நகுலனை வாசிக்கையில் நமக்கு ஏற்படும் ஆழமான சில வினாக்களை தமிழின்
முக்கிய எழுத்தாளர்கள் சிலரிடம் கேட்டோம். அவர்களின் பதில்கள் கீழே:
1.
இன்மை: நகுலன்
தொடர்ந்து இரண்டாய் பிளவுபட்ட மனதை பற்றி பேசுகிறார். இரண்டு மனங்களாய் பிரிந்து
இதில் எதுவும் தானில்லை என உணர்வது தான் நகுலனின் நெருக்கடியா? கடவுளை நம்பி
இருந்தால் அவர் வேறுவிதமாய் இந்நெருக்கடியை கையாண்டிருப்பாரா?
மனுஷ்யபுத்திரன்:
நேற்று ஒரு கனவுமுதல் பேற்றில்
சுசீலாவின்
கர்ப்பம் அலசிவிட்டதாக
இந்த மனதை
வைத்துக் கொண்டும்
ஒன்றும் செய்ய முடியாது.
என்று நகுலன் ஒரு கவிதையில் சொல்கிறார்.’இந்த மனதைவைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது’ என்று எந்த மனம் எந்த மனதைப் பற்றி இப்படி அலுத்துக்கொள்கிறது என்று பலமுறையோசித்திருக்கிறேன்.
மனதின் தன்னிலைக்கு மேலான அதீததன்னிலை ஒன்றின் செயல்பாட்டை நகுலன் உணர்ந்திருந்தாரா? மனம் சம்பந்தமான அறிவியல் பூர்வமான நிலைப்பாடுகள் இதெல்லாம் ஒரு பித்துக்குளித்தனம் என்று தள்ளி விடும். மனிதமனம் பற்றிய அறிவியல் பூர்வமான முடிவுகளைப் போல மேலலோட்டமான சுவாரசியமற்ற ஒன்று வேறு எதுவும் இல்லை.
நகுலனுடையதை நான் பிளவுபட்ட மனமாக கருதவில்லை. மாறாக சிதறுண்ட மனநிலையினூடே அவர் ஒரு ஓர்மையைக் கண்டடைய பல சந்தர்ப்பங்களில் விழைகிறார். மனம்தான் மனதை கட்டுப்படுத்துகிறது. மனம்தான் மனதை விடுதலை செய்கிறது. மனம் தன்னைத்தானே பெருக்கி கொள்கிறது. தன்னைத் தானே அழிக்கவும் செய்கிறது. இந்த புதிரான விளையாட்டைத்தான் நகுலனின் எழுத்துக்கள் தொடர்ந்து தழுவிச் செல்கின்றன. உடைந்த மனம் என்பது ஒரு மேற்கத்திய அணுகுமுறை. பல்வேறு மனங்கள், அதன் பல்வேறு நிலவுகள் வழியே சஞ்சரிப்பது என்பதைத்தான் கீழத்தேயமரபு காட்டுகிறது. நகுலன் இந்த வழியில் வந்தவர் என்ற எண்ணமே எனக்கு இருக்கிறது.
நகுலனுக்கு கடவுள் எப்போதும் அவசியமில்லை. ஏனென்றால்அவரே தான் கடவுளாக முயற்சித்தவர். அவருடைய குழப்பங்கள் அனைத்தும் கடவுளுடைய குழப்பங்கள்தான். நகுலனின் இருப்பைச் சொல்லும் ஒரு கவிதையை நான் அடிக்கடி நினைத்துக்கொள்வேன்.
வீட்டிற்குள்
இருந்தோம்
வெளியில்
நல்ல மழை
ஒரு சொரூப நிலை.