. அவர் கண்ட பாம்பை நாம் காணவில்லை. ஆனாலும் அவர் பாம்பைக் கண்டிருக்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். இந்த எடுத்துக்காட்டை வைத்துக்கொண்டு கோட்பாட்டைப் பொருத்திப்பார்க்கலாம். இங்கு
பொருள் – பாம்பு.
சுவை உணர்வு – அச்சம்.
குறிப்பு - மனத்தில் தோன்றும் பதற்றம்.
சத்துவம் (மெய்ப்பாடு) – கண்கள் விரிதல், வியர்த்தல், உதடுகள் துடித்தல், நடுக்கம் கொள்ளுதல்.
இன்னொரு எடுத்துக்காட்டையும் பார்க்கலாம். ஒருவர் வடை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். முற்றிய வெயில் காலம். நடுப்பகல் நேரம். வடையிலிருந்த பச்சைமிளகாயை நன்றாகக் மென்று விடுகிறார். இந்தச் சூழலில் அங்கு நாம் செல்கிறோம். அவருடைய தோற்றம் எப்படி இருக்கும். கண்ணீர் பெருகும், உதடுகள் துடிக்கும், நாக்கை உறிஞ்சிக்கொள்வார், உதடுகளின்மேல் வேர்த்திருக்கும், முகம் சிவந்திருக்கும். நாம் இயல்பான முறையில் அவரிடம் நல்லா இருக்கீங்களா என்று என்று நலம் விசாரிக்கிறோம். பிறகுதான் அவருடைய தோற்றத்தைப் பார்க்கிறோம். உடனே நாம் அவருக்கு ஏதோ தீங்கு நேர்ந்துள்ளது என்ற தெரிந்துகொண்டு நம்முடைய முகத்தை இரக்கம் வெளிப்படும் பாவனையில் வைத்துக்கொண்டு என்ன நடந்தது என்று விசாரிக்கின்றோம். அவரும் நடந்ததைச் சொல்கிறார். நாம் அவர் வடை சாப்பிட்டதையும் பார்க்கவில்லை, பச்சைமிளகாயைக் கடித்ததையும் பார்க்கவில்லை. ஆனால் பச்சைமிளகாயைக் கடித்ததால் அவர் படும் பாட்டை மட்டும், அவரது உடலில் தோன்றும் மெய்ப்பாடுகளைப் பார்த்து அறிந்துகொள்கிறோம்.
பொருள் - மிளகாய்
சுவை உணர்வு – (புலன் நாக்கு) - காரம்
குறிப்பு – நாக்கு முதலியன வருந்துதல்
மெய்ப்பாடு - கண்ணீர் பெருகுதல், உதடுகள் துடித்தல் முதலியன.
இந்த இரண்டு எடுத்துக்காட்டுகளும் மெய்ப்பாட்டுக் கோட்பாட்டை விளங்கிக்கொள்ளத் துணைசெய்யும்.
பின்குறிப்பு:
நான் முதுகலை அளவில் தமிழ் படித்த, படிக்கும் மாணவர்களையே மனத்தில் கொண்டு பாடம் சொல்வதாலும் எழுதுவதாலும் தமிழைக் கல்லூரி அளவில் படிக்காதவர்களுக்கு மெய்ப்பாடு பற்றிய இந்தக் கட்டுரைகள் எந்த அளவுக்கு விளங்கியிருக்கும் என்று தெரியவில்லை. விளங்கிக்கொள்ள முடியாதவர்கள் தயவு செய்து உங்கள் கருத்துகளை வெளிப்படையாக எழுதுங்கள். இன்னும் விளக்கமாகவும் எளிமையாகவும் எழுத முயற்சிக்கிறேன்.
தொடர்புக்கு: panuval@gmail.com
பின்குறிப்பு:
நான் முதுகலை அளவில் தமிழ் படித்த, படிக்கும் மாணவர்களையே மனத்தில் கொண்டு பாடம் சொல்வதாலும் எழுதுவதாலும் தமிழைக் கல்லூரி அளவில் படிக்காதவர்களுக்கு மெய்ப்பாடு பற்றிய இந்தக் கட்டுரைகள் எந்த அளவுக்கு விளங்கியிருக்கும் என்று தெரியவில்லை. விளங்கிக்கொள்ள முடியாதவர்கள் தயவு செய்து உங்கள் கருத்துகளை வெளிப்படையாக எழுதுங்கள். இன்னும் விளக்கமாகவும் எளிமையாகவும் எழுத முயற்சிக்கிறேன்.
தொடர்புக்கு: panuval@gmail.com