நகுலனை
வாசிக்கையில் நமக்கு ஏற்படும் ஆழமான சில வினாக்களை தமிழின் முக்கிய எழுத்தாளர்கள்
சிலரிடம் கேட்டோம். அந்த பதில்களில் ஒன்று கீழே:
இன்மை: நகுலன் கவிதைகள் வெறும் தேய்வழக்கான துணுக்குகள் எனும் ஒரு
குற்றச்சாட்டு உள்ளது. அது குறித்த உங்கள் கருத்தென்ன?
போகன் சங்கர்: உண்மை தான். நகுலனின் நான்லீனியர் பாணி எழுத்துக்கு
எழுபதுகளில் ஒரு மதிப்பிருந்திருக்கலாம். ஏனெனில் அன்று எல்லாரும் லீனியராக
எழுதினார்கள். ஆனால் இன்று நகுலன் எனக்கு பழைய எழுத்தாளராக தெரிகிறார்.
நகுலனிடம் உள்ளது ஒரு கோணல். அதை ஆரம்பத்தில் எல்லாரும் ரசித்திட
நகுலன் அந்த பாணியில் போய் மாட்டிக் கொண்டார் என நினைக்கிறேன். “ராமசந்திரனா என்று
கேட்டேன்...” எனத் தொடங்கும் கவிதையை எடுத்தால் அது கவிதையா துணுக்கா என ஒருவர்
கேட்கலாம். ஏனெனில் அதில் கவித்துவமாக ஒன்றும் இல்லை. ஒருவித கருத்துத் திருகல்
தான் இக்கவிதை.
எனக்கு நகுலனின் கவிதைகளை விட நாவல்கள், குறிப்பாய் “நினைவுப்பாதை”
அதிகம் பிடித்தமானது. அவரது கவிதைகளின் சிக்கல் அவை விரிவடையாமல் சுருங்குகின்றன
என்பது. ஆனால் “நினைவுப்பாதையில்” அவரது படைப்புலகம் விரிவடைகிற சாத்தியங்கள்
உள்ளன.
எழுத்து ஒரு ஆற்றுப்படுத்தும். ,மனிதனின் அகக்காயங்களை குணப்படுத்தும்
ஆற்றல் கொண்டிருக்க வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் நகுலனின் எழுத்து நோய்மையில்
சுழல்வதுடன் நின்று விடுகிறது. அதைத் தாண்டி நம்மை மேம்படுத்துவதில்லை.
நகுலனை பிரதியெடுப்பவர்கள், பின்பற்றுபவர்களாக கூறிக் கொள்ளுகிற ஒரு
குழு இங்கே உள்ளது. ஆனால் நகுலனை இனி யாரும் பிரதியெடுக்க முடியாது. ஏனெனில் இனி
இந்த இணைய, ஊடக உலகில் யாரும் சமூகத்தில் இருந்து துண்டுப்பட்டு வாழ முடியாது.
சமூகத்தில் இருந்து விடுபட்டு ஒரு சாமியாரைப் போல் அவர் துறவு
வாழ்க்கை வாழ்ந்ததும் நகுலன் வழிபாட்டுக்கு காரணமாகலாம். ஏனெனில் நம் சமூகம்
நெடுங்காலமாய் துறவிகளை வழிபட்டு வந்தது தானே. ஆதலால் இங்கு துறவியின் இடத்தை
எழுத்தாளன் பிடித்துக் கொண்டான். துறவிக்கான எல்லா குணாதசியங்களையும்
எழுத்தாளனிடம் எதிர்பார்த்தார்கள். நகுலன் விசயத்தில் இது தான் நடந்தது.
அது போல் கவிதை என்றால் பித்துமனநிலையில் இருந்து தான் வர முடியும்
என்பதான ஒரு கற்பிதம் எழுபது எண்பதுகளில் இங்கு இருந்தது. இதற்கு பொருத்தமான ஒரு
பாத்திரமாய் நகுலன் பொருந்திப் போனார் என்றும் சொல்லலாம்.