![]() |
ஆர்.பார்த்தசாரதி |
1
முப்பது வயதாகும் போது
உன்னை எடை போட தொடங்குவாய்.
ஒன்றும் முக்கியமாய்
நடக்க வேண்டியதில்லை அதற்கு
முப்பதில் சேறு படிந்திருக்கும்:
கண்ணாடியில் உன்னை பார்ப்பாய்.
ஒருவேளை அது நீயில்லை என மறுக்கவும் செய்வாய்.
எந்த பயனும் இல்லை, ஆனால்
நீ உன்னை தாண்டி சென்று பார்க்கலாம். மூச்சு வாங்க நின்று கொள்ளலாம்.
காலம் உனக்கிந்த தொலைவை அளித்துள்ளது: வேறெதுவும் உனக்கு தெரியவில்லை.
மெல்ல அசைகிறாய்; கண்ணாடி கரைகிறது.
அனுபவம் அறிவாக அவசியம் இல்லை எப்போதும்:
அதே தவறுகளைத் தான் மீண்டும் செய்கிறாய்.
ஒரே விசயங்களை மீண்டும் மீண்டும் செய்கிறாய்.
நீ காதலித்திருக்க்க் கூடிய பெண்ணை
மணக்கவில்லை, இவ்வளவு நீண்ட காலமும்
அவள் கரங்கள் உன்னை வெதுவெதுப்பாய் வைத்திருந்தன.
அவள் உடலின் ஜொலிக்கும் கூழாங்கற்கள்
உன் கால்களை நிலைக்க வைத்தன, மற்றபடி
நீ பொங்கி வழிந்து விட்டாய், கரையை சேரவில்லை.
அவளது விரல்கள் மெல்ல அழுத்த
ஆற்றில் பக்கங்கள் பிரவாகிக்கின்றன.
ராவெல்லாம் உன் கை துயிலும்
அவள் இடது மார்பில்.
காலையில் அவள் போன பின்
தனியாக ஆவாய் பூங்காவின் கல் பெஞ்சுகளைப் போல
மறந்திருப்பாய் அவள் முணுமுணுப்புகளை
நகரத்தின் இரைச்சலில்
8
நாவு சொற்களால் கூனிட்டிருக்க,
ஜாதவ்பூரில் உன் கரங்களை நாடி
நான் நடக்கையில்
கண்களை அழுத்துகிறது சாம்பல் வானம்:
சுமைதூக்கிகள், ரிக்ஷா இழுப்பவர்கள், சவரத்தொழிலாளிகள், தெருவில்
கூவி விற்பவர்கள்,
சொதிடர்கள், திண்ணை தேய்ப்பவர்கள் காட்சியை முழுமை செய்கிறார்கள்.
அவர்களுக்கு மேல் தலைதூக்கும் பாலம்,
நீரில் கிடக்கும் வெளிறிய வைரம்.
மரங்கள், நிழல் பரவிட பெருத்து, மைதானத்தில் குத்திட்டு இருக்கும்.
உன்னிடம் ஜின் மற்றும் சிகரெட்டின் வாடை. இச்சையில் கூர்மையான
உன் முலைகளால் என் விரல்கள் வலிக்கும்.
விவரிப்பை கடந்த உணர்வுகள்
மனதின் இருட்டு சந்துகளில் நடுங்கும்,
பசித்து, தனியாய். எதையும் தூக்கிப் போட
முடியாது. இதயத்துக்கு எல்லாம் தேவை.
இத்தனைக் காலமும் நான் பெற்ற ஞானம் ஏதோ கொஞ்சம்,
இதை தேடவே நான் என்னை விடுவித்துக் கொண்டேன்.
இங்கே ஹூக்ளியின் கரைகளில்,
ஜோப் சார்னோக் கட்டிய நகரத்தில்.
இந்த ஞானத்தை இன்னொரு நகரத்துக்கு
மனதின் அஸ்திக்கலயத்தில் எடுத்துச் செல்வேன்.
இளமையின் சதையிலும் பிரகாசத்திலும்
மிச்சமுள்ளது சாம்பல் மட்டுமே.
முழுவட்டமும் வந்து விட்டது வாழ்க்கை. முப்பது வயதெனக்கு.
இன்னொரு பாதிக்கு தரத்தை அளிக்க வேண்டும்.
வளர்ந்தவனாகும் ஓட்டத்தில் பணயம் வைத்தேன்
இளமையெனும் கூச்சம் தரும் பரிசை.