1. நகுலனை வாசிக்கையில் நமக்கு ஏற்படும் ஆழமான சில வினாக்களை
தமிழின் முக்கிய எழுத்தாளர்கள் சிலரிடம் கேட்டோம். அந்த பதில்களில் ஒன்று கீழே:
இன்மை:
நகுலனிடம் ஒரு ஆன்மீகம் உள்ளது எனக் கூறலாமா அல்லது உளச்சிதைவின் மூலம் கிடைக்கும்
வெளிச்சம் தானா அது?
இந்திரன்: நா.பிச்சமூர்த்தியிடம் இருந்தது போன்ற ஒரு
வேதாந்த விசாரம் நகுலனிடம் இருந்ததில்லை. இருத்தலை பற்றிய ஒரு சில கேள்விகளை
எழுப்பிய உடனே அவர் ஏதோ தத்துவார்த்த தளத்துக்கு சென்று விட்டதாக ஒரு குருபீடம்
அவருக்கு கட்டப்பட்டது. உண்மையில் நகுலன் என்பவர் தன்னுடைய மொழி லாவகத்திலும்
உத்திமுறைகளிலும் இத்தகைய சிறந்த பங்களிப்பை நிகழ்த்தியிருக்கிறார் என்பதைப் பற்றி
யோசிக்காமல், அவற்றை அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள முனையாமல் அவரைப் பற்றின
துதிபாடல்களை எழுப்பியதன் காரணமாக தமிழுக்கு நிகழ்ந்த இழப்புகள் ஏராளம்.
அவர் தனது மூத்த வயதில் senile ஆன நிலையில் அவரைச் சென்று “தரிசித்த”
பல எழுத்தாளர்கள் அவர் வாயில் இருந்து உதிர்ந்த வாக்கியங்களை ஏதோ மகாவாக்கியஙக்ள்
போல் கற்பித்து கொண்டார்கள். வெளியிலும் பரப்பினார்கள். உண்மையில் நகுலனின் நவீனன்
டைரியும் வேறு சில கவிதைகளும் மிக உன்னதமான பங்களிப்புகள்.
இன்மை: இதை ஒட்டி ஒரு கேள்வி. நீங்கள் நகுலனை
நா.பிச்சமூர்த்தியுடன் ஒப்பிட்டீர்கள். அவர் வாழ்வில் சில ஆழமான நம்பிக்கைகள்
கொண்டிருந்தவர். அவரைப் போன்றே சி.சு.செல்லப்பா ஒரு காந்தியவாதி. ஆக இவர்களிடம் ஒரு
லட்சியவாதம் அன்று செயல்பட்டது. ஆனால் நகுலன் எந்தவித நம்பிக்கைகளையும் பற்றாமல் வெட்டவெளியில்
தத்தளித்தவராக தோன்றுகிறார். நகுலன் பற்றின இந்த சித்திரம் சரிதானா?
இந்திரன்: நகுலன் ஒரு கலகவாதி. ஆல்பர்ட் காம்யு மாதிரி
வாழ்க்கை குறித்து, இருப்பு குறித்து அடிப்படை கேள்விகள் நகுலனிடம்
இருந்திருக்கிறது. அதைத் தான் நாம் எடுத்து பேச வேண்டும்.
ஆல்பர்ட் காம்யுவின் சிசிபஸ் தத்துவம் இந்த இடத்தில்
நினைவு கொள்ளத்தக்கது. சிசிபஸ் கடவுளிடம் சாகாவரம் கேட்கிறான். கடவுளும்
அருள்கிறார். ஆனால் பதிலுக்கு ஒரு சிகரத்தில் இருந்து உருட்டி விடப்படும் ஒரு
கல்லை அவன் திரும்ப திரும்ப மேலே உருட்டி கொண்டு வர வேண்டும். மேலே கொண்டு
சென்றதும் கல் மீண்டும் கீழே வந்து விடும். ஆனால் சிசிபஸ் சலிக்காமல் ஒவ்வொரு
முறையும் உருட்டி மேலே கொண்டு போவான். மனிதன் இது போல் வாழ்க்கையின் கடுமையான
போராட்டத்தில் தன் இருப்பின் மீட்சியின்மை பற்றி அலுக்காமல் தொடர்ந்து போராடிக் கொண்டே
இருக்க வேண்டும் என்றார் காம்யு. சிசிபஸை போல் அதே புலம்பலற்ற மகிழ்ச்சியுடன்
நாமும் வாழ வேண்டும் என்றார் அவர். அது மாதிரியான கொண்டாட்டமும் மகிழ்ச்சியும்
நகுலனிடம் இருந்தது.
இன்மை: அருமையான ஒப்பீடு இது. ஆல்பர்ட் காம்யு தனது “பிளேக்”
நாவலில் நிர்கதியான சூழலில் மனிதன் ஏற்க வேண்டிய ஒரு அடிப்படை அறமாக பொறுப்புணர்வை
சொல்கிறார். இந்த பொறுப்பை ஏற்பதில் உள்ள ஒரு மாண்பையும், மனத்திட்பத்தையும்
வலியுறுத்துகிறார். நாம் நகுலனிடம் இந்த எதிர்த்து நிற்கும் மனத்திட்பத்தை பார்க்க
முடிகிறதா அல்லது வெறும் வெறுமையை, அதை நோக்கையில் ஏற்படும் கையறு நிலை மட்டும் தெரிகிறதா?
இந்திரன்: நீங்கள் குறிப்பிடும் மனத்திட்பத்தை நிச்சயம்
நகுலனிடம் பார்க்க முடியவில்லை. ஆனால் ஏன் நகுலனை நாம் குற்றம் சாட்ட கூடாது என்றால் அவருடைய வாழ்க்கையில் அவர்
ஒரு கலகக்காரராக வேதாந்த விசாரத்தோடு தன்னை வெட்டிக் கொண்டார்.
இன்மை: இது ஒரு அருமையான அவதானிப்பு.
இந்திரன்: ஆனாலும் அவர் ஒரு நல்ல கலகக்காரர் தான். அவருடைய
”மழை-மரம்-காற்று” தொகுப்பில் உள்ள கவிதைகள் மிக சிறப்பானவை. ஆனால் கரணம் தப்பினால்
மரணம் வகை கவிதைகள் அவை. அப்படி எழுதுவது மிக மிக ரிஸ்கான விசயம். ஏனென்றால் அவரை
பின்பற்றி அவ்வாறு அதே ஆழம் இன்றி எழுதினவர்கள் தமிழில் தோற்றிருக்கிறார்கள்.
இன்மை: நகுலன் பற்றி தனியாய் ஆழமாய் அலசி எழுதப்பட்ட
நூல்கள் வந்ததில்லை இல்லையா?
இந்திரன்: காவ்யா நகுலன் பற்றின தனிக்க்கட்டுரைகளின்
தொகுப்பை கொண்டு வந்திருக்கிறார்கள். தனி ஆய்வு நூல் என்றால் தமிழில் யாருக்கு செய்திருக்கிறார்கள்? நமக்கு பீடம் கட்டுவதில் தான் ஆர்வம் அதிகம். என்னிடம்
கேட்டால் நகுலன் சுந்தரராமசாமியை விட முக்கியமான நபர்.