ஏன் முகச்சவரம் செய்யவில்லை
ஏன் வீட்டை இவ்வளவு குப்பையாக
வைத்திருக்கிறாய்
ஏன் துணிகள் எல்லாம் இவ்வளவு அழுக்காக
இருக்கின்றன
அங்கே என்ன துர்நாற்றம் வீசுகிறது
நேற்றிரவு உண்ட பாத்திரங்களை கூட
கழுவாமல் என்ன செய்துகொண்டிருக்கிறாய்
ஏன் இன்னும் இரவு உணவு அருந்தவில்லை.
இன்று மாலை உன் வீட்டின் எதிர்வீட்டு
மாடியில்
சிவப்புச்சட்டை அனிந்திருந்த குட்டிப்பெண்
காகத்திடம் பேசிக்கொண்டிருந்தாள்.
அதை பார்க்காமல் முடங்கிகிடக்கிறாய்
என்று கோபப்பட்டது வீட்டுக்கு வந்த
கறுப்பு அன்னம்.
நான் என் கதையை சொன்னேன்
சரி வா, உனக்கு நீரில் நடக்க கற்றுத்தருகிறேன் என்றது அன்னம்
நான் நீரில் முழ்கிவிடுவேன் என்று
கதறினேன்
என்னை இழுத்து சென்ற கறுப்பு அன்னம் என்
கதையை தூக்கி ஆற்றில் போட்டது.
இப்போது நானும் கறுப்பு அன்னமும் நதியில் நடந்துகொண்டிருக்கிறோம்