நகுலன் சில நினைவுகளும் கவிதைகளும் - கலாப்ரியா





ஆயிற்று நகுலன் வீட்டிற்கு அம்முறை போய் வந்து 21 வருடங்கள்.அந்த முறை என்னுடன் வந்தவர் இலக்கியத்திற்கு சற்றும் சம்பந்தமில்லாத ஒரு நண்பர்.கொண்டாட்டங்களில் திளைத்திருந்த ஒரு மகாநாட்டு மனிதர்களிடமிருந்து விடுபட்டு ஒரு பைக்கில் அவரைச் சந்திக்கச் சென்றோம்.எங்களிடம் அவருக்காக உயர் ரக பிராந்தி ஒன்று இருந்தது.நாங்கள் போகிற போது அவருக்கு பணிவிடைகள் செய்யும் தூர்த்தைஎன்கிற என்னை நன்கறிந்த பெண்மணி அவரது வீட்டிலிருந்து தன் வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்தார்.அவர் அற்புதமாக சமைப்பார். எங்களைப் பார்த்ததும் போவதற்குத் தயங்கினார். சாப்பாடு தயாரித்துக் கொடுத்து விட்டுப்போகிறேனே என்றார். நான் வேண்டாம் என்று சொல்லி அவரை அனுப்ப பெரும் கஷ்டப்பட வேண்டியதிருந்தது. அவரது மகன் அப்போது போலீஸ் வேலைக்குத் தேர்வாகி இருந்தார்.எங்கள் கையில் பிராந்திக் குப்பியைப் பார்த்ததும் அய்யோ இவ்வளவு வேண்டாமே, இப்போ, என்று வேறு தயங்கினார்.நான் கொடுக்கவில்லை என்றதுமே கொஞ்சம் சமாதானமாகி விடை பெற்றுப் போனார். நகுலனுக்கு  அப்படியொரு மகிழ்ச்சி. அவரது தனிமை விலகியதில். என்னை விட என்னுடன் வந்திருந்த டாக்டர் நண்பரிடம்தான் அதிக மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.
அவரது “NON  BEING”  புத்தகப் பிரதியொன்றை, Thank you for the visit,-Nakulan, 24-1-93 என்று கையெழுத்திட்டு இருவருக்கும் தந்தார்.டாக்டர் வழி பூராவும்,சார் அந்தப் பாட்டிலைக் கொடுத்திருக்கலாமோ, திரும்பிப்போய் கொடுத்து விட்டு வருவோமா என்று சொல்லிக் கொண்டே இருந்தார்..
21 வருடங்களுக்கு மேலாகவே ஆகிறது. கொடுத்துவிட்டே வந்திருக்கலாம் என்று இன்னமும் தோன்றுகிறது.
     

NON-BEING…தொகுப்பிலிருந்து சில கவிதைகள் தமிழில் தர முயன்றிருக்கிறேன்.
*

*
அவன் புத்தன் போல
அமர்ந்திருந்தான்

அல்லது

மஹாத்மா போல
நடந்து சென்றான்

*
பக்கங்களைத் திருப்புங்கள்
புத்தகம் தன்னைத் தானே 
வாசித்துக் கொள்ளும்
*
நாட்காட்டி
தினசரி கிழிபடும்
நாட்களைக்
குவியலாக்கு
கொளுத்து
தீர்ந்த்து விஷயம்
*
குழியை மூடி அல்லது
குழியைத் தோண்டி
ஆட்கள்  வேலை செய்கிறார்கள்
நீ வேலை வாங்கு
*
வார்த்தைகளைப் போக அனுமதி
அவை விட்டுச் செல்வதை மட்டும்
தக்க வைத்துக் கொள்
இந்த வகையாக நீ
மேம்பட்ட வார்த்தைகளைப்
பெறுகிறாய்
*
வீட்டின் சங்கு போல் குழிந்த அறையொன்றில்
அப்படியொரு அமைதி
ஏதோ பூச்சி சப்திக்கும் ஓசை கூட
என்னைப் பதற வைக்கிறது
தனிமை என்னை வேட்டையாடுகிறது
கெட்டவர்களோ நல்லவர்களோ
எனக்கு மனிதர்கள் வேண்டும்
அதை விட
ஒரு தம்ளர் மது வெகு உசிதம்
அது
மாற்றுகிற மன உலகில்
எதற்கும் நீ பயப்பட வேண்டியதில்லை
அது
இல்லாமலிருத்தலுக்கு முந்திய
மனோ உலகு
*