1.
நகுலனை வாசிக்கையில் நமக்கு ஏற்படும் ஆழமான சில வினாக்களை தமிழின் முக்கிய எழுத்தாளர்கள் சிலரிடம் கேட்டோம். அந்த பதில்களில் ஒன்று கீழே:
இன்மை:
நகுலனிடம் ஒரு ஆன்மீகம் உள்ளது எனக் கூறலாமா அல்லது உளச்சிதைவின் மூலம் கிடைக்கும்
வெளிச்சம் தானா அது?
தமிழவன்: இந்த ரெண்டு பார்வையை தாண்டி போக
வேண்டும் என நினைக்கிறேன். இந்த பார்வைகளில் ஒன்று இலக்கியத்துக்குரியது அல்ல.
அரசியலுக்கு உரியது. நகுலனை தமிழ் சமூகம் என்றல்ல எந்த சமூகமும் அங்கீகரிக்காது.
ஏனென்றால் அவர் இலக்கியத்தை ஒரு தனி மொழி கொண்டு எழுதினார். இது வழக்கமாய்
புழங்கும் மொழியல்ல, இலக்கணங்கள் எழுதப்படாத ஒரு புது மொழி இது. அப்பால் மனித
குலத்தை எடுத்துக் கொண்டு போகக் கூடிய ஒரு பாலம் அவர் மொழி. அந்த பாலத்தில்
தைரியமாக கடந்து போவதற்கு அவர் இப்போதுள்ள விதிமுறைகள், நாகரிகங்களை கடந்து
இன்னொன்றை உருவாக்குகிறார். சிறந்த இலக்கியங்கள் எல்லாம் இப்படித் தான்
செயல்படும்.
இந்த புது மொழிக்கு பெயர் கிடையாது. ஆகையினால் அதற்கு பெயர் கொடுக்க
அவர் நிறைய புத்தகங்கள், கவிதைகள், நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என
கஷ்டப்பட்டுக் கொண்டே இருந்தார்.
நகுலனை சைக்கிள் தூக்கிக் கொண்டு போகிறவர், தண்ணியடிப்பவர் என்கிற
அளவில் தான் பொதுவாக அறிமுகப்படுத்துகிறார்கள். பொதுப்புத்தியின் பால் பட்டு
சமூகத்துக்கு அவரை கொண்டு சேர்க்க வேண்டியோ அறிமுகப்படுத்தினர்வர்களின் இயலாமை
காரணமாகவோ அப்படி நடந்தது. ஆனால் இனி நாம் அவரது படைப்பில் உள்ள அப்பால் தன்மையை
பரிசீலிக்க வேண்டி உள்ளது.
அவர் தனியாக தன்வழியில் இயங்கிக் கொண்டிருந்தார். அவ்வாறு அவரைப் போல்
இயங்கின வேறு சிலரையும் தமிழ் சமூகம் கண்டுகொள்ளவில்லை. நாம் இதை இனி எப்படி பதிவு
செய்ய போகிறோம் என்பது முக்கியம்.
இன்மை: இதை ஒட்டி ஒரு கேள்வி: நகுலன் ஒரு அப்பால் சமூகத்தை உருவாக்க
முயன்றதாய் கூறினீர்கள். அதற்காக அவர் புது விழுமியங்கள், நம்பிக்கைகளை
கட்டமைத்தாரா அல்லது ஏற்கனவே உள்ளவற்றை கலைத்து போட்டதன் வழி செய்தாரா?
தமிழவன்: நகுலன் ஒரு பயணத்தில் முன்னால் போய்க் கொண்டிருக்கிறார்.
அப்போது அவர் உருவாக்குவதற்கு பெயர் கிடையாது. விழுமியம் என்றால் அவர் ஒரு புது
விழுமியத்தை கொண்டு வந்தார் என சொல்வேன். நீங்கள் A என்பதை
விழுமியம் என சொல்லிக் கொண்டிருந்தீர்கள் என்றால் அவர் Bஐ பற்றி பேசினார் என்பேன். அதேவேளை தனது விழுமியம், மரபு போன்ற
கருத்தாங்களையும் தாண்டி போகக் கூடிய தன்மையும் கொண்டிருந்தார். அவரை மேற்கத்திய
மரபில் கொண்டு போய் பொருத்த முடியாது என்பதே என் நிலைப்பாடு. நவீனத்துவத்தின் பல
சொல்லாடல்கள், நாகரிகங்கள், சொல்லாடல்களை அவர் தமிழுக்கு அறிமுகப்படுத்தினார்
என்றாலும் கூட அவர் அந்த மேற்கத்திய மரபில் சேரவில்லை. உதாரணமாய் அவர் வெர்ஜீனியா
வூல்பை இங்கே அறிமுகப்படுத்துகிறார். அதேவேளை வெறுமனே வெர்ஜீனியா வூல்பின்
விழுமியங்களே அப்படியே இங்கே கொண்டு வரவில்லை. ஒரு பண்பாட்டை கடந்து இங்கே கொண்டு
வரும் போது இங்குள்ளதாய் உருமாற்றுகிறார். அவர் ஒரு புது மொழியை உருவாக்கியதாய்
சொன்னேன். அதை செய்யும் போது இங்கே ஒரு பண்பாட்டுக்குள் இயங்கிக் கொண்டு வெளியில்
இருந்து ஒரு விசயத்தை கொண்டு வந்தார். இந்த பண்பாட்டுக்குள் இருந்து கொண்டே,
செய்திகளுக்குள் இருந்து கொண்டே செய்திகளுக்கு அப்பால் போகிற ஒன்றை சொல்லிக்
கொண்டிருந்தார். ஆனால் இந்த அப்பால் தன்மை ஒரு மாயை என்பது அல்ல. மாயைக்கு எதிரான
ஒன்றை தான் நான் அவரிடம் பார்க்கிறேன். இதை ஒரு சூனியவாதம், அத்வைதம் என சுருக்கக்
கூடாது என நினைக்கிறேன். அதாவது அவர் சொல்லிக் கொண்டிருந்தது நமக்கு புரியவில்லை
என்பதற்காக நமக்கு புரிந்ததை அவர் மீது திணிக்கக் கூடாது.
இன்மை: இங்கு ஒரு ஐயம். நகுலனை நீங்கள் சமூகத்தை அதற்கு அப்பால்
கொண்டு போகிறவர் எனக் கூறி ஒரு பாலத்தை உருவாக்க முயன்றார் என்ற போது எனக்கு
நீட்சே நினைவு வந்தார். ஏனென்றால் அவர் மனிதனை அதிமனிதன் நோக்கிய பாலமாக கண்டார்.
அதேவேளை நீட்சே வாழ்வில் ஆழ்ந்து நம்பியவராக, தனதான நம்பிக்கை கொண்டவராக
இருந்தார். ஆனால் நகுலன் ஒரு வாழ்க்கை மறுப்புவாதி, நம்பிக்கையற்றவர் எனும் ஒரு
சித்திரம் உள்ளது. அவர் தன்னை நிராகரிக்க்க் கூடியவராக கூறுகிறொம். அப்படிப் பட்ட
ஒருவரால் எப்படி அப்பாலான ஒரு சமூகத்தை உருவாக்க முடியும்?
தமிழவன்: நகுலன் தன்னை மறுத்தவர் என்கிற ஒரு சித்திரம் நமக்கு உள்ளது.
அவன் தன்னை மறுக்கிறார் தான். ஆனால் தன்னை மறுக்கிற அதேவேளையில் தன்னை அவர்
அனைத்தையும் கடந்த ஒரு பிரபஞ்சத்தில் தான் சொல்ல வருகிறதை வைக்கிறார் என
நினைக்கிறேன். அதாவது அவர் சுயத்தை மறுக்கும் போது எல்லாம் மறுக்கப் படுவதில்லை.
தன்னை மறுக்கும் போது the
otherஐ (“பிறிதை”) வலியுறுத்துகிறார். பிறிது
என்பது உலகின் ஒரு பெரும் விரிவாக்கம்.
அவர் தன்னை அழிக்கும் போது எல்லாம் அழிந்து போகிறது என சிலர்
சொல்கிறார்கள். இதன் பொருள் தானில் தான் எல்லாம் அடங்கி இருக்கிறதென்பது. நான்
இந்த தனிமனித வாதத்தை ஏற்கவில்லை. தன்னிலை, ஈகோ, நான் இதையெல்லாம் நான்
ஏற்கவில்லை. தன்னிலையை அழிக்கும் போது நகுலன் பிறிதை வலியுறுத்துகிறார்.
இன்மை: இங்கு மற்றொரு சந்தேகம். இந்த பிறிதை நீங்கள் உலகமாக
பார்க்கிறீர்கள். கடவுளாக பார்க்கவில்லை. அப்படித் தானே?
தமிழவன்: இல்லை இல்லை நகுலனிடம் கடவுள் கிடையாது. அவருடைய எழுத்துக்களில் கடவுள்
மறுப்பு இருக்கிறதாக தான் நான் பார்க்கிறேன். பெரியாரோடு தான் நகுலனை அந்த வகையில்
நான் ஒப்பிடுவேன். அதாவது பெரியாரை ஒரு தத்துவவாதி என பார்க்கும் போது. அவருக்கும்
இருவருக்கும் இடையில் நெருக்கமான பல அம்சங்கள் இருப்பதை நான் கவனித்திருக்கிறேன்.
நகுலன் தான் என்கிற சூன்யவாதத்தில் போய் அடங்கவில்லை. நிறைய
பிராமணர்கள் சூனியவாதம் என்கிற அடையாளத்தை கொண்டு தான் அவரை அங்கீகரித்தார்கள்.
அந்த சிந்தனைப்பள்ளியோடு முற்றிலும் நான் முரண்படுகிறேன்.