நகுலன்: சில கேள்விகளும் பதில்களும் (2) - சுகுமாரன்


 நகுலனை வாசிக்கையில் நமக்கு ஏற்படும் ஆழமான சில வினாக்களை தமிழின் முக்கிய எழுத்தாளர்கள் சிலரிடம் கேட்டோம். அந்த பதில்களில் ஒன்று கீழே:


1.      இன்மை: நகுலனின் கவிதைகளில் பறவைகள், வீட்டின் அமைப்பு, நிழல், பூனை, சூரல் நாற்காலி, வாசிப்பு ஒவ்வொன்றும் குறியீடாகிறது. ஆனால் வழக்கமான குறியீட்டு கவிதைகளில் வருவது போல் அவர் எதையும் பிரத்யேகமாய் குறியீடாக்குவது இல்லை. நேரடி கவிதைகளே எழுதுகிறார். நேரடிக் கவிதையின் பொருட்களை இயல்பாக குறுக்கீடின்றி குறியீடாக்கும் பாணி நகுலனுக்கு மட்டும் உரித்தானது எனலாமா?

சுகுமாரன்: இது தமிழில் தொடர்ந்து செய்யப்பட்டிருக்கிற பாணிகளில் ஒன்று. “மாங்காய் பால் உண்டு மலை மேல் இருப்பார்க்கு. தேங்காய்ப் பால் ஏதுக்கடி குதம்பாய்” எனும் சித்தர் வரியை வெறும் கவிதையாய் படித்து புரியவில்லை என்றும் கூறலாம். ஆனால் சித்தர் மரபை அறிந்தவர்களின் இதில் ஒவ்வொரு சொல்லின் மறைபொருளையும் அறிவார்கள். இந்த மரபை தான் நான் சொன்னேன்.

ரெண்டு விசயங்கள். ஒன்று கவிதையின் சூழல். அப்புறம் கவிஞன் உருவாக்கக் கூடிய ஒரு சூழல். நகுலன் “கொல்லிப்பாவையில்” அச்சில் வந்த அவரது முதல் கவிதை துவங்கி இறுதிக் கவிதை வரை ஒரு கவிதை சூழலை தொடர்ந்து உருவாக்கி வந்தவர். “யாருமற்ற இடத்தில் என்ன நடக்கிறது” என்கிற வரியை நான் எழுதி சுகுமாரன் என கீழே போட்டால் அது கவிதை கிடையாது. ஆனால் நகுலனின் பெயர் வரும் போது அதற்கு இன்னும் கனம் கூடுகிறது. இதற்கான கவிதைச் சூழலை தான் அவர் உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்.

நகுலன் மேற்கில் எமிலி டிக்கின்ஸனால் தாக்கம் பெற்றிருக்கலாம் என தோன்றுகிறது. “ஒரு மேஜை மீது வயலட் ரோஜா இருக்கிறது” என வாசித்த உடனே எமிலி டிக்கின்ஸன் நினைவு வருகிறார். ஏனென்றால் இதைப் பற்றி அவர் மீள மீள எழுதியிருக்கிறார். இதே பாணியில் தான் நகுலன் சூரல் நாற்காலி, செம்புத்தண்ணீர், வெற்றிலை, பிஜாய்ஸ் பிராந்தி என தொடர்ந்து தொடர்ந்து சொல்லி வரும் போது அவை தொடர்பான ஒரு கவிதைச்சூழலை வாசகன் உருவாக்கி கொள்கிறான். அதன் வழி நகுலனை அணுகுகிறான்.

இன்மை: நகுலனின் இந்த பாணியை தமிழில் வேறு யாரும் பின்பற்றி இருக்கிறார்களா, அவருக்கு முன்னோ பின்னோ?

சுகுமாரன்: அதிகமாய் செய்ததில்லை.