மகிழ்ச்சியை அனுபவித்தல்... -- மனுஷி



மகிழ்ச்சியின் தருணங்களில்
ஏனோ உள்ளூர பேரச்சம்
ஒன்றும் ஒட்டிக் கொள்கிறது.
அது
மகிழ்ச்சியை
முழுமையாக அனுபவிக்க முடியாமல் இம்சிக்கிறது.
மகிழ்ச்சியை அனுபவிப்பதற்கான
அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்ட பிறகு
சில கேள்விகள் முன்வந்து நிற்கின்றன.
சில கேள்விகளுக்கு
கை கட்டி பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தமும்
எட்டிப் பார்க்கிறது.
எவ்வித யோசனைகளும் இன்றி
எவ்வித மனச் சலனங்களும் இன்றி
எவ்வித பய உணர்ச்சியும் இன்றி
எவ்விதக் குற்றவுணர்ச்சியும் இன்றி
ஒரு குழந்தையின் மனநிலையில்
மகிழ்ச்சியை அனுபவிப்பது குறித்து
மகிழ்ச்சியை
அதன் இயல்பில் அனுபவிப்பது குறித்து
ஆழ்ந்த யோசனை செய்தபடியே
நேரங்களைக் கடத்த வேண்டி இருக்கிறது.
மகிழ்ச்சியை 
மகிழ்ச்சியுடன் எதிர்கொள்வது
அத்தனை சுலபமாக இருக்கவில்லை.