நகுலன்: சில கேள்விகளும் பதில்களும் (4) - யவனிகா ஸ்ரீராம்

1.    

 நகுலனை வாசிக்கையில் நமக்கு ஏற்படும் ஆழமான சில வினாக்களை தமிழின் முக்கிய எழுத்தாளர்கள் சிலரிடம் கேட்டோம். அந்த பதில்களில் ஒன்று கீழே:


   இன்மை: நீங்கள் அரசியல், சமூகம் சார்ந்த விளிம்புநிலை கவிதைகள் எழுதுகிறீர்கள். நகுலனை இதே பாணியை ஆனால் உளச்சிதைவு, ஆன்மீகம் சார்ந்து பின்பற்றியவராக பார்க்கலாமா?

யவனிகா ஸ்ரீராம்: நான் அவரது எந்த வரிசையிலும் வைக்கவில்லை. அவர் தமிழில் முதன்முறையாய் இருப்பின் அபத்தத்தை கவிதையில் வெளிப்படுத்தினார். முன்னர் நான் அவர் கவிஞனே அல்ல என ஒரு நேர்காணலில் கூறினேன். ஆனால் பின்னர் யோசித்து பார்த்தால் அபத்தம் எனும் தளத்தில் கவிதை இருக்க முடியும் என தோன்றியது.

நகுலன் இருத்தல் சார்ந்த பிரச்சனைகளை எழுதும் போது அது அவர் சொந்த பிரச்சனைகள் அல்ல. இருத்தலை விமர்சன பூர்வமாய் எழுதியிருக்கிறார் எனலாம். அதை பகடி பண்ணி இருக்கிறார். நகுலனை வகைப்படுத்துவது என்றால் சித்தர் மரபில் வைக்கலாம். நம் சித்தர்களைப் போல் அவர் மனநலக் குறிப்புகளை எழுதினார் எனலாம். வாழ்க்கையில் இருந்து தப்பிக்க அதை அபத்தமாக்கி பார்த்திருக்கிறார்.


ஆனால் நான் அவரை ஒரு நவீன கவிஞர் என கூறமாட்டேன். ஏனெனில் நவீன கவிதையை நான் வேறு ஒரு கருவியாக பார்க்கிறேன். அதற்கு வேறு தேவைகள் உள்ளன. மேலும் பிச்சமூர்த்தி ஆரம்பித்து வைத்த நவீன கவிதை பாணியில் இவரை சேர்க்க முடியாது. இவர் ஒரு தனி போக்கை உருவாக்கியவர். ஆனால் அது சித்தர் மரபு தான். நவீன கவிதை மரபு அல்ல. சித்தர் மரபின் மனநலக் குறிப்புகளை அவர் அபத்தமாகவும் பகடியாகவும் செய்து அளித்தார். நகுலனின் கவிதை துறவு நிலையில் இருந்து அபத்தம், ஜென் நிலைகளுக்கு உயர்கிறது என்பதில் உடன்படுவேன். அவரது கவிதைகளில் எனக்கு நிறைய விமர்சனங்கள் உண்டு. ஆனால் அவர் உருவாக்கும் அபத்தத்திற்காக அவரை நிச்சயம் நாம் கொண்டாட வேண்டும்.