அடுக்கக அலம்பல் - பா.வேல்முருகன்



கீழ் வீட்டில் இரண்டு நாட்களாக 
துக்கம் அனுஷ்டிக்கிறார்கள் 
தொடர்ந்து இரண்டு மரணம் 
இரண்டு வாரங்களில்...

இழவுக்கு வந்தக் கூட்டம் 
குடித்து குளித்து 
குடிக்க தண்ணியே இல்லாது  
பண்ணிட்டு
முதல் வீட்டு 
முதலியார் அம்மா... 

கோலம் போடாததைக் 
கேட்கப் போனால் 
"எல்லார் வீட்டிலும் தான் இழவு விழும்"
என்று காவலாளி அம்மா 
கடுப்பில் சொன்னதாய் 
கண்ணீர் விட்டதது 
வயதான கணவரை 
வாஞ்சையாய் நினைத்து
கீழ்வீட்டு ஆசாரிஅம்மா...   

சரியான வசதிகள் 
சாமர்த்தியமாய்த் 
தாராமல் 
சமயோசிதமாக
வாடகையேற்றி  
சாகடிக்கிறார் 
வீட்டின் உரிமையாளர்
கவிதைகாரனின் மனைவி!!!... 

பக்கத்து வீட்டில் 
பத்து பேர் இருக்கிறார்கள் 
எதிர்த்தவீட்டு அம்மா 
எங்க கொடியில் 
துணியைக் காயப்போட்டுவிட்டது
ஏழாவது வீட்டு  
இளம் ஆச்சி ...

மேல் வீட்டில் 
சுத்தமே இல்லை 
எப்பவுமே ஒரு 
கவிச்சி வாசனை...
வெள்ளி செவ்வாகூட 
வெளியில தலைகாட்ட முடியல
இது கீழ் வீட்டு அய்யர் அம்மா...

வாட்ச்மேன் நைட்டு 
ஒட்டு துணியில்லாமல் 
வாசலில் உறங்குகிறார் 
இது குடியிருக்கிற இடமா 
இல்ல கூத்தியா குடியா???
மனுஷன் இருக்கிற மாதிரி 
தெரியல இங்க!!!
இரெண்டாம் நம்பர் 
செபாஸ்டியன் மனைவி...


பெண்கள் ப்ளாட்டின் கண்கள்!!!