கிரிஜா ஹரிஹரன் கவிதைகள்



அன்பு

மிக வேகமாக 
எல்லாம் நடக்கிறது.

ஒரு துளசிச் செடிக்கு
தண்ணீர் விடுவதற்குள்

ஒரு சாலை விபத்து 
நடந்து விடுகிறது.

அவன் விழுகிறான்.
ஹெல்மெட் உடைகிறது.

அப்பாடா எழுந்திருக்கிறான்.

அம்மா.... என் பெண் அழைக்கிறாள்.
ஒரு பூனைக் குட்டி.
அவளிடம் என்னமோ
பேசியிருக்க வேண்டும்.

என் பயத்தை மறைக்க
படாத பாடு
படுகிறேன்.

அய்யோ அதன் நகங்கள்..
அப்பா அதன் அழகு.

பூனையுடன் பேசிவிட்டு 
திரும்பினால்
விழுந்தவனும் இடித்தவனும்
சிரித்து பேசுகிறார்கள்.


ஒரு பெண்ணின் சிரிப்பு

எனக்குள்
திடீரென்று கிளம்பியது
சிரிப்பு ஒன்று.

ஆரவாரமாய் இல்லாமல்
அமைதியாக இல்லாமல்
ஏளனமாய் இல்லாமல்
மெலிதாய் தொடங்கியது
அதன் பயணம்.

நானும் நீயும்
பெண்கள்
என்பதையும்

நம் பெண்மை
ஒவ்வொரு நொடியும்
அளக்கப் படுவதையும்
மறந்து விட்டு

என்னிடம்
விடைபெற்று
இதோ
வந்து கொண்டே இருக்கிறது.

சாலையோரம் கணவனிடம்
வசை வாங்கும் உன்னிடம்
அது வந்ததா என்று தெரியவில்லை.

பார்க்கும் பொறுமை எனக்கு இல்லை,
கிளம்பி விட்டேன்.
ஒரு சகோதரிக்கு
பரிசளித்த நிம்மதியுடன்.