நகுலன்: சில கேள்விகளும் பதில்களும் (3) - எஸ்.ராமகிருஷ்ணன்


 நகுலனை வாசிக்கையில் நமக்கு ஏற்படும் ஆழமான சில வினாக்களை தமிழின் முக்கிய எழுத்தாளர்கள் சிலரிடம் கேட்டோம். அந்த பதில்களில் ஒன்று கீழே:



1.      இன்மை: வேறெந்த எழுபது எண்பதுகளின் கவிஞனை விடவும் நகுலன் இன்றைய நவீன மனதுக்கு நெருக்கமாக தோன்றுகிறார். எதையும் யாரையும் ஏற்க முடியாமை, யாராலும் புரிந்து கொள்ளவோ உரையாடவோ இயலாது ஒடுங்கிப் போதல் என சமூகம், குடும்பம், உறவுகளுக்கும் என்பவற்றுக்கும் அவருக்கும் இடையே ஒரு உரையாடல் முறிவு நேர்கிறது. அவரிடம் ஒரு மனம் சார்ந்த விளிம்புநிலைத் தன்மை உண்டு எனலாமா?

எஸ்.ராமகிருஷ்ணன்: நகுலனைப்பற்றிய உங்களின் அவதானிப்பில் இருந்து இந்தக் கேள்வியை உருவாக்கியிருக்கிறீர்கள், அது எனக்கு ஏற்புடையதில்லை, நகுலன் 1960களின் பிற்பகுதியில் எழுத துவங்கி அவரது நிழல்கள் 1965ல் வெளியானது, நினைவுப்பாதை 75ல் வெளியானது , நாய்கள் , நவீனன் டயரி ஆகியவையும் எழுபதுகளின் இறுதியில் தான் வெளியானது, கோட்ஸ்டாண்ட் கவிதைகள் 80ல் வந்ததாக எனது ஞாபகம், எண்பதுகளின் கவிஞர்களாகக் கலாப்ரியாவும் விக்ரமாதித்யனும் தேவதச்சனும் கல்யாண்ஜியும் ஆத்மநாமும் நினைவிற்கு வருகிறார்கள், நகுலன் எண்பதுகளின் கவி என்பது சற்று நெருடுகிறது. 

எண்பதுகளின் கவிகளுடன் நகுலனை ஒப்பிட முடியாது, நகுலனின் கவிதைகளை விடவும் எனக்கு அவரது நாவல்கள் மீது தான் அதிக விருப்பம், கவிதையில் அவருக்கு முன்னோடிகள் உண்டு, சித்தர்மரபில் இருந்து ஷண்முகச் சுப்பையா வரை பலரும் அவரது கவிதைக்கான முன்மாதிரிகளாகத் தெரிகிறார்கள், ஆனால் உரைநடையில் அவரது எழுத்து முற்றிலும் புதியது

மௌனியிடம் காணப்படும் spiritual experience நகுலனிடம் இருக்கிறதா என ஒருமுறை தேவதச்சன் என்னிடம் கேட்டார்

மௌனி இருத்தலை பெரும் துக்கமாகக் காண்பவர், சாவின் முன்பாக வைத்தே அவர் வாழ்க்கை யை மதிப்பிடுகிறார், நகுலன் அப்படியில்லை , தெருவில் செல்லும் சைக்கிள்காரன் முதல் திருவள்ளுவர் வரை அத்தனை மனிதர்களையும் அவர்களின் வாழ்வனுபவங்களை நேசிக்கிறார், எதிர்பாராமையும் நிச்சயமின்மையும் தான் அவரது பிரச்சனை, சாவு அவரைப்பொறுத்தவரை சொல்லில் உருவாகும் ஒரு அனுபவம்

உடல் குறித்து நகுலன் எழுதியது எல்லாம் அதன் அவஸ்தைகளைப் பற்றியே, ஆனால் மௌனியிடம் உடல் சார்ந்த ஈர்ப்பும் அதன் வழியே இன்பங்களை உணரத்துடிக்கும் ஆசையும் இருக்கிறது, மௌனியிடம் தவிப்பும் பெருமூச்சுமிருக்கிறது, அதை அவர் சாவின் முணுமுணுப்பாக புரிந்து கொள்கிறார், நகுலன் அப்படியில்லை

நகுலனிடம் அன்றாட வாழ்வின் நெருக்கடிக்குள் உழன்றபடியே அதன் ஆழ்நிலைகளை அறியும் முனைப்பு இருக்கிறது, அதிலிருந்து விலகிப்போக அவர் ஒருபோதும் விரும்புவதில்லை, ஆனால் மௌனியிடம் மிககுறைவாகவே தினசரி உலகம் கவனம் பெறுகிறது

நகுலனின் பிரச்சனை மனிதர்களுடன் கொள்ளும் உறவில் ஏற்படும் சிக்கல்களும் முரண்களும் கசப்புணர்வுகளும் அபத்தங்களுமே, அவருக்கு நாய்கள் பூனைகள் மழை காற்று மரம் எதனுடனும் எளிதாக ஒன்றிவிட முடிகிறது, மனித உறவுகள் தான் சிக்கலாகத் தோன்றுகின்றன,  அதிலும் குறிப்பாக நட்பும் குடும்ப உறவுகளுமே.

நகுலன்  தனது படைப்புகளில் தினசரி வாழ்க்கையை  மூன்று தளங்கள் கொண்டதாக காட்டுகிறார், ஒன்று அதன் தோற்றநிலை, மற்றொன்று அதன் ஊடாக வெளிப்படும் அரூபநிலை, மூன்றாவது அதை நினைவு கொள்ளும் விதம், மூன்றும் புனைவில் ஒன்று கலக்கின்றன

நகுலனின் படைப்புகளில் மாறுபட்ட மனிதர்கள் இடம்பெறுவதில்லை, சாமானியர்கள் தான் அதிதீவிரமான, மாறுபட்ட மனநிலைகளை அடைகிறார்கள், வெளிப்படுத்திக் கொள்கிறார்கள், நினைவுகளை ஒருமித்து வளர்த்து எடுத்து விவரிப்பதை பலரும் எழுதிய போது இவர் நினைவுகளைச் சிதறடிக்கிறார், எவரது நினைவுகள் எனப் பிரித்து அறியமுடியாதபடி அவற்றை உருமாற்றுகிறார். 

நகுலன் கவிதைகள் அவரது புனைவெழுத்துகள் அளவிற்கு complex ஆனவையில்லை, ஆனால் அந்த எளிமை நீரின் எளிமை போன்றது, அது கவிதையை வாசகனுக்கு நெருக்கமாக்குகிறது

அனுபவங்களை விடவும் அதை உள்வாங்கும் மனதை கவனப்படுத்தும் எளிமையது, உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்துக் கொண்டு ஒன்றுமில்லாதது தான் வாழ்க்கை எனச் சுட்டும் பாங்கே அதிகம் வெளிப்படுகிறது. ஆனால் நகுலன் கொண்டாட்டங்களை விரும்பக்கூடியவர், அதற்காக ஏங்கியும் இருக்கிறார், ஆனால் அதைத் தனது கவிதைகளில் அரிதாகவே வெளிக்காட்டியிருக்கிறார் 

நகுலனின் கவிதை இன்றைய வாசகனுக்குத் தோற்றுப்போன ஒருவரின் விரக்தி அடைந்த குரலைப் போலக் கேட்ககூடும், ஆனால் அது உண்மையில்லை, சமூகம் உருவாக்கிய தான் எனும் அடையாளத்தை அவர் மாற்றிக்காட்டுகிறார். புறநெருக்கடிகளை சமாளிக்க அகசஞ்சாரத்தை வழியாக காட்டுகிறார்.  மனதின் இடையில்லாத சஞ்சாரமும் அது கொள்ளும் விசித்திர கற்பனைகளுமே அவரை இயக்குகின்றன. 

ஜென் கவிதைகள் அளவிற்கு நகுலன் இயற்கையை வியப்பதில்லை, ஆனால் இயற்கையை அவர் வெளிப்படுத்தும் விதம் ஒரு ஜென்நிலையைத் தரவே செய்கிறது, ஐரோப்பிய கவிகளைப் போல அவரிடம் இருத்தல் குறித்த துக்கமில்லை, ஆனால் இருத்தல் தரும் வலிகளையும் அதன் ஊடாக இந்த அனுபவங்கள் தனக்கு மட்டும் நடக்கவில்லை, மானுடத் துயரின்  சிறு துளி தன்மீதும் படுகிறது என உணர்வதும் விதமும்  அவரது கவிதைகளில் வெளிப்படுகின்றன. 

இப்படிச் சொல்வதற்கு நகுலன் குறித்து நிறைய இருந்து கொண்டேயிருக்கிறது, அதன் காரணமாகவே அவரைத் திரும்பத் திரும்பப் படித்துக் கொண்டேயிருக்கிறேன்.