சிறைச் சாவி - சுதீர் செந்தில்





உங்களை எனக்குத் தெரிந்ததுபோலவே
உங்களுக்கும் என்னைத் தெரியும்

நாம்
அறியாமலேயே
ஒரு கூட்டு வாழ்க்கையை
வாழ்ந்துகொண்டிருக்கிறோம்

நான்
கீழ்த்தளத்தில்
நீங்கள்
மேல்த்தளத்தில்
இன்னுமொரு நீங்கள்
அதற்கும் மேல்த்தளத்தில்

இப்படியாக
ஒரு கூட்டுக் கட்டடத்தில்
நாம்
விரும்பாமலேயே வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்

நமக்கென்று
நமது கட்டடத்திற்கென்று
ஒரு கூட்டுநடவடிக்கைக்குழு இருக்கிறது

அதற்கு நீங்கள் தலைவர்
நான் செயலாளர்

சரி விடுங்கள்

இது
நம் நோக்கத்திற்குப் பிரச்சினையில்லை

இந்த உலகம் விநோதமானது
நாடுகள்
விநோதத்திலும் விநோதமானது

சிறைச்சாலைகளை நமக்குத் தெரியும்
சிறைச்சாலைகள்
எந்த நாட்டிலும் உண்டு

என்றாலும்கூட

குற்றச்சாட்டு
ஒவ்வொரு நாடும் சிறைச்சாலைதான்

அந்த மக்கள்
அந்த நாட்டின் எல்லைக்குள்
சிறைக் கைதிகளாக வாழ்கிறார்கள்

விடுதலை வேண்டும் என்கிற வேட்கைக்குள்
பூமி சிக்கிக்கொண்டது

அதை நிறைவேற்ற
எவர் முன்வருவார் என்பது
எவருக்கும் தெரியாது
என்றபோதிலும்கூட சிறைச்சாலைக்குள் இருப்பவருக்கு
ஒன்று சொல்ல விரும்புகிறேன்

உங்கள் குடும்பத்தின் சிறைச்சாலைக்குள் இருந்து
வெளியேற விரும்புகிறீர்களா

உங்கள் தெருவின் சிறைச்சாலைக்குள் இருந்து
வெளியேற விரும்புகிறீர்களா

என்றில்லாவிட்டால்
உங்கள் ஊரின் சிறைச்சாலையிலிருந்து
வெளியேற விரும்புகிறீர்களா

அல்லது
நாட்டை விட்டே வெளியேறப் போகிறீர்களா

நல்லது

நீங்கள்
நிச்சயமாக
சிறைச்சாலையில் இருந்து
தப்பிக்க விரும்புகிறீர்கள்

நீங்கள் அறிந்துகொள்ளவேண்டியது
ஒன்றுதான்

அந்த
சுதந்திரத்தின் சாவி
நம்மிடமே இருக்கிறது.
  •  

(
ஸ்ரீஷங்கருக்கு)