ஆத்ம நிலையம் - போகன் சங்கர்



பழக்கம் மனிதனை மூடிவிடுகிறது
பாலைவனத்தில் நகராத மனிதன் மணலாகிவிடுகிறான்
சன்னல் விளிம்பில்
அந்தூரியம் செடியும் அதன் ருது கால யோனி போன்ற மலரும்
வாங்கும்போது அதன்  விலைமதிப்பு தந்த பளபளப்பை இழந்துவிட்ட
நாம் பழக்கத்தை நம் கண்களில் இருந்து
எப்படியாவது உதிர்க்கவேண்டும்
பழக்கத்தின் கால்களை அதன் சத்தம் கேட்கிற மாதிரி ஒடிக்கவேண்டும்
நான் இரவெல்லாம்  என் மூளையின் மீது நண்டுகள் போல பற்றியிருந்
புத்தகங்களைக் கொன்றுவிட்டு வெளியே வருகிறேன்
பழக்கமாய் வசீகரிக்கும் சாலையை அழித்துவிட்டு வேறொரு சாலையை வரைந்து
அதற்குள் இறங்குகிறேன்

இப்போது நான் வேறொரு வாழ்க்கைக்குள் வந்துவிட்டேன்

சீழ்த் தாரையை கோடு போல
சாலையில் சிந்திச் செல்லும் யானைக்கால் லாரன்சின்
கண்களும் ஆனைக் கண்கள் போல சிறுத்து வருவதைக் கவனிக்கிறேன்
ரேசன்கடை வாசலில்  காலையிலேயே  முரட்டுத் துணிப்பையுடன
வந்து அமர்ந்திருக்கும் எபியின் முலைஒழுகி அவளது
கச்சையை நனைத்துக் கொண்டிருப்பதைக் கவனித்தேன்
இசிவுநோயில் இறந்த அவளது குழந்தையின் மரணச் சான்றிதழை அவள் வாங்கி
விட்டாளா என்று யோசிக்கிறேன்
போதை மீட்பு சிகிச்சையில் இருக்கும் பாஸ்டரின் மகன்
இரவு தீர்ந்தபின்பும் அரற்றும் சப்தம் கேட்கிறது
அவனது அம்மா அவனை வெளியே வந்து சற்று நேரம் கர்த்தரின் உலகைக் காணும்படி
கூப்பிட்டுக் கொண்டே இருக்கிறாள்
அவன் வீட்டு வாசலில் தொங்கும் கூண்டில் உள்ள குருவி
அலகில் ஒரு வெயில்த் துணுக்குடன் ரோடியோ ரோடியோ என்று ஆனந்தமாகப் பாடிக்
கொண்டிருக்கிறது
கம்யூனிஸ்ட் நூலகம் இன்று ஏனோ திறக்கவில்லை
தீக்கதிர்  விசிறப்பட்டு சாக்கடையில் கிடக்கிறத
அதை எடுத்து பத்திரமாக  வாசல்படியில் வைத்தேன
இசக்கியம்மன் கோவிலின் அருகே நகராட்சிக் கழிவறையில்
பளீரிடும் மஞ்சள் பிளாஸ்டிக் கோப்பையுடன் வாயெல்லாம்
ஈக்கள் சுற்றும்  வெற்றிலைப் புண்ணாக சிகப்புப் பருத்திச் சேலையில்
சாரம்மா  நிற்கிறாள
அவை அவளது தொடைப் புண்களை நினைவுபடுத்துவதை ஒருதடவை அவளிடம் சொல்லியிருக்கிறேன்
அவள் அதற்கு 'வல்லிதாக' ஒரு களிம்பு கேட்டாள்
ஓடையில் படைவீரர்கள் குறி  போல விறைத்து நிற்கும
சேம்பு இலைகளூடே ஒரு கர்ப்பிணிப் பெண் இறங்கி வயிறு தேய்த்துக்
குளித்துக் கொண்டிருகிறாள்
'இங்கே மருந்துக்கும் வளர்ப்பிற்கும் புறாக்கள்  கிடைக்கும்' பலகை தொங்கும்

வீட்டை நத்தைகள் வேகமாகக் கடக்கின்றன
உள்ளிருந்து புணர்ச்சி உச்சத்தில் ஸ்திரீகள்  எழுப்ப்பும் சப்தங்கள் போ
சில ஒலிகள் கேட்கின்றன
பாதி முடிக்கப்பட்ட யாரும் இல்லாத  வீட்டில் சார்த்தி வைக்கப்பட்டிருந்
ஒரு பழைய சைக்கிள்
நினைத்துக் கொண்டாற்போல மயக்கம் போட்டுக் கீழே சாய்ந்தது


ஆத்மநிலையம் நர்சரி கார்டனில் திங்கட்கிழமை பிரார்த்தனைக் கூட்டத்தில்
தலைகுனிந்து நிற்கும் சிறுமிகள் போல ரோசாப் பதியன்கள் நிற்கின்றன
பெருத்த சப்தத்துடன்
ஒரு அடிப்படைவாதியின் இயந்திரத் துப்பாக்கி போல
சட்டென்று
அவர்கள் மேல் மழை வீழ்கிறது