அலைபேசி எண்களும் நானும் - சுதீர் செந்தில்



எப்படித்தான் கண்டடைந்தாரோ
கிராகாம்பெல்
தொலைபேசியை 

அப்போதெல்லாம்
கிராமங்களில் 
நாட்டாண்மைகள் வீட்டில்தான்
தொலைபேசியிருக்கும்

தொலைபேசி எண்களை
ஞாபகத்தில் வைத்துக்கொள்ள
எவ்வித சிரமுமில்லை
மேலும் அவை 
மூன்று இலக்கங்களைத் தாண்டாது

வெளியூரிலிருந்து அழைப்பவர்கள்
'ட்ரன்க் கால்' செய்வார்கள்

அதில் 'அவசரக் கால்'களும் அடக்கம்

ஊர்
தபால் மனிதன்
'தந்தி'யை கொண்டு வந்தாலே

அழத்தொடங்கும்

பி.பி. கால் என்று
நாட்டாமை வீட்டில் இருந்து
அழைப்பு வந்தால் கேட்கவா வேண்டும்

இன்று 'தந்தி' என்பதே
இல்லாமல் ஆகிவிட்டது

தொலைபேசி மட்டும்
இருந்த காலத்தில்
ஆயிரம் எண்கள் நினைவிலிருக்கும்

இந்த அலைபேசி காலத்தில்
மனிதரின்
நினைவுச் செதில்கள்
குறைபட்டு விட்டன

செல்பேசிகளோ
ஆயிரமாயிரம் எண்களை
நினைவில் வைத்திருக்கின்றன
அதன் நினைவுகளை அழிக்கும் 
ஆற்றலை வைத்திருப்பவர்கள் 
பரிதாபத்துக்குரியவர்கள்

என்றாலும்
பிரச்சினை அதுவல்ல

இந்த அழிக்கும் ஆற்றலை
என்னால் பயன்படுத்தவியலவில்லை

என் அலைபேசியில் இருக்கும்
சில எண்களுக்குரியவர்கள்
இவ்வுலகை விட்டு நீங்கிவிட்டார்கள்

அந்த எண்களை
என் அலைபேசியிலிருந்து நீக்க 
மனம்  இடம் தரவில்லை

ஏதோ ஒருவரின் எண்ணைத் தேடுகையில்
அவ்வப்போது
இம்மையில்  இல்லாதவற்களின்
எண்கள் சுடர்கின்றன

அப்போதெல்லாம்
அவர்களின் நினைவில் இழந்துவிடுகிறேன்
இந்த இருப்பை

அது எனக்கு உவப்பானதாக இருக்கையில்
எவ்வாறு அவ்வெண்களை 
அகற்றவியலும்

நல்லது நண்பரே
இது என் வாக்கு மூலம்
மேலும் 
என் வாதையை பகிர்ந்துகொள்ளுதல்
அவ்வளவே

இனி நாம் உறங்கலாம்.