பூக்களை நேசிப்பதை
மதமாகக் கொண்டார்கள்
பின்
பூச்செடிக்கு நீர் ஊற்றாதவர்களை
முறைத்தார்கள்
பூக்களைத் தொடுபவர்களை
அடித்தார்கள்
பூப்பறிப்பவர்களை
ஆயுதம் கொண்டு தாக்கினார்கள்
பூச்சூடியவர்களின்
தலைகளைக் கொய்தார்கள்
பூக்கள் விற்கும் கடைகளுக்கு
குண்டு வைத்தார்கள்
பூங்கொத்து கொடுக்கும் நாளில்
காதலர்களைக் கழுத்தறுத்தார்கள்
பூச்சூடுபவர்களின்
வாசனைத் திரவையங்கள் பூசிக்கொள்பவர்களின்
பூக்களைப் பற்றி கவிதை எழுதுபவர்களின்
அதைப் படிப்பவர்களின்
நாடுகளின் மேல்
போர் தொடுத்தார்கள்
ஒருபோதும்
பூந்தோட்டம் வைத்திராத அவர்கள்
பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை
அவர்கள்
பூக்களை நேசிப்பதை
மதமாகக் கொண்டார்கள்