இரை - பா.சரவணன்






பெருங்கூட்டமாய்ப் பறந்துகொண்டிருந்தன
பறவைகள்
அழகாக
வெவ்வேறு வடிவங்களில் வரிசை அமைத்து

வலசையாக இருக்குமோ என
நினைத்தபடி பார்த்திருந்தேன்

என் எதிரில் ஒன்று
வந்து இறங்கியது
பசித்த கண்களுடன்

சிறகுகளை விரித்துத் தன்
உடலின் கனம் காட்டி
என்னை
ஊடுருவிப் பார்த்தது

படுத்தபடி
கைக்கெட்டிய தூரம்வரை
தேடினேன்
மருந்து புட்டிகள் தவிர எதுவும் இல்லை                                          

வலிகளைத் தாங்கிக்கொண்டு
எழமுயற்சித்தேன்
பதட்டப்பட வேண்டாம் என்று
கண்ணமர்த்திய பறவை

உயிரைக் கொத்திக்கொண்டு
பறந்தது