இவரை பற்றி எழுத தகுதியற்று எழுதியது! - குமரகுரு


நகுலனின் அனைத்து கவிதைகளும் படித்தவன் என்று நான் சொன்னால், அது பொய்!

நகுலனின் கவிதைகள் சில நிதர்சனங்களை உடைப்பதற்கென பிறந்தவை.
முதல் முறை படிக்கையில் உள்ளே சுவாசம் போல் ஒட்டி கொண்டு நுரையீரல் வழியே மூளைக்கு சென்று பல்வேறு பரிணாமங்களில் யோசனைகளை தூண்டுவதாக இருக்கிறது அவரின் பல கவிதைகள்.

ஆசுவாசமாக படித்து சிலாகிக்க மடியாகவும் சில நேரங்களில் மாறி இருக்கிறது.

ஒரு கட்டு வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு புகையிலை
வாய் கழுவ நீர்
பிளாஸ்க் நிறை ஐஸ்
ஒரு புட்டி பிராந்தி
வத்திப்பெட்டி சிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு.

இந்த சுகத்தை அனுபவிக்கும் தருணங்களில்; இந்த கவிதையின் சுவை கூடி, வலி தருகிறது அவரின் பேனா மை!

ஆற்றல் எல்லோருக்கும் உண்டு.தீர்கதரிசனத்தை ஆற்றலோடு கலந்து நம் மீது தெளிக்கும் அவரின் கற்பனை திறன் நம்மை அதிசயக்க வைப்பதுதான்...

இருப்பதற்கென்று
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம்


எனக்கு
யாருமில்லை
நான்
கூட..

இந்த இரண்டு கவிதைகளில் தூது கொண்டு செல்லும் ஒரு புறாவை போல, எக்காலத்துக்குமான ஒரு தத்துவத்தை பதிவிடுகிற போது நான் மேல சொன்ன தீர்கதரிசனம் அவரின் கவி எழுதும் ஆற்றலோடு சேர்ந்து நம்மை வந்து சேர்கிறது. தமிழ் வாழும் வரை இதை படிக்கும் யாவருக்கும் பொருத்தமான வாழ்க்கை சார்ந்த கவிதைகள் இவை.

இன்னும் ஒரு நகுலனின் கவிதையில் நான் என்னையே நுழைத்து கொள்கிறேன்

களத்துமேட்டில்
வாளுருவி
மீசைதிருகி
நிற்கிறான் ஒரு மாவீரன்
போகும் பறவைகளனைத்தும்
அவன் தலை மீது
எச்சமிட்டன
அவன் மீசையை
எறும்புக்கூட்டங்கள்
அரித்தன
ஆனால் அவன் முகத்திலோ
ஒரு மகா சாவதானம்.

களத்துமேட்டை என் இடமாகவும் எறும்புகளை, பறவைகளை என் மீது அவநம்பிக்கை தூவும் என்னை தூசிக்கும் மனிதர்களாக நினைத்து கொள்கிறேன்... ஆனால் நானொன்றும் வாளுருவி நிற்கும் மாவீரன் அல்ல. வாழ்வுருவி நிற்கும் சாதாரணன். சாவதானத்தின் முனையில் தான் இந்த கவிதை பிறந்திருக்க வேண்டும். நானோ! அந்த மாவீரனோ! நகுலனாகவும் இருக்க முடிகிறது இந்த கவிதையில்.

என் போன்ற சாதாரணனுக்கும் பொருந்துகிற வரிகளை படைத்த அசாதாரணன் நகுலன்.

தனிமையை குடித்து குடித்து! தனிமையின் போதையில் எழுதிய அவரின் பல கவிதைகள் எழுத வரும் எவருக்கும் ஒரு அமிர்தம்!

முற்று புள்ளியை படித்து முடிக்கும் நேரத்தில் இன்னும் அழகாக உருவெடுத்து திரிந்து கொண்டிருக்கின்றன நகுலனின் பட்டாம்பூச்சிகள்.