வனத்தின் ஜன்னலில் இருந்து
முகம் தெரியாத இந்தவூரில்
என் கசகசப்பைத் தணித்துக் கொள்ள
என் மேல் ஊற்றிக்கொள்ளும்
இந்த பிளாஸ்டிக் கோப்பை நீர்
வெறுப்பின்மையை சொல்லித் தருகிறது
காரின் ஜன்னல்வழி
துடைப்பான் வாங்கச் சொல்லி
கெஞ்சும் அச்சிறுமி
காரில் ஒலிக்கும் பாட்டைக் கேட்டு
ஒரு கணம் முகம் மலர்ந்து
அப்படியே நிற்கிறாள்
வழமை போல்
காகங்கள் மட்டும் கரைய,
துவங்கும் இந்த நகரத்துப் பகல்
எல்லோருக்கும்
எல்லாத் தெருக்களிலும்
புன்னகையற்ற ஒரு வேலையை மட்டும்
வைத்திருக்கிறது
கடைசியில் இன்றிரவும்
யாருமற்ற என்வீட்டுக்குதானே
நான்
திரும்பியாக வேண்டியிருக்கிறது..
தீப்பெட்டி வீட்டின்
பின்பக்க சன்னலில்
அருகு வீட்டில் அசையாது நிற்கும்
இரவின் கருத்த வேம்பும், நானும், மதுவும்
இசையற்றவொரு பாடலைத்தானே
இன்றிரவும் கேட்கப் போகிறோம்
பிச்சியின் எச்சம்
காணாமல் போவதற்கு
முந்தையநாள் வரை
ரகசியமாக என்னிடம்
பேசியபடிதான் இருந்தாள்
வெளுத்த பௌர்ணமி நிலா
ஒரு புறாவாக மாறி
அவளது சன்னலில் அமர்ந்து
கதைகள் சொன்னதாகச் சொன்னாள்
தினந்தோறும் வைதவ்யத்தை
நறுமணமாக உடல்முழுக்க
பூசிவந்த அவளது பாட்டிக்கும் பாட்டி
இரவிரவில்
அவளுக்கான தனிப்பாடல்களைப்
பாடுவதாகவும் சொன்னாள்
டிவியின் கேபிளைப்
பிடித்திறங்கிவரும்
கொடிய குள்ளர்கள்
அவனது மனதை கைப்பற்றிவிட்டார்கள்
என்பதையும் சொன்னாள்
திரண்ட பயங்களின்
திராட்சைக் கொத்தை
என்னிடம் மட்டுமே காட்டினாள்
அவளறையின் ஜன்னல் தாண்டி
அவள் ஊதியனுப்பிய
செய்திகளின் தேனீக்கூட்டம்
திக்குகளெட்டும்
பறந்து செல்வதாகவும் சொன்னாள்
நட்சத்திரங்களற்ற இரவொன்றில்
ஒரேயொரு உச்சக்குரல் அழுகையை மட்டும்
அவ்வறையில் விட்டுவிட்டு
அறையை வெறுமையாக்கிப் போனாள்
பின் கடக்கும்
ஒவ்வொரு முழுநிலா நாளிலும்
என் ஜன்னலில்
அவளது சொற்களின்
தாமதித்த எதிரொலி போலோ
ஓசையின்றி கீழ்விழும்
அவளது ரகசியங்கள் போலோ
ஒரு மெல்லிய புறாச்சிறகு
மிதந்து மிதந்து வந்து விழுகிறது
ஒரு கலைந்த பிறையைப் போல..
நீச்சல்
எப்போதும் போல
கடைசியாய் நீந்திவருகிறது
உன்னிடம்
உயிரை அருளும்போது
நீ
கடவுளும் ஆகிறாய்
கடைசி திரையை
கிழித்துத் திறந்து
அம்மணங்களைக் காட்டும் நீ
கடவுளல்லாதவனும் ஆகிறாய்
சுற்றிச் சூழ நின்று
இறைஞ்சும் நாய்களுக்கு
சோறிட்டால் நீ
பட்டினி கிடக்க வேண்டும்
ஒரு
பெருவணக்கம் போட்டு
பெருகும் ஆழியுள் மூழ்கும் நீ
மீனல்ல
அனைத்தும் முடிந்து
நீர் சூழ்ந்தபின்
மேலே பறக்கும்
களைத்த பறவைகளின்
சப்தங்களோடான நிசப்தத்தில்
நீயற்ற இவ்வுலகு
அத்தனை அழகு