நினைவுச் சுழி - ஈழக்கவி



நினைவுச் சுழிக்குள்  சுழலும் மனம்
கடலின் ஆழத்துக்குள் அடிஆழத்துக்குள் செல்கையில்
முத்துக்களாய் விழும் அந்த முத்தங்களை
விழுங்கும் திமிங்கலங்கள்
மூச்சுத்திணறி மேலெழுந்து கரையில் துப்புகின்றன
அலையாக சிதறும் முத்தங்களை
நண்டுகள் குருமணலில் புதைத்துக் கொண்டிருக்கின்றன 

தனித்திருந்த அந்த தருணங்கள்
உப்புப்புல்வெளியாக கடலில் படர்கின்றன
புல்வெளியில் துள்ளி விளையாடுதல்
மீன்களுக்கு ஒரு புதிய அனுபவம்
ஓடுதிறந்து ஓரக்கண்களால்
ஆமைகள் பச்சைநிறத்தை பார்க்கையில்
வெட்கத்தாகத்தால் கிளர்தெழுந்த அவள்
கடலை குடித்துவிட்டாள்
இன்னுமொரு தருணத்திற்காக