அதே கண்கள் - வேல் முருகன். பா


மளிகைக் கடையில் 
சாமான் எடுக்கையில் 

பேருந்து ஏற 
பிடியினை பிடிக்கையில் 

கைப்பேசியில் பேசி 
காலார நடக்கையில் 

உடற்பயிற்சி
செய்கையில் 
ஓராயிரம் கண்கள்...

அலுவலில் 
ஆழ்ந்திருக்கையில் 
அங்கும் அலைகின்ற 

அந்தரங்க குளியலறையில்
ஒளிரும் 

இருசக்கர வாகனத்தில் 
இருக்கையிலே 
இயக்கையிலே
இணைந்து பயணிக்கும் 

அதே கண்கள்...

நெட்டி முறிக்கையிலே 
கட்டிப்பிடிக்கும் 
பார்வையோடு 

நெடுஞ்சானாய் குனியையிலே
நெஞ்சம் படபடக்கச் செய்யும் 

புடவைக் கடையிலே 
புதுப்பெண்ணாய் வீற்றிருக்கையிலே 
திரையரங்கத்திலே என  

தினம் பொய்க்காது 
எங்கும் 
நீக்கமற
ஒரு ஜோடி 
ஊடுருவும் கண்கள்

அக்கண்கள் ஒவ்வொன்றும்
ஒவ்வொரு மார்பாய் 
மாறத் துவங்குகின்றன